Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

எல்லை தாண்டி, எமனாகி நிற்கும் நுகர்வு.

நுகர்வு…

நம் தேவைக்கு ஏற்றதை வாங்குவது நுகர்வு எனப்படுவது மாறி, வியாபாரிகளின் தந்திரத்தால் நம்மிடையே திணிக்கப்படுகிறது, தற்கால நுகர்வு.

இன்று காலை நடந்த ஒரு சிறிய வியாபாரம்.

அண்ணன் வடை குடுங்கனே என்றேன்

எத்தனை என்று கேட்டார் அண்ணன்.

ஒரு வடை போதும்னே என்றேன்.

தம்பி 3 பத்து ரூபா என்றார்.

இல்லணே, நான் ஒருத்தன்தான். ஒரு வடை போதும். ஏற்கனவே சிம்ரன் மாதிரி மெல்லிசா இருக்கேன். இதுல 3 வடை சாப்பிட்டா வெளங்கிடும் என்று விளக்கம் குடுத்தேன்.

தம்பி அதெல்லாம் ஒரு நாள் சாப்புட்டா ஒண்ணும் ஆகாதுப்பா.

நம்ம கடை வடை சத்துதான்.

நீ என்னவே ரொம்ப ஒண்ணும் குண்டா இல்லயே என்றார்.

இல்லண்ணே.

நமக்கு ஒரு வடை போதும். எவ்வளவு என்றேன்.

4 ரூபா தம்பி, என்றார்.

எண்ணணே 3 பத்து ரூபா தானே? என்று கேட்டேன்.

ஆமா தம்பி. ஒண்ணு 4 ரூபா. 2 வாங்கினா 8 ரூபா.

3 னா பத்து ரூபா என்றார்.

அப்ப 3 வது வடை 2 ரூபா தானா? என்று கேட்டேன்.

ஆமா தம்பி, அப்புடி கூட வச்சுக்கலாம் என்றார்.

அப்ப ஒண்ணு செயங்க. 2 ரூபா தாரேன்.

அந்த 3 வது வடைய மட்டும் குடுங்க என்றேன்.

தெரிஞ்ச ஆளுங்கறதால எண்ணையை ஊத்தல.

தம்பி சும்மா கிண்டல் பண்ணாம வாங்கிக்கோயா.

10 ரூபாக்குலாம் சில்லறை இல்ல.

இந்தா 3 வடை என்று நீட்டினார்.

அண்ணா என்கிட்ட அவ்வளவு பெரிய அமளண்ட் இல்லை என்றேன்.

பரவாலயா. நீ சும்மா சாப்புடு என்று கையில் 3 வடையைத் திணித்து விட்டார்.

இறுதியில் 10 ரூபாயைக் கொடுத்து விட்டு வந்தேன்.

இறுதியில் வியாபாரியே வென்றார். இது சிறு வியாபாரம். நம் அண்ணன்கள். பரவால போகுது..

ஆனால் கவனித்தீர்கள் என்றால் பெரிய வியாபாரங்கள் எல்லாமே இப்படித்தான். அவர்கள் விருப்பத்திற்குத் தான் நாம் வாங்குகிறோம்.

3 சட்டை வாங்கினால் 4 சட்டை இலவசமாம். 7 சட்டைய ஒரே நேரத்துல எடுத்து நாங்க என்ன செய்யப்போறோம் என்ற கேள்வி எழுகிறதா?

சரி.

4 சட்டை இலவசம் தானா? சத்தியமாக இல்லை. 3 சட்டை விலை 7000 த்தை தொட்டு விடும். கிட்டதட்ட அது 7 சட்டை விலை தான்.

அது தெரியாமல் நாம் நம் தேவைக்கு அதிகமாக வாங்குகிறோம்.

இது கெடாத பொருள், துணி, பரவாயில்லை.

உணவுப் பண்டங்களிலுமா?

அரைக்கிலோ பாக்கெட் கேட்டா ஒரு கிலோ பாக்கெட்டுல ஏதாவது இலவசம்னு சொல்லி அதைத் திணிக்கிறார்கள்.

அந்த இலவசமானது, இது வரை நாம் உபயோகிக்காத பொருளாகத்தான் பெரும்பாலும் இருக்கிறது. புதிய பொருளுக்கு நம்மைப் பழக்குகிறார்கள். வியாபார தந்திரம். நுகர்வென்பது நம் தேவைக்கு என்பதை நாம் மறந்து பல காலமாகிறது!!!!

இந்த நுகர்வைப் பற்றிய நகைச்சுவையான பதிவு வெறும் நகைச்சுவைக்காக மட்டுமல்ல. ஓரிரு நாட்களுக்கு முன்பு இந்து தமிழ் நாளிதழில் வெளியான தலையங்கம் இதைப்பற்றியது தான்.

அதாவது இந்தியாவின் நடுத்தர குடும்பங்கள் தன் தேவைக்கு அதிகமாக, சக்திக்கு அதிகமாக நுகர்வதாக ஓர் அறிக்கை. இந்த அறிக்கை போகிற போக்கில் தயாரான அறிக்கை அல்ல.

பல கால தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை.

இந்த அதிகப்படியான நுகர்வு என்பது நடுத்தர மக்களிடையே சேமிக்கும் பழக்கத்தை அறவே குறைத்துள்ளதாகவும், இந்தப் போக்கு நாட்டின் பொருளாதாரத்திற்கு சரியானது அல்ல எனவும் ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது.

பொதுவாக இன்றைய மக்களின் மேம்போக்கான மனநிலை என்னவென்று பார்க்கலாம்.

ஒரு ஆளுக்கு 30 ஆயிரம் சம்பளம் என்றால், அதில் 10 ஆயிரம் குடும்ப செலவுக்கு, வாடகை 10 ஆயிரம் போக மீதி 10 ஆயிரத்தை மாத மாதம் சேமிக்கலாம். ஒரு வருடம் கழித்து கையில் ஒரு லட்ச ரூபாய் இருக்கும், அதில் தனக்குத் தேவையான ஒரு மோட்டார் பைக்கை, 90000 கொடுத்து வாங்கலாம்.

ஆனால் நிலைமை எப்படி இருக்கிறது.

30 ஆயிரம் ரூபாய்க்கு வேலை கிடைத்த உடனேயே 90000 மதிப்புள்ள மோட்டார் பைக்கை 10000 முன்பணம் கட்டி வாங்கி விடுகிறார்.
மீதி பணத்தைத் தவணை முறையில் கட்டுகிறார்.
இப்படி அவர் கட்டும் போது 90000 மதிப்புள்ள பைக்கை கிட்டத்தட்ட 1,25,000 ரூபாய்க்கு வாங்கிய கணக்கு. அதாவது வட்டி 35000.

இது பரவாயில்லை.

வீட்டுக் கடன் வாங்குபவர்களின் வாழ்க்கை பாதி வட்டி கட்டியே முடிந்துவிடும்.

இப்படி முன்பணம், தவணை என்று இருக்க இடம் கிடைக்கும் முன்பே நாற்காலியில் பட்டுக்குஞ்சாரம் நெய்த கதையாய் நம் ஆசையையத் தூண்டி நம்மிடையே பொருட்களைத் திணிக்கிறார்கள்.

உஷாராக இல்லாவிட்டால், நாம் மட்டுமல்ல, நாடும் தான் சீரழியும் என்று சொல்கிறது ரிசர்வ் வங்கி.

விழித்துக் கொள்வோமா?