Categories
நினைவுகள்

ஒலி வழி இன்பம்- ரேடியோ 📻 நினைவுகள்

பாடல்கள்.

பெரும்பாலான மனிதர்களின் ஆறுதல், இன்பம், துக்க மருந்து, சோகம் தீர்க்கும் நிவாரணி என சர்வரோகிணியாக இருப்பது/ இருந்தது பாடல்கள்.

இன்றும் பலரும் பாடல்களை மருந்து போல, கிரியா ஊட்டியாக, சோக நிவாரணியாக கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

வளரும், வருங்கால சந்ததி தான், அதிலிருந்து சற்று விலகிப் போவதாகத் தெரிகிறது. அதாவது பாடல்களை ஒலி வடிவில் கேட்பது ஒரு சுகம். அது ஒரு ரகம். ஆனால் இப்போது ஒரு பாடல் வெளியாகும் போதே அது யூடியூப் பார்வைகளைக் கணக்கில் கொண்டு தான் வெளியாகிறது என்பதால், ஒலி, ஒளி வடிவமாகவே வந்து விடுகிறது.

அதனால், ஒலி வடிவிலான பாடல் கேட்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது.

ஆனால் வாசித்தல் போல மோசமல்ல. இது இன்னும் உயிர்ப்போடு தான் உள்ளது.

சிறிது காலத்திற்கு முன்பு தொலைக்காட்சியின் ஆதிக்கம் அதிகம் இல்லாத வரை வீடுகளின், உணவகங்களின், தொழிற்சாலைகளின் பொழுதுபோக்குக் காரணியும், கிரியா ஊக்கியும் பாடல்கள் தான். அதுவும் வானொலி தான்.

வானொலி மட்டுமே இருந்த காலத்தில் கர கரவென அந்த பொத்தானைத் திருகி சரிசெய்து ஒரு பாடலை முழுதாகக் கேட்டு விட்டாலே அந்த நாள் கொண்டாட்டம் தான்.

எனக்கு விவரமறிய எங்கள் வீட்டிலிருந்த பிலிப்ஸ் வானொலிப் பெட்டி 📻 தான் காலை பொழுது போக்கு. ஏனென்றால் காலை வேளையில் தொலைக்காட்சி யில் வெறும் புள்ளி தான் வரும்.

எனது சிறு வயது காலைப் பொழுது “ஆல் இந்தியா ரேடியோ செய்திகள் வாசிப்பது…” என்பதைக் கேட்டு தான் துவங்கும்.

அதைத் தொடர்ந்து ஒலிக்கும் இந்த நாள் இனிய நாள் தென்கச்சி கோ சாமிநாதன் கதை விவரமறியாத எனக்கும் ஈர்ப்பை ஏற்படுத்தியது.

வாகை சூடவா படத்தில் விமலிடம் இனியா வந்து நான் பேச நினைப்பதெல்லாம் பாட்டு போட்டா என்னிய கூப்படுங்க சார்னு சொல்வது போல, அந்தக்காலத்தில் வானொலி இருந்த போது ஒரு சில மனதிற்கு இதமான பாடல்களை என்றோ ஒரு நாள் அதிசயமாகத்தான் கேட்க முடியும்.

அப்படி அரிதாக இருந்ததாலோ என்னவோ, பாடல்களின் மீது மக்களுக்கு அவ்வளவு அன்பும் மாரியாதையும் உண்டு.

வானொலி சிறிது முன்னேற்றமடைந்து AM ல் இருந்து FM ஆக அதாவது வீச்சு பண்பலையிலிருந்து அதிர்வெண் பண்பலையாக தரம் உயர்ந்த பிறகு தேவையற்ற இரைச்சல்கள் தவிர்க்கப்பட்டு நமக்குத் தேவையான பாடல் மட்டுமே ஒலித்தது.

அப்போதும் கூட பாடல்களுக்கு மவுசு குறையவில்லை.

பிறகு கேசட் வடிவில் பாடல்கள் பதியப்பட்டு டேப் ரெக்கார்டுகள் வந்த பிறகு, பாடல்களை நாம் நினைக்கும் போதெல்லாம் கேட்டு மகிழலாம் என்ற வாய்ப்பு அமைந்தது. இந்த வாய்ப்பு பாடல்களின் மீதான மோகத்தை இருமடங்கு அதிகரிக்கச் செய்ததே ஒழிய குறைக்கவில்லை.

