Categories
ஆன்மீகம் தகவல்

திருப்பதி பயணம்- இனிய மற்றும் காரசார அனுபவம்

பயணங்கள் பொதுவாக மனிதனைப் பக்குவப்படுத்தும். புதிய மனிதர்களை, புதிய அனுபவங்களை சந்திக்க வைக்கும். அன்றாடம் நாம் பயணிக்கும் சிறிய தொலைவில் கூட சிறிய புது அனுபவங்களை சந்திக்க நேரும், அப்படியிருக்க ஒரு ஆன்மீக சுற்றுலா, புது அனுபவத்தைத் தராமலா போகும்?

சமீபத்தில் திருச்செந்தூர் பயணித்த போது நமக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்களையும், முகம் சுளிக்கும் சம்பவங்களையும் பகிர்ந்திருந்தோம். ஆனால் திருப்பதி எப்போதுமே முகம் சுளிக்கும் நிகழ்வுகளைப் பரிசாகத் தருவதில்லை. காரணம் கடுமையான நிர்வாக முறை.

எப்பேர்ப்பட்ட பெரிய வண்டிகளாக இருந்தாலும் சோதனைச்சாவடியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பிறகு தான் மலையேறுகிறது.

ஆனாலும் இத்தனை சோதனைகளைத் தாண்டி நம்மாளுங்க யாரோ பீடிய மேல நேக்கா எடுத்துட்டு வந்துட்டாய்ங்க. ஆமாங்க இணைய வழியில் தங்கும் வசதி இல்லாத காரணத்தால், பொருள் பாதுகாப்புப் பெட்டகம் ஒன்றைக் கைப்பற்றி, பொது ஓய்வறையில் தங்கி குளித்துக் கிளம்பலாயிற்று. அப்போது அந்த விடுதியின் கழிவறையில் பல பீடித்துண்டுகளைப் பார்க்க இயன்றது.

அதற்கடுத்து நிகழ்ந்த சம்பவம் அதிரடி.

நாங்கள் தங்கியிருந்த ஓய்வறையில் என்ன காரணத்தினாலோ, மகளிர் கழிவறை அடைக்கப்பட்டது. அதனால் ஒரு புரட்சிப்படை விறுவிறுவென ஆண்கள் கழிவறைக்குள் அதிரடியாக நுழைந்துவிட்டது.

வயசான பாட்டி முதல் வயசுப் பிள்ளைகள் வரை, பாரபட்சமில்லாமல் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்து விட்டார்கள். இங்கே உள்ளாடையோடு உல்லாசமாகக் குளித்துக் கொண்டிருந்த நம்ம பயலுக நெளிய ஆரம்பிச்சுட்டாங்க. ஏமிரா இதி? னு.

இதுவே ஒரு பேருந்தில் லேடீஸ் சீட்ல பசங்க உட்கார முடியுமா? புரட்சி பெண்களின் புரட்சி இப்படி பாத்ரூம் வரைக்கும் வரக் கூடாது பெருமாளே!

ஒரு வழியாகக் குளித்து முடித்துக் கோவிலை அடைந்து சிறப்பு தரிசனத்தை சிறப்பாக முடிச்சு லட்டுகளை வாங்கி வெளியே வந்தாச்சு. நாங்கள் தேர்வு செய்திருந்தது 500 ரூ ஊஞ்சல் சேவை தரிசனம்.

வயதானவர்களுக்கு சீனியர் சிட்டிசன் சிறப்பு தரிசனமும், இதுவும் உகந்தது.

சீனியர் சிட்டிசனில் இலவச தரிசனம்.
இதில் 500 ரூ கட்டினால், ஒரு மண்டபத்தில் உற்சவரை ஊஞ்சலில் வைத்து தீபாராதணைகள் செய்து பிறகு உள்ளே சென்று ஊஞ்சலை சுத்திக் கும்பிட அனுமதிக்கிறார்கள். திருப்பதி கோவிலினுள்ளே ஒரு 1.5 மணி நேரம் அமர்ந்து சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் இதைத் தேர்வு செய்யலாம்.

எல்லாம் சுமுகமாக முடிந்து கீழ்திருப்பதிக்கு இறங்க, அங்கிருந்த பேருந்து நிலையத்திற்குச் சென்ற பிறகு தான் காரசார அனுபவம்.

ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்ததை என்னுடைய அலைபேசியில் காட்டி இது எந்தப் பேருந்து என்று கேட்டதற்கு, பிரின்ட் அவுட் எடுத்துட்டு வாங்க என்று கூறினார்கள்.

பிரின்ட் அவுட் தேவையில்லைனு அதுலயே போட்டிருக்கே அப்புறம் எதுக்குப் பிரின்ட் அவுட்னு கேட்டா, இல்ல நாங்க தகவல் லாம் பாக்கனும், சீல் வைக்கனும் னு சொன்னாங்க

ஏற்கனவே அலைந்து திரிந்து எப்படா பஸ்ல உட்காருவோம்னு இருந்த எனக்குக் கடுமையான கோபம். பிறகு ஒரு வழியாகப் பிரின்ட் எடுத்துக்கொண்டு அங்கே இரண்டு மூன்று பேருந்துகளில் கேட்டபோது அவர்கள் அதை அலட்சியப்படுத்தினார்கள். அதை வாங்கிக் கூட பார்க்காமல், இதி மண பஸ் லேது என்று திருப்பி அனுப்பினார்கள். எனக்கெல்லாம் உச்சகட்ட கோபம்.

பிறகு அங்கிருந்த ஒரு பெண் நடத்துனர். நம்மாளுங்களுக்கு இது நாலேட்ஜ் இல்ல. நீங்க இந்த பஸ்ல ஏறுங்க என்று சொல்லி, அந்த பேப்பரில் ஒரு கிறுக்கு கிறுக்கினார். அடப்பாவிகளா, இதுக்காடா பிரின்ட் அவுட்னு இருந்துச்சு. ஆனா நல்ல வேளை பஸ் கிடைச்சிருச்சு.

சந்தோஷம்.

ஒரு வழியா திருப்பதி பேருந்து நிலையத்திற்கு வந்து இந்த்ரா சர்வீஸ் பேருந்தில் ஏறி (APSRTC ன் AC service)- தேவரா படம் பார்த்துக் கொண்டே சென்னை வந்து சேர்ந்தாச்சு.

பஸ்ல படம் பார்த்துக்கொண்டே பயணம் என்பது இந்த வகை பேருந்துகளில் இன்றும் சாத்தியம்.
அதுவும் நமக்குப்பிடித்தமான அலாதியான அனுபவம் தானே?

ஒவ்வொரு பயணமும் ஒரு இனிய அனுபவம் தான்.
மனிதன் தனது கடைசிப் பயணம் போகும் வரை, அவ்வப்போது சில பயணங்களை மேற்கொள்வது மனதிற்குப் பக்குவத்தைத் தரும்.

அன்புடன் நினைவுகள்.