மனிதன் வாழ்க்கை சிறப்பாகும் எப்போது?
துயரத்தில் தோள் கொடுக்கவும், சந்தோசத்தை தூக்கி நிறுத்தவும், நல்லது செய்யும் போது பாராட்டவும், பாதை தவறும் போது அதட்டவும் ஆள் இருக்கும் போது.
அப்படி எல்லாமாக. இருந்த ஒருவரை இழக்கும் போது வாழ்க்கையே முடிந்த எண்ணம் வரும்.
ஆனால் அத்துடன் வாழ்க்கை முடிவதில்லை.
எங்கிருந்தோ ஏதோ ஒரு வகையில் எல்லாவற்றுக்கும் பதில் கிடைக்கும்.
தேடிப் பிடிக்கத் தெம்பிருந்தால் போதும்.
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்?
ஆழக்கடலும் சோலையாகும் ஆசை இருந்தால் நீந்தி வா.
என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் தரும் தன்னம்பிக்கை அற்புதம்.
அதையடுத்த வார்த்தைகள் முக்கியமானவை.
சோகத்தில் அழுது தீர்த்து விட்டுக் கண்களை மூடி அழத் தெரிந்த மனிதனுக்கு, அடுத்த வேலையை நோக்கி நகரும் போது,
அந்தக் கண்ணீரைத் துடைத்து விட்டு,
பார்வை சரியானதாக இருக்க வேண்டும் என்கிறார் கவிஞர்.
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்.
என்று நம்மை நம்பிக்கை உற்சாகமூட்டுகிறார்.
இந்த சூழ்நிலைக்கு நண்பன் ஒருவன் சொன்ன கதை நியாபகம் வருகிறது.
நண்பன் சொன்ன கதை,
அவன் பாட்டி. அவன் வீட்டிலும், அவனுடைய சித்தப்பா வீட்டிலும் மாறி மாறி வசிப்பவர். தங்கியிருக்கும் வீடுகளில் ஏதாவது மனக்கசப்பு வந்துவிட்டால் அவ்வளவுதான்.
திடீரென மும்பையிலிருந்து சென்னை போக வேண்டும். அதுவும் இன்னைக்கே என்று அடம்பிடிக்கும். “பாட்டி, ரயில் ல இடமிருக்காது. நாளைக்கு போ” என்று சொன்னால் ஒப்புக் கொள்ளாது.
“அத்தாப் பெரிய ரயில் ல என் ஒருத்திக்கு இடமில்லையா?” என்று கேட்கும்.
அவருடைய மன எண்ணத்தின்படி சரிதானே அது. கிட்டத்தட்ட 1500 பேர் பயணிக்கும் ரயிலில் என் ஒரு ஆளுக்கு மட்டும் இடமில்லையா?
இதே போன்ற ஒரு கதை சினிமாவில் உண்டு. S.J சூர்யா துணை இயக்குனராக ஆசை படத்தில் வேலை செய்த பொழுது சென்னையிலிருந்து டெல்லிக்கு ரயிலில் முன்பதிவில்லாப் பெட்டியில் ஒரு நாயையும் கூட்டிச் சென்றிருக்கிறார்.
இப்படி சூழ்நிலைக்கு ஏற்றார் போல கடினமானாலும் வேறு வழியில்லாமல் சில காரியங்களை நாம் தைரியமாகச் செய்வதுண்டு.
அதுபோலத்தான் நம் வாழ்க்கையில் நம்மை கைப்பிடித்து வழிநடத்திய ஆள் இல்லாத சூழலையும் சமாளிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
கண்களைத் திறந்து பார்த்து அவருக்கு பதிலான ஆள் யார் என்பதைக் கண்டறிய வேண்டும்.
மனமிருந்தால் மார்க்கமுண்டு.
வாழ நினைத்தால் வாழலாம்.
யாரோ ஒருவர், ஏதோ ஒரு விஷயம் நமக்காக மீதமிருக்கும்.
அதையும் கண்டறிந்து அனுபவித்து விட வேண்டும்.
சோகம் என்பது ஒரு புறம் இருக்கலாம். ஆனால் எப்போதும் சோகமே வாழ்க்கை ஆகாது.
விளையாட்டில் காயம்பட்ட ஆட்டக்காரர்களுக்கு பதிலாக வேறொருவர் நிரப்பப்படுதல் போல, வாழ்விலும் பல வழிகளுண்டு.
மாற்று ஆட்டக்ககாரர் முந்தையவர் போல ஆடாவிட்டாலும் ஆட்டம் தொடரவேண்டுமே?
நம்பிக்கையும், தன்னம்பிக்கையுமிருந்தால் எதையும் சாதிக்கலாம். அப்படியிருக்க வாழ்வது ஒரு போராட்டமா?
நம்பிக்கை வரிகளுடன் நினைவுகள்.