போதை.
இந்த வார்த்தையைக் கேட்டவுடனே நாம் யூகிக்கும் இணைப்புச் சொற்கள் மது, கஞ்சா, சிகரெட், புகையிலை, இப்போது, கொக்கைன், ஹெராயின், போன்றைவையும் இணைப்பில் சேர்ந்து விட்டன.
ஆம் தற்போதைய தேதியில் இவையும் புழக்கத்தில் இணைந்து விட்டதாகச் செய்தி.
இதிலும் தரம் உண்டு.
கஞ்சா அடிப்பவன் மது போதைக்கு அடிமையானவனை விடக் கேவலமானவன்.
மது குடிக்கும் போதைக் கைகள் கூட, கஞ்சா அடிப்பவர்களைக் கண்டால் , அவன் கஞ்சாக்குடிக்கிப் பய என்று வசைபாடுவார்கள்.
காரணம் மது போதையை விட வீரிமயான கொடூரமான ஒன்று கஞ்சா போதை.
இன்னொரு முக்கியமான விஷயம், மது சட்டரீதியானது, கஞ்சா சட்டத்திற்குப் புறம்பானது.
கஞ்சாவுக்கே இந்த நிலை என்றால் மற்ற போதை வஸ்துகளை உபயோகிப்பவர்களின் நிலை?
அடிப்படையிலேயே கொக்கைன், ஹெராயின் போன்றவற்றை உபயோகிப்பவர்கள் கடுமையான குற்றவாளிகளாகவே நம்மால் அனுமானிக்கப்படுகிறார்கள்.
ஏனென்றால் இந்த வஸ்துகளின் விலையும் மிக அதிகம், அது தரும் போதையின் அளவும் மிகக் கொடுமையானது என பல சினிமாக்களில் கண்டிருக்கிறோம்.
இப்படி போதைக்கு அடிமையானவர்களை வரிசைப்படுத்தித் தரம்பிரித்து வைத்திருக்கிறோம்.
பீர் மட்டும் குடிக்கும் குடிகாரர்கள் ஒரு ரகம்.
சரக்கு அடிப்பவர்கள் அடுத்த ரகம்.
எத்தனை நாட்களுக்கு ஒரு முறை என்பதைக் கணக்கிட்டு, அதில் ஒரு தரம் பிரிப்பு.
கஞ்சா ஆசாமிகள் ஒரு ரகம்.
அதைத்தாண்டிய போதை வஸ்துகள் உபயோகிப்பவர்கள் கேடு கெட்ட ரகம்.
இதில் நாம் சேர்க்க மறந்த ஒரு போதை அடிமைப்பட்டியல் ஒன்று உள்ளது.
அதை சேர்த்தாலும் மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அந்த போதை இயல்பானது, சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
நீங்கள் அந்த வஸ்துவை அனைவரின் முன்னிலையிலும், பொதுஇடங்களிலும் கூட தாராளமாக உபயோகிக்கலாம்.
அந்த போதைக் கிறக்கத்தால் எதிரே இருக்கும் மனிதன் கண்ணுக்குத் தெரியாமல் போனாலும் கூட , அதை உபயோகிப்பதற்குத் தடையேதுமில்லை.
இவ்வளவு ஏன், சொந்த பந்தம், தாய் தந்தை, கணவன் மனைவிக்குள்ளே இருக்கும் அழகான உறவும், உரையாடலும் கூட இந்த போதைப் பழக்கத்தால் நலிவடைந்து போகிறது என்பதை உணர்ந்தும் கூட இந்த போதையைக் கைவிடப் பலரும் தயாராக இல்லை.
இப்போது அது என்னவென்று சொன்னாலும், ஏற்றுக்கொள்ளும் மனமிருக்காது நமக்கு.
அது வேறொன்றுமில்லை.
அலைபேசி உபயோகம் தான்.
மது போதையில் இருந்தாலும், வார்த்தை தடுமாறினாலும், அருகிலருக்கும் நண்பர்களோடு உரையாடிய அந்த போதையை விட, எதிரெதிரே இருக்கும் மனிதர்களின் முகம் பார்க்காமல், குனிந்த தலை நிமிராமல் அலைபேசியில் விழுந்து கிடக்கும் போதை அபாயமானது தான்.
இதைச்சொன்னாலும் யாரும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். இதை எதிர்த்துப் பேச ஒரு பெரிய கூட்டமும் வரும். ஏனென்றால் இந்த போதைக்கு அடிமையான கூட்டம் மிக மிக அதிகம்.
இதைப் பேசும் நீ யோக்கியமா என்று, எடுத்து உரைக்கும் ஆட்களின் மீது
தான் கோபம் திரும்பும்.
“ஆளப்பாரு, போன் யூஸ்பன்றது தப்பாம்ல.
அத வச்சிதான் பொழப்பே ஓடுது“ என்று சொல்லவும் ஒரு கூட்டம் தயாராகக் காத்திருக்கிறது.
இங்கு அலைபேசியின் உதவியால் பல குடும்பங்களும், இளைஞர்களும் சிறு சிறு வேலை வாய்ப்புகளை உருவாக்கிப் பிழைத்துக்கொள்வது ஒரு புறமிருந்தாலும், 100 ல் 80 சதவீத மக்களும் அலைபேசியின் அடிமைகளாகி விட்டனர் என்பதே உண்மை.
மது மற்றும் மற்ற போதைப் பொருட்களால் உடலுக்குத் தீங்கு வரும்.
ஆனால் அலைபேசியினால் என்ன ஆகப் போகிறது?
உடலுக்கு என்ன தீங்கு நேர்ந்து விடப்போகிறது?
என்ற மேம்போக்கான சிந்தனையுடன் இதைத்தொடரந்து நம் விருப்பத்திற்கு உபயோகிக்கிறோம்.
விஞ்ஞான வளர்ச்சியை அனுபவிப்பது என்பது ஒரு புறம் இருந்தாலும், அடிமை ஆவது, அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்தும் கூடப் பார்க்காமல் இருப்பது என்பதெல்லாம் போதை அல்லாமல் வேறென்ன?
அலைபேசி உபயோகிப்பது அறவே தவறு என்பதல்ல கட்டுரையின் வாதம். ஆனால் எதிரே வரும் ஆள் கூடத் தெரியாமலும், ரீல்ஸ் மோகத்தால், ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதும், குழந்தைகள் அலைபேசியைத் தொடர்ச்சியாக உபயோகித்து மூளைக் கோளாறு அடைவதையும் தவிர்க்கலாமே?