பயணம் என்பது மனிதனைப் பக்குவப்படுத்தும் காரணி.
ஒரு நல்ல சிந்தனை வேண்டுமென்றால் நல்ல புத்தகத்தை வாசியுங்கள்.
புத்தகம் வாசித்துக் கிடைக்கும் சிந்தனையோடு, நல்ல பண்புகளும் வேண்டுமென்றால் ஒரு அனுபவஸ்தரிடம் பேசுங்கள்.
ஒரு அனுபவஸ்தரிடம் பேசும் போது கிடைக்கும் விஷயங்களை நேரடியாகப் பெற விரும்பினால் பயணம் சென்று பாருங்கள்.
ஒரு பயணம் என்பது உங்களுக்கு, பக்குவத்தையும், பண்புகளையும், முன்யோசனைகளையும், அனுபவத்தையும் தரும்.
சில நேரங்களில் அது எதிர்பாராத மறக்க முடியாத நல்ல அனுபவங்களாக அமையலாம். மேலும் பயணம் உங்களுக்குப் பல பெரிய நல்ல மனிதர்களின் அறிமுகத்தையும் ஏற்படுத்தித் தரலாம்.
இவை எதுவுமே இல்லாவிட்டாலும் கூட பயணம் என்பது மனநிம்மதியைத் தரும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை.
அதுவும் நண்பனின் திருமணம் என்றால் சொல்லவா வேண்டும்?
நம்மோடு படித்த, பழகிய பழைய நண்பர்களின் ஒன்றுகூடல், இரண்டு நாட்கள் உலகை மறந்து, சுழற்சியான வேலையை மறந்து பழைய நண்பர்களோடு இணைந்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டும், இன்றைய நிலையைப் பேசி ஆறுதலடைந்து மகிழ்ச்சி பகிரந்து, துக்கங்களைப் பேசி உற்சாக சிந்தனைகளைப் பெற்று, அன்றாட வாழ்விலிருந்து விடுபட்டு இரண்டு நாட்கள் வேறொரு உலகத்தில் தவழும் அனுபவம் தந்த இன்பப் பயணம்.
எனக்கு இந்தப்பயணமே ஒவ்வொரு தருணமும் சிறப்பான அனுபவம் தந்த பயணம் தான். முதல் நாள் சென்னை டூ பொள்ளாச்சி கிளம்பிய பேருந்தில் குளிரூட்டி பழுதடைந்த காரணத்தால் சென்னை பொத்தேரியிலேயே பேருந்து ஒன்றரை மணி நேரமாக நிறத்தப்பட்டது.
பேருந்தில் திரை போட்டுத் தூங்கிக் கொண்டிருந்த ஒவ்வொருவரும் வெளியே வந்து பழக ஆரம்பித்தனர்.
ஏம்ப்பா நிறுத்தினதும் நிறுத்தினீங்க ஒரு கடையா பாத்து நிறுத்துங்க என்று அழிச்சாட்டியம் துவங்கி, பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு சாலையோர உணவகத்தின் முன் வண்டி நின்றது.
அடுத்த பேருந்து வரும் வரை பயணிகள் ஆம்லேட்டுகளை வாங்கித்தின்று கொண்டு ஒருவரோடு ஒருவர் அளவளாவியது சிறப்பு அனுபவம்.
ஒருவழியாக காலை பதினோரு மணிக்குப் பொள்ளாச்சியை அடைந்து, நண்பனால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதியில் குளித்துக் கிளம்பி, திருமூர்த்தி அணைக்குச் சென்று ஒரு குளியல். அடுத்த ஒரு மாத வெயிலுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஒரு ஆனந்தக்குளியல்.
அந்த அருவிக்கு நடந்து சென்ற அந்த 900 மீ, அந்த 900 மீ நாக்குத் தள்ளி நடந்த பிறகு அருவியில் கிடைத்த அந்த ஆனந்த அனுபவம், அடடடா!!
மாலை நண்பனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பழைய கல்லூரி நண்பர்களை சந்தித்து அளவளாவி, சந்திப்பில் நல்ல உணவருந்தி இரவு தங்கும் விடுதியில் வெகு நேரம் விழித்து ஒருவருக்கொருவர் மனமகிழ, மனது விட்டுப் பேசி மகிழ்ந்து மறுநாள் காலை சிறிது தாமதமாக எழுந்து மீண்டும் நண்பனின் திருமண நிகழ்ச்சியில் காலை உணவருத்தி விட்டு ஒருவருக்கொருவர் விடைபெற்று ஆங்காகங்கே பிரிந்து சென்றோம்.
இதில் ஒரு சில நண்பர்களோடு, ஆழியார் அணைப்பகுதியில் பரம்பிக்குளம்- ஆழியார் பிரத்யேக கால்வாய்களையும், ஆழியார் அணையிலுள்ள அரசாங்க தங்கும் விடுதி (காதலிக்க நேரமில்லை படத்தில் வந்த பங்களா), இவற்றையெல்லாம் சுற்றிப் பார்த்து விட்டு, மதியம் மீண்டும் பொள்ளாச்சி.

இந்த இடங்களுக்கு எல்லாம் பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை. நண்பன் ஒருவன் அரசு உதவிப் பொறியாளர் என்ற காரணத்தால் ப்ரத்யேக அனுமதியுடன் இந்த இடங்களை எல்லாம் கண்டு மகிழ்ந்தோம்.
மதியம் பொள்ளாச்சி சோழா உணவகத்தில் அளவில்லா சாப்பாடு 80 ரூ க்கும் அளவில்லா மீன் குழம்போடு, 40 ரூ மீன் வறுவலோடு ஒரு புடி புடித்தோம்.
பிறகு அந்தக்கூட்டமும் ஆளுக்கொரு பக்கமாகப் பிரிந்து அவரவர் அன்றாட பணிகளை நோக்கி நகர்ந்தோம். வரும் வழியில் எனது சகோதரியின் இல்லத்திற்கும் சென்று அவர்களைக் கண்டு அன்பைப்பகிர வாய்ப்புக் கிடைத்தது.
கிட்டத்தட்ட இந்த இரண்டு நாட்களில் இத்தனை ஆட்களை சந்தித்து இத்தனை அனுபவங்களைப் பெறக் காரணம், இந்தப்பயணம் தான்.
ஒவ்வொரு பயணத்திற்கும் ஒரு காரணம் இருக்கும்.
நண்பனின் திருமணம் என்ற இந்தக் காரணப் பயணம், எனக்கு வெறும் காரணப் பயணமாக அமையவில்லை.
அத்தனை அனுபவம், அத்தனை மகிழ்ச்சி, ஆத்மார்த்தமான தருணங்கள், மலரும் நினைவுகள் , நீண்ட நாள் நினைத்திருந்த அக்கா வீட்டுப் பயணம், எல்லாருக்கும் கிடைக்கப்பெறாத தனித்துவமான கால்வாய்கள், காதலிக்க நேரமில்லை பங்களாவைப் பார்த்த அனுபவம்…இப்படி இந்த இரண்டு நாள் பயணம் என் வாழ்வில் மறக்க முடியா தவிர்க்க முடியாத பயணம்.
பயணங்கள் ஓய்வதில்லை..
நல்ல நினைவுகளுடன்…