இனிய துவக்கம், முதல் வார்த்தை நல்ல வார்த்தையாக அமைய வேண்டுமென்பதற்கான இணைப்பு வாக்கியம் தான் அந்த இனிய துவக்கம்.
கெட்டதுலயும் ஒரு நல்லது நடந்திருக்கு என்று சில நேரம் நாம் ஏதாவது ஒரு பாதிப்பைச் சந்திக்கும் போது சொல்வதுண்டு.
கெட்டதுல என்ன பெரிய நல்லது நடந்துடப் போகுது?
நம்ம உறவுக்காரங்கள்ல யாராவது ஒருவர் தவறும்பட்சத்தில், நீண்ட நாள் பேசாமலிருந்த மற்றொரு உறவுக்காரர் வந்து பழக நேரிடலாம். இது மாதிரியான அனுபவங்கள் இங்கு பலருக்கும் இருக்க வாய்ப்புள்ளது.
இதே சூழ்நிலைக்கு திருக்குறள் ஒரு விளக்கம் தருகிறது. அந்தக் குறள் இதுதான்
கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
அதாவது கேடு வரும் போது ஒரு நல்ல விஷயம் உண்டு. அது என்னவென்றால் ஒருவனுக்குக் கேடு வரும்போது அவனது நண்பர்கள் அவனை எந்த அளவுக்குப் பாதுகாக்கிறார்கள் என்பதை அவன் அறிந்து கொள்ளலாம் என்கிறார்.
நீட்டி அளப்போர் கோல் என்றால், இந்தக் கேடு தான் அவனது நண்பர்களின் இயல்புகளை நீட்டி அளக்கும் கோல் என்று அறியப்படுகிறது.
திருக்குறள் கிமு 31 அதாவது 2056 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருக்கிறது.
திருக்குறளில் மட்டுமல்ல, மகாபாரதத்தில் துரியோதனனுக்குக் கர்ணன் போல, குசேலனுக்குக் கண்ணன் போல, கம்ப இராமாயணத்தில் ராமனுக்கு அனுமன் போல நண்பர்களின் செய்கை அளப்பரியது.
ஆனால் தற்போதைய காலகட்டத்தில், இறைவா எனது எதிரிகளை நான் சமாளித்துக் கொள்கிறேன். எனது நண்பர்களை மட்டும் நீ பார்த்துக் கொள் என்று சொல்லும் அளவிற்குக் காலம் கெட்டுக்கிடக்கிறது.
மக்களையும் குற்றம் சொல்ல இயலாது. அவர்களுக்குத் தேவை என்பதால் பழகுகிறார்கள், பிறகு தனது தேவை முடிந்த பின் சுயரூபத்தை அடைகிறார்கள். அது அவர்களின் இயல்பு.
நம்மிடம் பழகுபவர்களில் யார் நட்போடு பழகுகிறார், யார் தேவைக்குப் பழகுகிறார் என்ற பிரித்துணர்தல் இல்லாமல் எல்லாரையும் பொதுவாக நம்பி மோசம் போவது நமது குற்றம் தான்.
பாலையும் தண்ணீரையும் பிரித்துணரத்தெரிந்த அன்னப் பறவை போல, மனிதர்களை எடைபோடப் பழகி விட்டால், நண்பன் யார் என்று உணர்ந்து விடலாம்.
பொதுவாக விரோதிகளைக் கண்டறிவது மிக எளிது. நல்ல நண்பர்களைக் கண்டறிவது தான் கடினம்.
அப்படி ஒருவரைத் தேடித் நெரிந்து கொண்டால் வாழ்க்கையே சுகம் தான்.
குறைந்தபட்சம் துரோகிகளைக் களையும் வித்தை தெரிந்தாலே நித்தம் சுகம் தான்.