Categories
ஆன்மீகம்

சிவாலய ஓட்டம்

சிவாலய ஓட்டம் என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களுக்கு ஓடி, ஓடியே தரிசனம் செய்யும் ஒரு பாரம்பரிய முறை.

இப்போது நடந்தோ ,ஓடியோ தரிசிக்க முடியாதவர்கள், இருசக்கர வாகனங்களிலோ, பெரிய வாகனங்களிலோ சென்று தரிசிப்பதையும் வழக்கமாக்கி விட்டனர்.

இந்த சிவாலய ஓட்டம் சிவராத்திரிக்கு முந்தைய நாள் துவங்கி, சிவராத்திரி அன்று முடிவடைகிறது.
சரியாக 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 110 கிமீ நடந்தோ அல்லது ஓடியோ பயணித்து இந்த பணிரெண்டு சிவாலயங்களையும் தரிசிக்கிறார்கள்.

இந்த ஓட்டத்தின் போது சிவ பக்தர்கள், கோவிந்தா கோபாலா என்று பெருமாளின் நாமத்தை அழைத்துக் கொண்டே தான் ஓடுகிறார்கள்.

இந்த சிவாலய ஓட்டத்தின் முக்கிய அம்சமே, ஹரியும், சிவனும் ஒன்று என்பதைப் பரைசாற்றுவது தான்.

திருமலை என்ற சிவாலயத்தில் துவங்கி , நட்டாலம் என்ற சிவாலயத்தில் முடியும் இந்த சிவாலய ஓட்ட முறை கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள் பழமையானது.

அதன் வரலாறு என்ன என்பதைப் பார்க்கலாம்.

இதன் பின்புலக் கதை இருவிதமாக சொல்லப்படுகிறது.
முதலாவது பாண்டவர்களின் பின்புலத்திலிருந்து.

பாண்டவர்களில் மூத்தவரான தருமர் இராஜ குரு யாகம் ஒன்றை நடத்துவதற்கு புருஷா மிருகத்தின் பால் தேவைப்பட்டது.
புருஷா மிருகம் என்பது இடுப்பு வரை மனித உருவமும், அதற்குக் கீழ் புலி உருவமும் உடையது.
அது பெரிய சிவபக்தன் .
பெருமாளைக் கண்டால் சுத்தமாக ஆகாது..அந்த மிருகத்திற்கும் சரி, பல மனிதர்களுக்கும் சரி, ஹரியும், ஹரனும் ஒன்று என்பதை நிரூபிப்பதற்காக பீமனை வைத்து ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது.

அவன் கோவிந்தா கோபாலா என்று சொல்லி அந்த மிருகத்தை கோபப்படுத்த, அது அவனைத் துரத்தும்.அப்படித் துரத்தும்போது, பீமன் தன் கையிலிருந்த ருத்ராட்ச்சையைக் கீழே போட அது சிவலிங்கமாக உருவெடுக்கும். சிவலிங்கத்தைக் கண்ட மருகம் , உடனே பக்கத்திலிருந்த குளத்தில் குளித்து விட்டு ஈரம் காயாமல் பூஜை செய்து விட்டு மறுபடியும் துரத்தும்.
இப்படி 11 இடம் கழிந்து 12 ஆவது இடமான நட்டாலத்தில் இந்த ஓட்டம் முடிகிறது.
அங்கே பெருமாள், அர்த்தநாரீஸ்வரராக அவதரித்து பீமனுக்கும் புருஷா மிருகத்திற்கும் அருள்தந்து முடிப்பதாக சொல்லப்படுகிறது.

இதேதான் இன்றும் பின்பற்றப்படுகிறது.
பக்தர்கள் ஒவ்வொரு கோயில் அருகே உள்ள குளத்தில் குளித்து விட்டு ஈரம் காயாமல் சிவனை வணங்குகிறார்கள்.
அப்படி 12 ஐயும் முடிக்கும் போது, மிருக குணம் காணாமல் போவதாக ஐதீகம்.

இரண்டாவது கதை இன்னும் சுவாரஸ்யமானது.
முன்பொரு காலத்தில் சுன்டோதரன் எனும் அரக்கன் சிவனின் மீது பெருமதிப்பு கொண்டவன்.
அவன் கடுமையான தவமிருக்கவே சிவனிடமிருந்து மகப்பெரிய வரம் ஒன்றைப் பெறுகிறான்.

அவன் யார் தலையில் கை வைத்தாலும் அந்தத் தலை சுக்குநூறாக சிதறி விட வேண்டும் என்பதே அந்த வரம்..அவன் தவமிருந்த இடம் தான் சிவாலய ஓட்டத்தின் முதல் தலமான திருமலை.

அவனுக்கு அந்த வரம் கிடைத்த உடனே மூளை குழம்பி விடுகிறது.
இதை இவர் தலையிலேயே கை வைத்து சரி பார்த்துக் கொள்ளலாமே என்று எண்ணுகிறான்.

இதையறிந்த சிவபெருமான் தலைதெறிக்க ஓடத்துவங்குகிறார்.

அப்போது அவரது ருத்ராட்சம் கீழே விழுந்து லிங்கமாக மாறி விட, பெரும்சிவபக்தனான சுன்டோதரன் அருகிலிருந்த குளத்தில் குளித்து பூஜிக்கத் துவங்குகிறான்.
சரி பூஜை முடிஞ்சதும் விட்ருவானு பாத்தா, பயபுள்ள மறுபடியும் துரத்த ஆரம்பிச்சுட்டான்.
என்னைய இவன்கிட்ட இருந்து எப்புடியாச்சும் காப்பாத்திரு கோவிந்தா, னு சிவபெருமான் மீண்டும் ஓட ஆரம்பிக்கிறார்.

குளக்கரை இருந்த இடங்களிலெல்லாம் ஒரு ருத்ராட்சையை விட, அது லிங்கமாக உருவெடுக்க அவனும் பூஜை செய்து விட்டு மீண்டும் துரத்துகிறான்.

இதுக்கு ஒரு எண்டே இல்லியா கோவிந்தா னு சிவன் டென்ஷன் ஆகும் போது தான் 12 ஆவது தலமான நட்டாலத்தில் பெருமாள் மோகினியாக வருகிறார்.

அங்கே வந்து அந்த அரக்கன் முன்பு மோகினியாக நடனமாடி அவனை மயக்கிவிட, அவன் மதிமயங்கி தன் தலையில் தானே கைவைத்துக் கொள்கிறான்.

அந்தத் தலத்தில் சிவனும், பெருமாளும், அர்த்தநாரீசுவரராக காட்சியளிக்கிறார்கள்.
இது தான் சிவாலய ஓட்டத்தின் கடைசி இடம்.

இப்போது சிவாலய ஓட்டம் ஓடும் பல பக்தர்களும் விசிறிக் கொண்டே ஓடுகிறார்கள்.

காரணம், சிவபெருமானும் அவர்களோடு இணைந்து ஓடுவதாக ஒரு ஐதீகம்..அவருக்கு வியர்க்கக் கூடாது என்று விசுறுகிறார்களாம்.

கதை எத்தனை இருந்தாலும், இந்த அனுபவம் என்பவை மனதிற்கு ஆறுதலாகத் தான் இருக்கும் போல.

முடிந்தால் ஒருமுறை சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளலாமே?

பக்தியுடன் நினைவுகள்.