Categories
அறிவியல் கருத்து தற்கால நிகழ்வுகள் வரலாறு

இனியாவது விழித்துக்கொள்வோமா? – பிளாஸ்டிக் டப்பாவில் சொடக்குத் தக்காளி

எப்படி ஆரம்பிக்கலாம் என்று தான் புரியவில்லை.
யாரைத் திட்டுவது, யாரைப் பாராட்டுவது என்பதும் புரியவில்லை.

ஆனால் நாமெல்லாம் முட்டாள்கள், வடிகட்டிய முட்டாள்கள் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.
நேற்று காலை எனது உறவினரிடமிருந்து ஒரு புலனச் செய்தி. அதில் ஒரு புகைப்படம், இது என்ன என்று தெரிகிறதா என்ற கேள்வியோடு.

இதென்ன தெரியாதா?
சொடக்குத் தக்காளி, சில பேருக்கு மணத்தக்காளி என்றால் புரியும்.

ஆனால் அது அடைபட்டிருந்த டப்பாவையும், அதன்மீது ஒட்டப்பட்டிருந்த விலையையும் பார்க்கும் போதுதான் பகீரென இருந்த்து.

தோராயமாக ஒரு பத்து பனிரெண்டு மணத்தக்காளிகளை ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவில் அடைத்து 110 ரூ விலை எழுதியிருந்தது.

டப்பாவில் அடைத்து விற்பனைக்கு

நானும், அவனும் சிறுவயதில் தெருவில் விளையாடிவிட்டு அப்படியே தெரு முனைக்கு நடந்து சென்றால், செடிக்கூட்டங்களின் நடுவே அனாவசியமாக இந்தச் செடிகள் நிற்கும்.

செடி

அதிலிருந்து இந்தத் தக்காளியைப் பிடுங்கி வாயில் வைத்து ஊதினால் அதன் தொளிப்பரப்பு சிறிய பலூன் போல புடைக்கும். அதை ஒருவர் தலையில் மற்றொருவர் அடித்து விளையாடுவோம்.
அப்படி தலையில் அடிக்கும் போது, அந்த பலூன் போன்ற பரப்பு உடைந்து சிறிய சத்தம் வரும். அதனால் தான் அதை சொடக்குத் தக்காளி என்று கூறுவோம்.

அதை மணத்தக்காளி என்று சொல்வதும் வழக்கம்.
அதனுள் இருக்கும் ஒரு சிறிய பழம், மிக அருமையான சுவையுடையது. அதைக்காட்டிலும் மிகுந்த மருத்துவ குணம் உடையது. இப்போதும் நாட்டு மருந்துக் கடைகளில் இந்த மணத்தக்காளி வகை மருந்துகள் பிரசித்தம்.

ஆனால் இதையெல்லாம் நாம் மறந்தும் விட்டோம், அந்தச் செடிகள் இப்போது எங்கேயாவது விளைகின்றதா என்பதை யாரும் கண்டு கொள்வதும் இல்லை.

ஆனால் பாருங்கள், இப்போது அது 110 ரூ என்று விலைக்கு வரத்துவங்கியுள்ளது. தெரு ஓரமாக, குப்பை போலக் கிடந்த போது அதன் அருமை தெரியவில்லை நமக்கு, இப்போது விலைக்கு வரத்துவங்கி விட்டது.
இனி இதற்காக ஒரு ப்ரத்யேக போட்டியோ அல்லது ப்ராண்டோ கூட வரலாம்.

அப்படி வரும்போது தான் நம் மக்கள் அதை ஆரோக்கியமான உணவுப்பட்டியலிலே சேர்த்துக் கொள்வார்கள்.

இதைப்பற்றி தகவல் எடுக்கலாம் என்று கூகுள் செய்த போது இதன் பெயர் cape gooseberies என்றும், இது தென் அமெரிக்காவில் விளைவதாகவும் தகவல் வருகிறது.

இதை என் உறவினரிடம் பகிர்ந்த போது அவன் என்னிடம் கேட்டான், நம்ம சின்ன வயசுல தென் அமெரிக்காவுலயா வாழ்ந்தோம் என்று.

சிரிப்பு வந்தது உண்மை தான். ஆனால் இது சிரிக்க மட்டுமல்ல.

இப்படி நம் தெருவில் விளைந்த மருந்துப் பொருட்களை, குப்பை விஷம் என்று சொல்லி நம்மிடமிருந்து அதை வழக்கொழியச் செய்து விட்டு நாளடைவில் அவர்கள் அதையே டப்பாவில் அடைத்து தென் அமெரிக்காவில் விளைந்த மருத்துவ குணமிக்க என்று விற்பனை செய்து நம்மை மாங்கா மடையர்களாக்குகிறார்களே?

இப்படித்தானே, சாம்பலில், உப்பில் பல் துலக்குவது கேடு என்று சொல்லி இப்போது சார்க்கோல், சால்ட் என்று பற்பசையை விற்கிறார்கள்!

எப்போது தான் நமக்கு சுயபுத்தி வரும்?

இனியாவது விழித்துக்கொள்வோமா?