பட்டப்பெயர்கள் என்றால் அது ஒரு தனி மகிழ்ச்சி தான்.
சிலருக்குக் கடுமையான கோபமும் கூட வரும்.
ஒருவர் நம்மைப் பட்டப்பெயர் கொண்டு அழைக்கும் போது அவருக்கு நம் மீது உரிமை உண்டு, நெடுநாள் பழகிய தொடர்புண்டு என்பதை உணர முடியும்.
பட்டப்பெயர்கள் கேலிக்கு தான் என்றாலும் ஒரு சிலருக்கு அது கடுமையான கோபத்தை வரவழைக்கும்.
சத்யராஜ் நடித்த மிலிட்டரி திரைப்படத்தில் அவரை மிலிட்டரி என்ற பட்டப் பெயர் கொண்டு அழைத்தால் எப்படி கோபப் படுவாரோ, 16 வயதினிலே படத்தில் கமலஹாசனுக்கு சப்பானி என்ற பட்டப்பெயர் எப்படிப் பிடிக்காதோ, அதுபோல நீண்டநாள் பழக்கத்தின் காரணமாக ஒரு சிலருக்குத் தனது பட்டப்பெயரின் மீது வெறுப்பும் ஏற்பட்டிருக்கும்.
பள்ளி கல்லூரிகளில் துவங்கும் இந்தப் பட்டப் பெயர், ஊர்களில் குடும்பப் பட்டப்பெயர்கள் வரை பரவலாக உண்டு.
எனது தாயாரின் ஊரில் ஒரு வீட்டை அடையாளம் சொல்ல, அவர்களது உண்மையான பெயரை யாருமே சொல்வதில்லை. பட்டப்பெயர்களைத்தான் இப்போதும் சொல்லிப் புழங்குகிறார்கள்.
அதிலும் சில பட்டப்பெயர்கள் வித்தியாசமானதாக இருக்கும்.
பருத்தி வீரன் படத்தில் வரும் பொணந்தின்னி போல.
சிலருக்குப் பட்டப்பெயர்கள் என்றால் கோபம் வரும். ஆனால் அதைச்சொல்லி அவர்களை வம்பிழுத்து சுகம் காண ஒரு கூட்டம் இருக்கும். ஊரில் சிறுசு முதல் இளசு வரை அந்தப்பட்டப் பெயரைச்சொல்லி அவரைக் கோபப்படுத்தி சந்தோஷப்படுவார்கள்.
அது மாதிரி எங்கள் ஊரில் இரண்டு ஆட்கள் உண்டு.
ஒருவர் நடுத்தர வயது. அவரைத் தலைவர் என்று அழைத்தால் கடும் கோபம் கொண்டு வசைபாடத் துவங்கி விடுவார்.
இன்னொருவர் வயதானவர். அவர் காதுபட யாராவது ச்சூ என்று சொல்லிவிட்டால் அவ்வளவு தான் நடு பஜாரில் பூஜை துவங்கி விடும்.
இப்படி பட்டப்பெயர் என்பது பலருக்குப் பலவிதமான மகிழ்ச்சியையும், அனுபவத்தையும் நீங்கா நினைவுகளையும் தந்திருக்கிறது என்பதில் மாற்றமில்லை.
எனக்குப் பள்ளி காலத்திலும் சரி, கல்லூரி காலத்திலும் சரி என் உருவ அமைப்பின் காரணமாக, குண்டா என்ற பட்டப்பெயர் பொதுவானதாக இருந்தது.
ஆனால் கல்லூரியில் எனக்கு பூஸ்ட் என்ற பட்டப் பெயரும் இருந்தது. இப்போது நான் அழைத்தாலும் என் கல்லூரி நண்பர்களில் பாதி பேரு சொல்லு பூஸ்ட்டே என்று தான் பேசத்துவங்குவார்கள்.
நான் முதுகலைப்பட்டம், இரண்டு ஆண்டு இடைவெளி விட்டுப் படித்த காரணத்தால், அந்தக் கல்லூரி வகுப்பில் எனக்குப் பெருசு என்பது அடைமொழி.
