Categories
நினைவுகள்

கிடைக்குமா ரிவர்ஸ் பட்டன் – நீங்கா நினைவுகள்

சொந்த ஊர் எப்போதும் சொர்க்கம் தான்.
ஆனால் சில யதார்த்தம் கசக்கிறது.

மருந்து போலத்தான் என்றாலும் கசப்பு கசப்பு தான்.

ஓடி, ஆடி புழுதியில் உருண்ட அதே தெருக்கள்…

புழுதி இல்லை இப்போது, சிமெண்ட் சாலைகள்.

மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தில் ஏதோ ஒரு வசதியான வீட்டுத் திண்ணையில் தெருவிலுள்ள மொத்த கும்பலும் விளையாடிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருப்போம்.

மின்சாரம் வந்து தெரு விளக்குகள் ஒளிர்ந்ததும் ஊரைப் பிளக்கும் கூப்பாடு போடுவோம்.

கரண்டு வந்திருச்சே, கரண்டு வந்திருச்சே என்று ராகத்தோடு இரைச்சலிடுவோம்.

என்னவோ என்ன மாயமோ தெரியாது. மாலைப் பொழுதுகள் அவ்வளவு வேகமாய்க் கழிந்தது.

விளையாடலாமா? அல்லது அப்பாவுடன் கடைக்குப் போகலாமா என்ற ஒரே கேள்வி மட்டுமே வாழ்க்கையில் எனக்கான பெரிய கேள்வி அந்த வயதில்.

விளையாடாமல் விட்டால் மறுநாள் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளாமல் அலைக்கழிப்பார்கள். “நீ உங்கப்பா கூட கடைக்குப் போப்பா, எங்க கூடலாம் ஏன் வெளாட வர?” என்று வஞ்சகம் பேசுவார்கள்.

அது ஒரு பக்கமிருந்தாலும் அப்பாவுடன் கடைக்குப் போனால் பக்கடா வாங்கலாம், பாதுஷா வாங்கலாம் என்ற ஆசை.

இதுவே எனக்கு அந்த வயதில் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினை.

இன்று நம் பம்பரம் ஆக்கர் வாங்கி விட்டது. நாளை அவன் பம்பரத்தை உடைக்காமல் விடுவதில்லை, என்ற கோபம் தான் பெரிய கோபம்.

சனி மற்றும், ஞாயிற்றுக்கிழமைகள் வாழ்வின் பேரின்பம். திங்கள்கிழமை பெருந்துயர்.

வெள்ளிக்கிழமை சேர்ந்து லீவு வந்து விட்டால்?? -அடப் போங்கப்பா எனக்கு என்னா சொல்றதுனே தெரியல.

அட உண்மையிலேயே அந்த பேரின்பத்தை சொல்லத் தெரியலங்க!!!

ஊர்வழிப் போய் வந்தால் பயணச்சீட்டு மட்டும் அழுக்குப் படாமல் வீடு வரும். அதை வைத்துக் கொண்டு காட்டும் பவுசு இருக்கிறதே? அடேயப்பா..

BMW car வாங்கினாலும் ஈடாகாது.

வாரம் ஒன்றோ இரண்டோ சினிமா!!

ஒளியும் ஒலியும்…

வெள்ளிக்கிழமை இரவுப் படம்…

ஞாயிற்றுக்கிழமை படம்.. சக்திமான்.. கேப்டன் வியூம்.. ஜெய் ஹனுமான்..

சேட்டைகள், சண்டைகள், பாடம், படிப்பு, டியூஷன், விளையாட்டு, வேடிக்கை, பாசம், நட்பு…

குறிப்பாக குழந்தைத்தனம்…

பெற்றவரின் உடல் கதகதப்பை உணர்ந்து தூங்கும் அந்த தூக்கம்…

இரவு 11 மணிக்கெல்லாம் தூங்கி எழுந்து ஒருமுறை உச்சா போயிருப்போம்!

இதில் எதுவும் இனி திரும்ப வரப்போவதில்லை தான்..

நினைவுகள் வரம்… தீராத வரம்.. அல்லது சாபமா தெரியவில்லை!

முதல்வன் படத்தில் வரும் வசனம் “tape recorder மாதிரி வாழ்க்கையிலேயும் ஒரு reverse பட்டன் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் இல்ல?”

குழந்தையாய் மாறவே அனைவருக்கும் ஆசை. தீராத, நிறைவேறாத ஆசை.

இப்போது காதில் விழும் அன்றாட வசனம், வசவு “எப்பத்தான் தூங்குவ? மொபைல் போன நோண்டிக்கிட்டே இருக்க?”

சிறுவயதில் விழுந்த வசனம் “பாரு, புழுதியில கழுதை மாதிரி ஆடிட்டு வந்துட்டு சரியா சாப்பிடாம தூங்துறத?”

மழலைச் சிரிப்பும், அழுகையும், அன்பும் அரணவணைப்பும், அந்த பழைய வாழ்க்கையும், இனி ஒரு முறை நமக்குத் திரும்பக் கிடைக்காது.

பழைய வாழ்க்கை திரும்பாது என்ற உண்மை சற்றே கசக்கத்தான் செய்கிறது!!

நீங்கா நினைவுகளின் ஆனந்தத்தோடு.