Categories
கருத்து

பறவைகளுக்கு நீர் வைக்கலாமே?

மனிதா நான் பறவை.

என்ன பறவை என்று கேட்கிறாயா?

என் பெயர் சொன்னால் மட்டும் கண்டுபிடித்து விடுவாயா?

காகம், குருவி, புறா, கழுகு போன்ற சில பறவைகள் தான் உனக்குப் பரிச்சயம்.

ஏன் அது கூடத் தெரியாமல் சிலர் இருக்கலாம்.

எங்களுள் ஆயிரக்கணக்கான இனம் உண்டு.

எங்கோ மறைந்து விட்டன என் இனங்கள்.

ஆமாம் நாங்களும் இங்கே இந்த பொதுப்படையான பூமியிலே நிம்மதியாகப் பறந்து கொண்டும் வாழ்ந்து கொண்டும் தான் இருந்தோம்.

ஏதேதோ மாற்றங்கள் எங்கள் இனங்களை வதைத்து விட்டது. காடுகளும், மரங்களும் அழிக்கப்பட்டன.

நாங்கள் எங்கே கூடு கட்டுவது தெரியவில்லை.

நீங்கள் வீடு கட்டுவதற்கு நாங்கள் வீடு கட்டும் மரங்களை அழித்தீர்கள். கத்தி, கதறிப் பார்த்தோம்.

யாருக்கும் எங்கள் கதறல் கேட்கவில்லை. இயந்திர சத்தத்திலும், இரைச்சலிலும் நாங்கள் கதறுவது எங்கே கேட்கும்?

வயல்வெளிகளில் நாங்கள் வந்து உணவை எடுத்து விடக் கூடாது என்று மின் வேலி முதல் எத்தனை சாதனம்? நாங்கள் அவ்வளவு பலசாலிகளா? இல்லை அப்படி விரட்டும் அளவிற்கு விரோதிகளா?

எங்கள் இடங்களை நீங்கள் அழித்த போது நாங்கள் விட்டுக் கொடுத்தோமே? உங்களுடன் மோதும் பலம் இல்லை எங்களுக்கு.

உங்கள் உரையாடல்களுக்காக உயரமான கம்பங்கள் நட்டு வைத்தீர்கள். அதிலாவது கூடுகள் கட்டலாம் என்றால் அதையும் களைத்து விடுகிறீர்கள்.

நாங்கள் என்ன பாவம் செய்தோம். உங்களை விட பலம் குறைந்து பிறந்தது எங்கள் தவறா?

அந்த கம்பங்களில் இருந்து வரும் மின் அதிர்வலைகள் எங்கள் இனங்களை அழிக்கிறது!

சிட்டுக்குருவி என்ற இனம் கிட்டதட்ட அழிந்தே விட்டது மனிதா. என்று யார் சொல்வது தெரியவில்லை.

அப்படி பிற இனங்கள் அழியும் அளவிற்கு அந்த உரையாடல்கள் முக்கியமானது தானோ?

ஆனால் உலகம் உனக்கு மட்டுமல்ல.

எல்லா உயிரினங்களும் சமமாக வாழவே படைக்கப்பட்டது.

அதையெல்லாம் இனி பேசி மாறாது என்பதைப்போல மாறிவிட்டாயே மனிதா.

முன்னாளில் நாங்கள் நீர் அருந்த ஊரில் குளம் குட்டைகள் என்று எத்தனையோ நீர் நிலைகள் இருந்தது.

இப்போது அதிலும் கட்டிடம் கட்டி ஆக்கிரமித்து விட்டாயே?

நீர் என்பது மிக அத்தியாவசியமான ஒன்று என்பது உனக்கு மட்டுமா?

எங்களுக்கும் தானே?

உன்னைப் போல பூமியை உறிஞ்சவும், கடல்நீரை குடிநீராக மாற்றவும் என்னிடம் அறிவு இல்லை. இருந்திருந்தால் உன்னிடம் ஏன் உரையாடப் போகிறேன் நான்.

நீர்நிலைகளை அழித்து விட்ட பாவத்தை சரிசெய்ய குறைந்தபட்சம் எங்களுக்காக மாடிகளில் தண்ணீர் வைக்கலாமே!

பறவைகளுக்கு நீர் வைப்பதால் நமக்கென்ன பிரயோஜனம் என்று நினைக்காதே.

உலகில் நாங்களும் வாழ்ந்தால் தான் சமநிலை நிலவும், சமநிலை இருக்கும் வரை தான் பூமி நிலைக்கும்.

தேனீக்கள் அழிந்துவிட்டால் அடுத்த 4 வருடத்தில் மனித இனம் அழிந்து விடும் என்ற கோட்பாடு தெரியும்தானே?

மனிதா, நீ நிம்மதியாக வாழ நாங்களும் வாழ வேண்டும்.

இப்படிக்கு – அழிந்து கொண்டிருக்கும் பறவை.