கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்று படித்திருக்கிறோம்.
கம்பனின் கற்பனையையும், உவமைகளையும், படித்திறாத, பாரட்டிடாத தமிழ்ப் புலவர்களே இருக்க முடியாது.
அப்படிப்பட்ட கம்பனின் கவித்திறனுக்கு விளக்கமாக இன்று தினசரியில் ஒரு தலையங்கம் வாசித்தேன்.
அதை எல்லோருக்கும் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அந்த கட்டுரையில் இல்லலாத சில தகவல்களையும் தேடிச் சேர்த்து இந்தக் கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.
கம்பராமாயணத்தின் பால காண்டத்தில் கோசலை நாட்டின் வளத்தைப் பற்றிய ஒரு பாடல்.
பொதுவாக உறங்குதல்,அதாவது தூங்குதல் என்பது சோம்பேறித்தனமாகத்தான் உவமைப்படுத்தப்படுகிறது.
அதுவும் தொடர்ச்சியான உறக்கம் என்பது வடிகட்டிய சோம்பேறித்தனமாக கருதப்படுகிறது.
நம்மில் வேலை ஏதும் செய்யாமல் தொடர்ச்சியாகத் தூங்குபவர்களை கும்பகர்ணன் என்று கேலி செய்வதும் கூட உண்டு.
ஆனால் இந்தத் தூக்கத்தை உவமையாகக் கொண்டு ஒரு நாடு வளமாக இருக்கிறது என்று கவிபாடியிருக்கிறார் கம்பன். அதில் தான் அவர் தன்னைச் சக்கரவர்த்தி என்று நிரூபிக்கிறார்.
இந்தப் பாடல் தான் அது..
நீரிடை உறங்கும் சங்கம், நிழலிடை உறங்கும் மேதி
தாரிடை உறங்கும் வண்டு, தாமரை உறங்கும் செய்யாள்,
தூரிடை உறங்கும் ஆமை, துறையிடை உறங்கும் இப்பி,
போரிடை உறங்கும் அன்னம், பொழிலிடை உறங்கும் தோகை
நீரிடை உறங்கும் சங்கம் என்பது சங்கினைக் குறிக்கிறது.
கோசலை நாட்டில் ஏற்கனவே போதுமான அளவு சங்கு இருப்பதால், அங்கு யாரும் சங்குகளைக் கண்டு கொள்வதில்லையாம். அதனால் நீரில் இருக்கும் சங்குகள் வெகுநாளாக கேட்பாரற்று கிடக்கிறதாம்.
நிழலிடை உறங்கும் மேதி.
இதற்குப் பொருள் மரத்தின் நிழலில் உறங்கும் எருமை. அதாவது, எருமைகள் பொதுவாக பசியாற்ற, செடி கொடிகளைத் தேடு நடையாக நடக்கும். ஆனால் கோசலை நாட்டில். ஒரு மரத்திலிருந்து கீழே விழுந்து கிடக்கும் இலை தழைகளைத் தின்பதாலேயே எருமைக்குப் பசி அடங்கி விடுகிறதாம். அதனால் அது அங்கேயே படுத்து உறங்கி விடுகிறதாம்.
தாரிடை உறங்கும் வண்டு.
இதில் மிகப்பெரிய கற்பனை ஒளிந்திருக்கிறது.
பொதுவாக வண்டுகள் மிகவும் சுறுசுறுப்பானவை, மலரில் தேனை சேகரித்துக் கொண்டு ரீங்காரமிட்டுச் சுத்தி வருபவை. ஆனால் கம்பன் என்ன சொல்கிறார் பாருங்களேன்-
ஒரு மலரில் அந்த வண்டு தேனை உறிஞ்சும் போது, அளவுக்கு அதிகமான தேன் அந்த மலரில் பொதிந்து இருப்பதால், வண்டு அந்த மொத்தத் தேனையும் உறிஞ்சி விட்டுப் பறக்க முடியாமல் அந்த மலரிலேயே சிறிது உறங்கி ஓய்வெடுக்கிறதாம்.
அடுத்தது மிகப்பெரிய வர்ணனை.
தாமரை உறங்கும் செய்யாள்.
அதாவது செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி தாமரை மலரில் உறங்கிக் கொண்டிருக்கிறாளாம்.
ஏனென்றால் அந்த நாட்டில் யாருமே லட்சுமியை வணங்கி எனக்கு செல்வம் வேண்டும் என வேண்டிக் கொள்வதில்லையாம். அவர்களிடம் போதும் போதும் எனும் அளவிற்கு நிறைவான செல்வம் இருக்கிறதாம்.
இப்படி நீள்கிறது கம்பனின் கற்பனை.
கவிதையே அழகு தான்.
அதிலும் கம்பன் கவி என்றால் சொல்லவா வேண்டும்?
எத்தனை இன்பம் என் தமிழைப் படிக்கையிலே?
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
அன்புடன், நினைவுகள்.