Categories
கருத்து

சமுதாயம் நம் கையில்

சினிமாவை வெறும் சினிமாவாக பார்க்கும் மனநிலை எப்போது வரும் என்பது புரியவில்லை.

ஒரு சைக்கோ கில்லர் திரைப்படத்தை பார்த்து சைக்கோவாக மாறாத இளைஞர்கள், ஒரு நேர்மையான காவல் அதிகாரி படம் பார்த்து காவல் அதிகாரியாக மாறாத இளைஞர்கள், கதாநாயகன் புகை பிடிப்பதை மட்டும் உடனடியாகப் பின் தொடர்கிறார்கள்?

என்ன காரணம்?

எளிதாக கிடைக்கிறது. இதில் குற்றம் சினிமாக்காரன் மீது மட்டுமா?

பள்ளி சீருடையுடன் பாருக்குள் கூத்தடிக்கும் மாணவர்கள், பாருக்குள் செல்ல வழி கொடுத்தது சினிமா மட்டும் தானா?

அப்படி என்றால், இந்தியன் படம் வந்த உடனே லஞ்சம் ஒழிந்து விட்டதா? சரி போகட்டும் ரமணா வந்த பிறகாவது ஒழிந்து விட்டதா?

வசூல் ராஜா வந்த பிறகு மருத்துவமனைகள் சீரானதா?

பரியேறும் பெருமாள் வந்த பிறகு சாதி ஒற்றுமைகள் மேலோங்கியதோ?

இதெல்லாம் நிகழாது. ஏனென்றால் இதெல்லாம் சினிமாவில் தான் சாத்தியம் என்பதை உணர்ந்திருக்கிறோம்.

நமக்கு ஒரு கதாநாயகன் வேணும்னா முட்டு கொடுப்பதும் வேண்டாம்னா கட்டைய கொடுப்பதும் வழக்கமாகி விட்டது.

சிகரெட், பீடி விற்பனை, மது விற்பனையை ஒழுங்குபடுத்தி, உண்மையிலேயே ஒரு 21 வயது பூர்த்தி அடையாத இளைஞர் கையில் அது கிடைக்காமல் செய்து விட்டால் சமுதாயம் சீரழியுமா?

உண்மையான வேர்களை அழிக்காமல் தனக்குத் தேவையில்லாத கொப்புகளை பிடித்து ஆட்டுவதே நமது வேலை ஆகி விட்டது.

அதாவது நம் மீதான உண்மையான பழியை ஏற்றுக் கொள்ள நமக்கு மனமில்லை. அதை யார் மீதாவது திணிக்க வேண்டும். அந்த திணிப்பு தான் சினிமாவின் மீதான வன்மம்.

நல்ல படிப்பை கொடுக்கும் பட்சத்தில், குழந்தைகளும் சினிமாவை வெறும் சினிமாவாக பார்க்கக் கற்றுக் கொள்வார்கள். எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பதை அவர்களே உணர்வார்கள்!

ஒரு சமுதாயத்தை இளவயதிலிருந்தே கட்டமைந்த சமுதாயமாக வளர்த்தெடுக்க வேண்டியது சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவரின் கடமை.
அதை சரிவர செய்யாமல், நாம் ஏதாவது ஒரு வழியில் தவறவிட்டுப் பிறகு சினிமா வந்து கெடுத்தது, இணையம் வந்து கெடுத்தது என்று பழியைத் தூக்கி எதன் மீதாவது போடுவதில் அர்த்தமே இல்லை.

ஒரு கட்டமைந்த சமுதாயம் என்பது பொழுதுபோக்கு, நல்லது கெட்டது, ஏற்றுக்கொள்ளக்கூடியது ஏற்றுக்கொள்ள இயலாதது எனப் பலவற்றையும் உள்ளடக்கி தான் இருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் வளரும் தலைமுறை இடையே எது தேவை, எது தேவையில்லை, எதை எந்த அளவிற்கு உபயோகிக்கலாம் என்று பழக்குவது முக்கியம்.

இது சினிமாவிற்கு மட்டுமானதல்ல. இணையம் துவங்கி கைபேசி வரை எந்த விதத்தில் எவ்வளவு உபயோகிக்கலாம் என்ன பயன், என்ன எதிர்விளைவு என்பதை வளரும் தலைமுறைக்கு பழக்க வேண்டியது நமது கடமை. இனி அவர்களிடமிருந்து இதை பறிக்க இயலாது. ஆனால் முறையாகப் பயிற்றுவிக்கலாம்.
வளரும் தலைமுறை ஒழுக்கமாக வளர்வதும் சீரழிவதும் நமது கைகளில் தான் உள்ளது.