தமிழ் சினிமாவில் எப்போதுமே இருபெரும் நடிகர்கள் மிகப்பிரபலமாகக் கோலோச்சுவார்கள்.
அவர்களின் ரசிகர்களுக்கிடையிலும் வாய்ச் சண்டையில் துவங்கி கைகலப்பு வரையெல்லாம் நிகழும்.
அப்படி முந்தைய கருப்பு வெள்ளை காலத்தில் எம்.ஜி.ஆர் – சிவாஜி கணேசன்
அடுத்த தலைமுறையில்
ரஜினி- கமல்.
அவர்களைத் தொடர்ந்து அவர்கள் இடத்தில் தற்போது கோலோச்சும் இரு துருவங்கள் விஜய்- அஜித்.
முந்தையவர்கள் காலத்தை விட இவர்கள் காலத்தில் இணைய வளர்ச்சி காரணமாக இவர்களது ரசிகர்களுக்கிடையே வாய்க்காதகராறு சிறிதே அதிகம் தான்.
இவர்கள் படம் நேரடியாக மோதிக்கொண்டாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி ஒரு நடிகரின் படத்தை இன்னொரு தரப்பு குறை சொல்வது என்பது வழக்கமான விஷயம்.
இவர்களுக்கிடையே எத்தனை வாய்க்கா தகராறு நடந்தாலும் ஒரு விஜய் ரசிகனுக்கு ஒரு அஜித் ரசிகன் நண்பனாகவும், கணவன் மனைவியில் ஒருவர் விஜய் ரசிகராகவும், மற்றொருவர் அஜித் ரசிகராகவும் இருப்பது தான் விதி.
இரு நடிகர்களின் படத்தையும் அனைத்து ரசிகர்களும் திருவிழா போல கொண்டாடுவார்கள் என்பதே நிதர்சனம்.
இதில் ஒருவர் இப்போது சினிமாவை விட்டு விலகி அரசியலில் களமாடுகிறார் என்பதே தமிழ் ரசிகர்களுக்கு சோகம், அடுத்தவர் பாதி வருடம் பந்தயம், மீதி பாதி தான் சினிமா நடிப்பு என்று சொல்லி விட்டது தமிழ் சினிமா ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தமிழ் சினிமாவின் தற்போதைய இரு தூண்களும் சரிந்து விட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான்.
இதில் விஜய் அன்றாடம் ரசிகர்களோடு உறவாடி வாழ்ந்தவர். பாடல் வெளியீடு துவங்கி படத்தின் வெற்றிவிழா வரை அனைத்திலும் ஆர்வமாகக் கலந்து கொண்டு ரசிகர்களை குஷிபடுத்தியவர். மற்றொருவர் முன்னாளில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களின் காரணமாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை, அதுமட்டுமில்லாமல் ஒரு பேட்டி கூடத் தருவதில்லை.
நான் படம் நடிப்பது என் தொழில், அது எனக்கு வருமானம் தருகிறது. என் படம் பிடித்திருந்தால் பாருங்கள், பிறகு உங்கள் வேலையைப் பாருங்கள். முதலில் குடும்பத்தை கவனிப்பது தான் முக்கியம் என்று கூறியதோடு நில்லாமல், தனக்கு ரசிகர் மன்றம் இருக்கக்கூடாது என்று அதையும் கலைத்து விட்டார்.
இடைக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனத்தோடு செய்த ஒப்பந்தம் காரணமாக இவருக்குத் தொடர்ச்சியாக படங்கள் தோல்விப்படங்களாக அமைந்தன.
மேலும் இவருக்கு நிகழ்ந்த விபத்து காரணமாக சிறிது காலம் நடிப்பில் இடைவெளியும் ஏற்பட்டது, மேலும் வளைந்து நெளிந்து நடனமாட உடல் தகுதி இல்லாமல் ஆனது.
இவர் உடலும் சற்று பருமனடைந்து தோற்றமும் மாறியது.
அவ்வளவுதான் அஜித் என்று பேச்சு வந்தபோது தான் இவர் மேலும் உற்சாகமாக உழைக்கத் துவங்கினார்.
என் தோல்வியை, நான்தான் முடிவு செய்வேன் என்று தொடர்ந்து உடலை மெலித்து படங்களில் நடித்தார்.

