பள்ளிப் பருவம் அனைவருக்கும் அலாதியான ஒரு அனுபவம்தான்.
ஒவ்வொரு மனிதனிடமும் நாம் இந்தக் கேள்வியைக் கேட்டோமானால், பெரும்பாலானோர் சொல்லக் கூடிய பதில் இதுவாகத்தான் இருக்கும்.
கேள்வி: உங்கள் வாழ்வில் எந்தப்பகுதியை மீண்டும் பெற விரும்புகிறீர்கள்?
பதில்: பள்ளிப் பருவம்.
காரணம் அதன் அனுபவமும், இன்பமும், அது கற்றுக் கொடுத்த பாடமும், நம் வாழ்வு சிறக்கப் பரிசாக வந்த நட்புகளும், அன்பான ஆசிரியர்களும் என பள்ளிப்பருவ காலத்தை விரும்புவதற்கென மிகப்பெரிய பட்டியலே இருக்கிறது.
அதிலும் குறிப்பாக தொடக்கப் பள்ளிகள் அனைவருக்குமே சிறப்பான அனுபவம் தான்.
வேண்டா வெறுப்பாக பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு ஆர்ப்பாட்டம் செய்து, அழுது அடம்பிடித்து பள்ளியில் அமரவைக்கப்பட்டு ஏதோ கூண்டில் அடைபட்ட கிளிகளைப் போல உணர்ந்து பிறகு, இது கூண்டல்ல, இதுதான் பறப்பதற்கு நாம் எடுத்து வைக்கும் முதல் அடி என்பதை உணரும் தருணம் அழகானது.
எனக்கு இன்றும் கூட நினைவிருக்கிறது, எனது முதல் நாள் பள்ளி அனுபவம். எனது அம்மாவின் கையிலிருந்து என்னை வலுக்கட்டாயமாக இழுத்து பள்ளியினுள்ளே அடைக்க முயன்ற சுப்பு மிஸ்ன் சிகை அலங்காரம் என்னால் சிதைவுற்றது.
அந்தநாள் முழுக்க எனது அழுகை ஓயவில்லை,
மாலை எனது அப்பா சைக்கிளோடு வந்து என்னை அழைத்துக் கொண்ட வரை.
நேற்று அதுபோலொரு சிறிய அனுபவம். எனது சகோதரியின் மகள் பயிலும் நர்சரி பள்ளியில் சென்று அவளைப் பாதியில் அழைத்து வருவதற்காகச் சென்றிருந்தோம். முதலில் எனது மாமா மட்டும் உள்ளே சென்றார். நான் பள்ளி காம்பவுண்டுக்கு வெளியே தான் நின்றிருந்தேன். ஆனால் அந்த சத்தம் என்னை உள்ளே அழைத்தது.
உள்ளே சென்று கிட்டத்தட்ட ஒரு பதினைந்து நிமிடம், இந்த உலகை விட்டு அனைத்தையும் மறந்து நிம்மதியாக இருந்தேன்.
பெரும் இரைச்சல் தான். ஆனால் அந்த இரைச்சல் நிம்மதி தரும் இறைச்சல். உலகில் நம்மதி தரும் இரைச்சல் என்பது நர்சரி பள்ளிகளில் மட்டுமே கிடைக்கும் அரிதான ஒன்று.
சமீபமாக பல தொழிற்சலைகளைகளுக்குள் பயணித்த அனுபவம் இருக்கிறது. அந்த இரைச்சல் ஆக்கத்திற்கானது என்றாலும், அது தலைவலி உருவாக்கக் கூடியது. ஆனால் தொடக்கப்பள்ளி இரைச்சல், இனிமையானது. அதை அனுபவிக்கவும் ஒரு கொடுப்பனை இருக்க வேண்டும் போல.
நாங்கள் உள்ளே நுழைந்த தருணம், வரும் ஆண்டு விழாவுக்கான நடன முன்னோட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
அங்கே ஒரு பாடல் ஒலிக்கிறது, அதற்காக குழந்தைகள் வரிசையாக ஆடும் போது, வெளியே இருந்த குழந்தைகள் அதைப்பார்த்து அதேபோல ஆட்டம் ஆட, அந்த ஸ்கூல் மிஸ், அடக்கழுதைகளா, உங்க பாட்டுக்கு ஆடச் சொன்னா ஒழுங்கா ஆடாம இந்தப்பாட்டுக்கு ஆடுதீகளா என்று கடிந்து கொண்டதும், கப் சிப் என்று அடங்கி அமர்ந்த குழந்தைகளைக் கண்டு மனதில் ஓர் பேரானந்தம்.
பிரின்ஸிபல் சார்ட்ட பர்மிஷன் கேட்டு கூட்டிட்டுப் போங்க என்று சொன்னதும், அடேங்கப்பா, இது வேறயா என்று தோன்றியது.
எனது அக்கா மகளின் முகத்தில் பேராவல், மிஸ் விடுவாங்களோ, பிரன்ஸிபல் சார் விடுவாங்களோ என்று.
ஆம் குழந்தைப் பருவத்தில் நாம் பார்த்து பயந்த இரண்டு ஆட்கள் மிஸ் மற்றும் பிரின்ஸிபல் தானே.
பிறகு அவளுக்கு வெளியே போக அனுமதி கிடைத்தவுடன் பெருமகிழ்ச்சி.
பள்ளியை விட்டு எப்போது வெளியேறுவோம் என்ற ஆவல், அவளுக்கு. இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருக்க முடியாதா என்ற ஆசை எனக்கு.
இருக்கும் போது தான் அருமை தெரியாதே!
நர்சரி பள்ளயின் இரைச்சல் இன்னும் எனது காதுகளினுள்ளே இனிமையாக.
நீங்கா நினைவுகளுடன்.