Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

வகுப்பறையும், ஆசிரியர்களும்

மாதா, பிதா, குரு, தெய்வம்.

ஒரு மனிதனுக்கு மாதா, பிதாவை அடுத்து முக்கியமானவர் அவரது குரு.

ஒரு குழந்தை வளர்ந்து சமுதாயத்தில் எப்படியான ஆளாக உருவாகிறது என்பது அந்த குழந்தையின் அப்பா, அம்மாவைத் தாண்டி அதன் ஆசிரியர்களின் கைகளிலும் உள்ளது.

ஆசிரியர்களால் கண்டிக்கப்படாத மாணவன் பிற்காலத்தில் காவலர்களால் கண்டிக்கப்படுவான் என்ற சொல்லாடல் உண்டு.

ஒரு ஆசிரியர் என்பவர் ஒரு குழந்தையின் ஒழுக்கமான வளர்ச்சிக்கு மிக முக்கிய அடித்தளமானவர்.

குழந்தைகள் தனது மொத்த உழைக்கும் தருணத்தையும், அதாவது பகல் நேரம் அனைத்தையும் ஆசிரியர்களோடு தான் செலவிடுகின்றன.
அந்த நேரத்தைப் பொன் நேரம் ஆக்குவது ஆசிரியரின் கடமை.

இன்று ஒரு தினசரியின் தலையங்கத்தில் படித்தேன். ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று எழுதியிருந்தான்.

ஓரளவுக்கு நியாயமானதாகத்தான் இருந்தது.

அந்தத் தலையங்கம் ஒரு ஏழாவது வகுப்புப் பயிலும் மாணவனால் எழுதப்பட்டிருந்தது.

ஒரு ஆசிரியர் என்பவர் நூறு தாய் தந்தைக்குச் சமம்.
நாம் முன்னர் கூறியது போல, பகல் பொழுது முழுவதும் குழந்தைகள் பள்ளியில் ஆசிரியர்களோடு தான் செலவிடுகின்றன.

அந்த ஒட்டுமொத்த குழுந்தைகளுக்கும், பொறுப்பு அந்தப் பள்ளியும், ஆசிரியர்களும் தான்.
அந்தக் குழந்தைகளுக்குத் தன் தாய் தந்தையிடமிருந்து என்ன அன்பும், அரவணைப்பும் கிடைக்குமோ அது ஆசிரியரிடமும் கிடைக்க வேண்டும்.

ஆசிரியர் பணி செய்பவர்கள் தன்னிடம் பயிலும் அனைத்துக் குழந்தைகளையும், தனது சொந்தக் குழந்தைகளைப் போல பாவிக்கும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வகுப்பறை சூழல்

ஒரு மாணவன், தனது வகுப்பறையை விரும்ப வேண்டும். அத்தகைய சூழலை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். ஒருநாள் விடுப்பு எடுத்தால் கூட, அடடா, இன்று வகுப்பறையில் என்ன பாடம் நடத்தினார்களோ, என்னனென்ன ரசிக்கும் தருணங்களை நான் தவற விட்டேனோ என்று அவன் ஏங்க வேண்டும்.

வகுப்பறை இறுக்கமான சூழலை ஒரு போதும் உருவாக்கக் கூடாது.

ஒரு தமிழாசிரியர் சிரித்து மகிழ்ந்து கதை சொல்லி, சிலாகித்துப் பாடம் நடத்தலாம். ஆனால் ஒரு கணக்கு ஆசிரயரின் வகுப்பறை இறுக்கமானதாகத் தானே இருக்க வேண்டும் என்றால், அதுவும் கூட இல்லை.

கணக்கு வகுப்பில் கதை சொல்ல, சிரிப்புகள் எழ வாய்ப்புகள் இல்லை. ஆனால் எந்நேரமும் கடுமையான முகபாவனையோடு அல்லாமல், முதல் இருக்கை முதல் கடைசி இருக்கை வரை அனைத்து மாணவர்களையும் கவனித்து அவர்களுக்குப் புரியாத நேரத்தில் கடிந்து கொள்ளாமல் இன்னொரு முறை அன்போடு அதனை சொல்லித் தரும் பட்சத்தில் கணக்கு வகுப்பும் கசக்காது.

இன்றைய மாணவர்களின் முக்கிய எதிர்பார்ப்பு இதுவாகத்தான் இருக்கிறது. ஒரு வகுப்பறை என்பது கலகலவென சிரித்து மகிழ்ந்து பாடம் கற்கும் சூழலாக இருக்க வேண்டுமே ஒழிய, இறுக்கமான மனநிலைநோடு ஒரு அறுவை அரங்கம் போல, நோயாளியின் சுயநினைவுகூட இல்லாத போது அவர்மீது எதையோ திணிக்கும் விதமாக இருந்து விடக் கூடாது என்று.

தொடர்ந்து பேசலாம்.

ஆசிரியர்கள், வகுப்பறை சூழல், எனது சொந்த அனுபவம் என…

அன்புடன் நினைவுகள்.