அதிலும் பல படங்கள் தோல்வியுற்றாலும் அந்த நல்ல மனிதரின் ரசிகர்கள் அவரை சோர்வடைய விடவில்லை. எத்தனை படங்கள் தோற்றாலும் அடுத்த படத்தை பாலாபிஷேகம் செய்து திருவிழா போலத்தான் வரவேற்றார்கள்.
அதனால் தான் அவர் இன்றளவும், சினிமாவில் ஒரு துருவமாகக் கோலோச்சக் காரணம்.
“என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா” என்று அவர் பேசிய தூள் பறக்கும் வசனம் அவருக்கு சினிமாவில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கைக்கும் ஒத்துப் போகும்.
பல காலத்திற்குப் பிறகு பில்லா படத்தில் மிகப்பெரிய வெற்றியை ருசித்தார். அதன்பிறகு வெற்றியும் தோல்வியுமாக படங்கள் வந்தாலும், சமீப காலங்களில் வெளியான வீரம், வேதாளம் , விஸ்வாசம் போன்ற படங்களில் குடும்ப ரசிகர்களையும் கவர்ந்தார்.
அதிலும் விஸ்வாசம் படம் ரஜினியின் பேட்ட படத்திற்கு இணையாக வெளியாகி வென்றது.
சமீபத்தில் இவர் கலந்து கொண்ட துபாயில் நிகழ்ந்த கார்பந்தயத்தில் இவரது அணி மூன்றாவது இடம் பிடித்தது. அந்தப்பந்தயத்தில் முதல் இரண்டு இடம் பிடித்தவர்களைக் கொண்டாடிய ஆட்களை விட மூன்றாவது இடத்தைப் பிடித்த அஜித்குமார் அணிதான் பெரிதாகக் கொண்டாடப்பட்டது.
காரணம் இவரது வெறித்தனமான ரசிகர்கள்.
தல என்று துவங்கி, அவர் ஒவ்வொன்றாக வேண்டாம் என்று சொல்லி கடைசியில் கடவுள் அஜித் என்று வந்து நின்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் நடந்த மைதானத்தில் எல்லாம் வலிமை அப்படேட் வேண்டும் என்ற பதாகைகள் தென்பட்டது.
இவர் ரசிகர்களை விட்டு ஒரு அடி நகர்ந்தால், ரசிகர்கள் இவரை நோக்கி 2 அடி முன்னேறுகிறார்கள்.
எல்லாருக்கும் இவர் போல ரசிகர்கள் அமைவது கடினம். இத்தனை அன்பைச் சாம்பாதிப்பது எளிதல்ல.
இவரது நல்ல குணத்தின் காரணமாகவோ, அல்லது காரணமே இல்லாமலோ இப்படி ஒரு கூட்டம் இவரைப் பைத்தியம் போலப் பின்தொடர்கிறது.
அதனால் தான் “யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்கடா!” என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப பந்தயத்தில் மூன்றாவதாக வந்த அணி அவ்வளவு கொண்டாடப்பட்டது.
அந்தக் கொண்டாட்டம் அதோடு ஓயாமல் அவருக்கு பத்ம பூஷண் விருது கிடைத்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம்.
இவரது படம் வந்தாலே ஒரு திருவிழா தான். பொங்கலுக்கு வெளியாகி இருக்க வேண்டிய இவரது படம், இத்தனை தாமதமாகி இப்போது இந்தக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் வெளியாக இருக்கிறது.
விடாமுயற்சி என்பது படத்தின் தலைப்பு.
படத்தின் தலைப்பு இவரது அன்றாட வாழ்க்கை முறையையும் குறிக்கிறது. அன்றாடம் அவர் தன்னைப் புதுப்பித்துப் கொள்வதற்காக செய்யும் மெனக்கெடல்கள் அதிகம்.
ஒரு சொட்டு ரத்தம் மிச்சமிருந்தாலும், நம்பிக்கை விடாமுயற்சி என்று பலரது அலைபேசிகளிலும் அழைப்பு ஒலி தெறிக்கிறது.
இது ஏதோ ஆங்கிலப்படத்தின் மறுபதிப்பு என்று சொல்லப்படுகிறது.
அட என்னவா இருந்தா என்னங்க?
தல தரிசனம். கடவுள் காட்சினு ரசிகர்கள் ஆரவாரமா காத்திருக்காங்க.
படம் பாத்துட்டு எப்படி இருக்குனு பேசலாம்.
இன்று வெளியாகும் விடாமுயற்சி படத்திற்கு நினைவுகள் சார்பாக வாழ்த்துகள்.