யோவ் பெருசு சொல்லுயா, என்று துவங்கும் அந்த மதுரைக்கார நண்பர்களின் வசனத்தை இன்றும் நினைத்து மகிழ்ந்து கொள்வேன்.
இந்த பூஸ்ட், பம்பிள் பீ, பெருசு என்ற அடைமொழிகளை வைத்து என்னை எனது நண்பர்கள் அழைக்கும் போது, அவர்களிடம் ஒரு நெருக்கத்தை உணர முடிகிறது. என்னை என் பெயர் சொல்லி அழைக்கும் நணபர்களை விட பட்டப்பெயரிட்டு அழைக்கும் நண்பர்களை நெருக்கமானவர்களாகவும், உரிமை கொண்டவர்களாகவும் உணர முடிகிறது.
எப்படி ஒரு உறவினர் நம்மை மச்சான், மாப்ளே என்று அழைக்கும் போது ஒரு உறவும், உரிமையும் ஏற்படும், அதுபோல, இந்தப்பட்டப் பெயர்கள் ஒரு நெருக்கத்தை உருவாக்குகின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
என் இளங்கலைக் கல்லூரி வகுப்பு மாணவர்களில் மொக்க, மங்கானி, ஜல புல ஜங்ஸ், சூனா பானா, போண்டா, பத்து, கலக்கி, பால், ப்ராடு , ஃபயர், ரௌடி இப்படி பல பட்டப்பெயர்களின் சொந்தக்காரர்கள் உண்டு.
அவர்களது உண்மையான பெயர் மறந்தாலும் இந்தப் பட்டப் பெயர்கள் மறக்கவே மறக்காது.
மாறவும் மாறாது.
ஒரு க்ளாஸ் ல ஒரு பூஸ்ட் தான், ஒரு பால் தான், ஒரு ரௌடி தான், ஒரு மொக்க தான்.
😂
படித்து வாங்கிய பட்டம் எங்கள் பெயருக்குப் பின்னால் இணைந்து எப்படி எங்களுக்கு ஒரு மரியாதை தந்ததோ, அதுபோல இந்தப் பட்டப்பெயர் எங்களது பெயருக்கு முன்னாலோ, பின்னாலோ இணைந்து கொண்டு ஒரு மகிழ்ச்சியை வாழ்நாள் முழுதும் தருவது உண்மை தான்.
பட்டப்பெயர் வைத்து அழைக்கும் அந்த கலாச்சாரம் பெரும்பாலும் இளங்கலைக் கல்லூரி காலத்தோடு காணாமல் போய் விடுகிறது. அதன்பிறகு அலுவலகம் சென்ற பிறகு நம்மோடு இந்த அளவுக்கு நெருங்கிப் பழக ஆட்கள் கிடைத்தால் வரம் தான்.
திருமணமான பின்பு கணவன் மனைவி, செல்லமாக ஏதாவது பட்டப்பெயர்கள் வைத்துக்கொண்டு கலாய்ப்பதும் ஒரு ஆரோக்கிமான உறவு தான்.
முடிந்தால் முயற்சிக்கலாம். மூக்கு உடைந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.
இதையெல்லாம் தாண்டி நம் சிறுவயதிலிருந்தே நம்மோடு வளர்ந்த, நம்மைத் தூக்கி வளர்த்த உறவுகள் நமக்கு ஏதாவது பட்டப் பெயர் வைத்திருந்து, அதை ஒவ்வொரு முறையும் ஒன்றுகூடலின் போது சொல்லிக்காட்டி நம் குழந்தைப்பருவ நினைவுகளை மனதில் கொண்டு வந்து சேர்ப்பது என்பது ஒரு அலாதியான அனுபவம்.
பட்டப் பெயர்களும் கிட்டத்தட்ட பட்டப்படிப்பு போலத்தான். எல்லாருக்கும் எளிதாகக் கிடைத்து விடுவதில்லை.
ஒருவேளை உங்களுக்கும் பட்டப்பெயர் இருந்தால் நீங்களும் யாரோ ஒருவருக்கு அன்பானவர், உரிமையானவர், உறவானவர், சிறப்பானவர் தான்
அன்புடன் பூஸ்ட்.