பல நடுத்தர வீடுகளிலும் கௌரவப் பொருளாகவும், அத்தியாவசியப் பொருளாகவும் இந்த டேப் ரெக்கார்டர்கள் இடம் பிடித்தன.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போல, தனியார் ஒளிபரப்பு நிறுவனங்கள் போல, தனியார் FM களும் காலூன்றத் துவங்கின.

மக்களிடையே ஒலி வழிப்பாடல் களின் மவுசு தொடர்ந்து தக்கவைக்கப்பட்டாலும், ஒரு புறம் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஆதிக்கம் மேலும் மேலும் வளர்ந்து வீடுகளில் வானொலி ஒலிக்கும் சத்தம் காணாமல் போனது.

ஆனாலும் தேநீர் கடைகள், தொழில் நிறுவனங்கள், முடிதிருத்தகம், பேருந்து மற்றும் மற்ற பயணங்களின் வழித்துணை பொழுதுபோக்கு எல்லாம் ஒலி வடிவப் பாடல்கள் தான். அதை இந்த டிவி நிறுவனங்களால் ஒருபோதும் மாற்ற இயலாது.

இவ்வளவு விவரமாகப் பேசும் நானும் வீட்டிலிருக்கும் போது பாடல் கேட்கும் பழக்கத்தை மறந்தே விட்டேன். அலுவலகத்தில் எப்போதாவது தாமதமாக வேலை செய்யும் போது மனதிற்கு இதமான சில பாடல்களைத் தனிமையில் கேட்பதுண்டு.

எனக்குப் பாடல் கேட்டே ஆக வேண்டும் என்ற சூழல் பயணத்தின் போது. அதுவும் நான் ஓட்டுநராக இருக்கும் போது பாடல் தான் அந்தப் பயணத்தின் வழித்துணை.

நாம் சிறுவயதில் சில்லு சில்லு, டும் டும் என டவுன் பஸ் களில் கேட்ட பாடல்களின் தொகுப்பு முதற்கொண்டு வரிசைப்படுத்தி இப்போது இணையத்தில் வருகிறது.
அதில் எதையாவது ஒலித்தால் 9000 கிமீ கூட அலுப்பில்லாமல் வண்டியை இயக்கலாம்.

இதில் நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு விஷயமும் உள்ளது.

பெரும்பாலானோர் நல்ல பாடல்களின் தொகுப்புக்காக யூடியுப் ஐயோ, அல்லது வேறு சில பணம் கட்டும் செயலியையோ உபயோகிக்கக் காண்கிறேன்.

யூடியூப் வழி பாடல்களை ஒலிக்கும் போது அதிகமான தரவுகள் செலவாகும், மேலும் பல நேரங்களில் இணைய இணைப்பு துண்டிக்கப்படும் போது பாடல் ஒலிப்படுவது நின்றுவிடும். இதற்கான ஒரு எளிய தீர்வு, இன்னொரு அருமையான செயலி.

அந்தச் செயலியின் பெயர் Southradios app.
இணைய வழி FM. இதில் நீங்கள் பல பல ரகங்களில் பாடல்களைக் கேட்கலாம்.
இளையராஜா வுக்குத் தனி வரிசை, ரஹ்மானுக்குத் தனி வரிசை, 90 பாடல்களுக்கு ஒரு வரிசை, 80 பாடல்களுக்கு ஒரு வரிசை, 2000 பாடல்களுக்கு ஒரு வரிசை ஏன், நகைச்சுவைக்குக் கூட தனி ஒலிபரப்பு வரிசை இருக்கிறது.

இந்த ஒரு செயலியில் நீங்கள் விரும்பிய பாடல்களைக் கேட்கலாம்.

ஆஸ்திரேலியாவிலிருக்கும் சில இளைஞர்கள் இணைந்து இந்தச் செயலியைத் தொடர்ந்து நடத்துகிறார்கள். அவர்கள் நம்மிடம் வேண்டுகோளாக வைப்பது ஒன்று தான். உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள் என்று.

என் மனதைக் கவர்ந்த இதனை நான் மனதாரப் பரிந்துரைக்கிறேன்.

பாடல்களைக் கேட்டு மகிழ்வோம்.

மீண்டும் பழைய முறைக்குத் திரும்புவோம்.

பாடலுக்கு ஒரு செயலி என்றால், வாசித்தலுக்கு நம் நினைவுகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அன்புடன் நினைவுகள்.