குழம்ப வேண்டாம். நிறுத்துமிடமில்லாமல் இல்லாமல் கார் வாங்கக் கூடாது என்ற அரசாங்க நடவடிக்கை பற்றிய சிந்தனை.
சமீபத்திய பகட்டுக் கட்டுரையில் நாம் பேசிய பல விஷயங்களைப் போல இன்னொரு முக்கியமான விஷயமும் உண்டு. கார் வாங்குறீங்களே?
அத நிறுத்த இடமிருக்கா?
இந்தக் கேள்வியை அது வரை யாருமே கேட்டதில்லை.
இது வரை மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் இவ்வளவு தான்.
உங்களுக்கு சிலர் எவளோ, பான் கார்டு , ஆதார் கார்டு கொடுங்க, 0 டவுன் பேமண்ட்ல அடுத்த மாசம் கார் புக் பண்ணிடுங்க.
லோன் கொடுக்க நாங்க இருக்கோம்
உங்க ஒய்ப்பும் வேலைக்குப் போறாங்களா? எது நீங்க போற வழியில தான் அவங்க ஆபீஸா..அதனால உங்க கார்ல ட்ராப் பண்றீங்களா?
அது மேடமோட இன்டிவிஜுவாலிட்டிய பாதிக்குமே சார்.
உங்கள டிப்பன்ட் பண்ணியே இருக்கிற மாதிரி பீல் ஆகும்.
சிங்கப்பெண்கள் இப்ப ராக்கெட் ஏ விடராங்க..
தனியா கார் ஓட்ட மாட்டாங்களா?
லோயர் என்டு ஆட்டோமாட்டிக் கார் ஒண்ணு வாங்கிக்கோங்க மேடம்..
நாங்களே ஊஃபர் வச்ச ஸ்பீக்கர் ஃபரீயா செட் பண்ணி சிங்கப்பெண்ணே பாட்டும் ரெக்கார்டு பண்ணி கொடுக்குறோம்.
இந்த மாதிரி கலர் கலரா பேசி நமக்கு வேணுமா, வேணாமானு நம்மள யோசிக்க விடாம நம்மகிட்ட லோன் போட்டு கார்கள வித்துடறாங்க..
அப்புறம் பார்க்கிங் படத்துல வர மாதிரி கார்கள நிப்பாட்டற சண்டையில அமைதி நிறைந்த அப்பார்ட்மன்ட் மீன் மார்க்கெட் மாதிரி ஆயிடுது.
இது தவிர போக்குவரத்து மிகுந்த சாலைகளிலும் கார்கள் ஆங்காங்கே ஓரம்கட்டி நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டு மேம்பாலத்திற்கு மேல் மேம்பாலங்கள் கட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
சமீபத்திய பட்ஜெட்டில் திட்டமிடப்பட்ட வேளச்சேரி முதல் குருநானக் கல்லூரி வரையிலான மேம்பாலம் அங்கு வருவதற்குக் காரணம், வேளச்சேரி 100 அடி சாலைகளின் கடைகளுக்கு வந்து நிறுத்தப்படும் கார்கள் உருவாக்கும் நெரிசல் மட்டுமே!
இப்படி கார்கள், தனி நபர் வாகனங்களின் அபிரிமிதமான அதிகரிப்பை இதுவரை கண்டுகொள்ளாத அரசாங்கம் முதல் முறையாக கேள்வி எழுப்பத் துவங்கியுள்ளது மனதிற்கு ஆறுதலாக உள்ளது.
சார், கார் வாங்குறீங்களே, அத நிறுத்த இடமிருக்கா?
இந்த நியாயமான அறிவுப்பூர்வமான கேள்வியை இப்போது தான் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாகக் கேட்கத் துவங்கியுள்ளது.
இதிலும் பித்தலாட்ட வேலைகள் நடைபெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லாவிட்டாலும், மனசாட்சிக்குக் கட்டுப்படும் சிலரால் இந்த சமூகத்திற்கு நல்லது நடக்க வாய்ப்புள்ளது.
அலுவலகங்களுக்கு, வெளிநாடுகளைப் போல, கார்பூல் என்ற முறையில் மூவரோ, நால்வரோ ஒரு வாகனத்தில் பங்கிட்டுப் பயணித்தல், பொதுப் போக்குவரத்தை உபயோகித்தல் போன்ற முறைகளின் மூலமாகவும், தனிநபர் வாகனப் பயன்பாடுகளைக் கட்டுப்படுத்துவது நமது வருங்கால சந்ததிக்கு நல்லது.
இந்த விஷயத்தில் ஒரு இருசக்கர வாகனத்தில் ஒருவர் பயணிப்பது அனாவசியம் என்று பேசுவதற்கு எனக்கே தகுதி இல்லை.
ஏனென்றால் நானும் எனது அலுவலகத்திற்கு தனிநபராகத்தான் இருசக்கர வாகனத்தை இயக்கிச் செல்கிறேன்.
இருசக்கர வாகனத்தில் ஒருவர் பயணிப்பதைத் தவிர்க்கும் காலமும் கூடிய விரைவில் வரும்.
இப்போதைக்ககு குறைந்தபட்சம் நான்கு பேர் பயணிக்கக் கூடிய கார்களில் ஒருவர் பயணிப்பதைத் தவிர்க்கும் நடைமுறையையும் முன்னெடுத்தால், போக்குவரத்து நெரிசலையும், சுற்றுச் சூழல் மாசையும் கட்டுப்படுத்தலாம்.
மேலும் மழை இடி அறிவிப்பு வந்த உடனே தமது கார்களை வரிசை கட்டி மேம்பாலங்களில் நிறுத்தும் போது, போட்டியும் நெரிசலும் குறைய வேண்டுமென்றால், இனி அவசியமானவர்கள் மட்டுமே கார்கள் வாங்கினால் நல்லது..
கார் வைத்திருப்பவர்களின் மீதான வன்மமாகக் கூட இந்தக் கட்டுரை வெளிப்படலாம்.
ஆனால் என்னிடமும் தவறுதலாக கார் இருப்பதால் இது வன்மமாக அல்ல, சமூக அக்கறையாகவே வெளிப்பட்டிருக்கிறது என்பதை நான் மனதார உணர்த்துகிறேன்.
நுகர்வு என்பது தேவைக்கு அதிகமாகப் போனால், தனிநபருக்கு மட்டுமல்ல,ஒரு சமுதாயத்திற்கே கூட தீங்கு தான்.
ஆகவே அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் வரை வரையற்ற நுகர்வு தொடரும் என்ற பழக்கத்தைக் கைவிட்டால் , நமக்கும் நமது சந்ததிக்கும் , நமது சமுதாயத்திற்கும் நல்லது என்ற விண்ணப்பத்தோடு..