சொல்லித் தீர்க்க இயலுமோ?
எழுதி தான் விளக்க இயலுமோ?
அன்பை வெளிப்படுத்த ஆயிரமாயிரம் வழிமுறைகள் உண்டு.
பசியிலிருப்பவனுக்கு உணவால் அன்பைப் பரிமாறலாம்.
சோகத்தில் இருப்பவனுக்கு ஆறுதலால் அன்பைப் பரிமாறலாம்.
கடனில் இருப்பவனுக்கு பண உதவியினால் அன்பைப் பரிமாறலாம்.
நோயிலிருப்பவனுக்கு மருத்துவத்தால் அன்பைப் பரிமாறலாம்.
கோபத்தினால் யாருக்கேனும் அன்பைப் பரிமாற இயலுமோ?
சற்று வியப்பாகத்தானே இருக்கிறது?
ஆனால் ஒவ்வொருவருடைய வாழ்விலும் தன் அன்பை கோபத்தால் பரிமாற ஒரு ஆள் இருக்கிறார்.
“அப்பா”
தியாகம் என்ற சொல்லை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வழிமுறை தன்னுடைய அப்பா தான்.
உணவையும், தூக்கத்தையும் நமக்காக தியாகம் செய்தவள் அம்மா என்றால், தன்னுடைய ஆசைகளையும் வாழ்வையும் தியாகம் செய்தவர் அப்பா!
ஆசைகளைத் திறக்க சொன்ன புத்தர் தவறிழைத்து விட்டார்.
அப்பாவாக அவர் வாழ்ந்து பார்க்கவில்லை.
வாழ்ந்திருந்தால் துறவறம் பூண்டிருக்கமாட்டார்.
அப்பாவை வர்ணிக்க ஆயிரமல்ல, லட்சமல்ல, கோடியல்ல, ஒரு மகாயுக வார்த்தைகளும் போதாது.
தண்ணீர் அருந்துவது போல, தம் பிள்ளைகளுக்காக பல தியாகங்களை அனுதினமும் செய்பவர் தந்தை.
தான் பெற்ற துயரை தன் பிள்ளை ஒரு போதும் பெற்றுவிடக்கூடாது என்று நினைப்பவரும் அவரே. தான் அடையாத உயரங்களைத் தன் பிள்ளை அடைய வேண்டும் என்று தினமும் போராடுபவர்.
தன்னையே உருக்கி வெளிச்சம் தரும் மெழுகைப்போன்ற தந்தைகளுக்குக்காக இந்த சிறிய சமர்ப்பணம்.