குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் , ஆனால் கோவில்பட்டியில் குடிநீருக்கே திண்டாட்டம் என்று முன்னாளில் ஒரு கேலி சொலவடை எங்கள் ஊரில் உண்டு. அதாவது எங்கள் ஊரில் தண்ணீர் பஞ்சம் இருந்த போது இந்த சொல்வடை சொல்லப்படுவது உண்டு.
இது எதற்காக சொல்லப்பட்டது என்றெல்லாம் ஆராயத் தேவையில்லை.
சும்மா ஒரு கோர்வையான வார்த்தைக்காக சொல்லப்பட்டது.
ஆனால் இன்றைய சூழலில் அது கோர்வைக்காக அல்லாமல் உண்மையாகவே சொல்லப்படலாமோ என்று தோன்றுகிறது.
ஆம், இந்து முன்னனி, இந்து ஆதரவு, இந்து முன்னேற்றம், இந்துக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் நிகழும் சில அரசியல் கேலிக் கூத்துகளைக் காணும் போது இந்த வார்த்தைகள் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது.
திடீரென இந்த வாரத்தில் திருத்தணி மலையைக் காப்போம் என்று ஒரு கூட்டம் கிளம்பியது.
சரி ஏதோ திருத்தணி மலையில் சுரங்கம் கண்டுபிடித்து அதைத் தோண்டப் போகிறார்கள்போல, அதற்கு எதிராகத்தான் இந்தக்கூட்டம் திரண்டிருக்கிறது என்று எண்ண வேண்டாம்.
இந்தக் கூட்டம் திரண்டது மதக்கலவரத்தைத் தூண்டுவதற்காக.
ஆம் திருத்தணி மலை மீது இருக்கும் மசூதியில் சந்தனக்கூடு நிகழ்ச்சிக்கு ஆடு வெட்டக்கூடாது, கோழி அறுக்கக் கூடாது என்று கிளம்பி போராட்டம் நிகழ்த்தி இருக்கிறார்கள்.
இத்தனை ஆண்டு காலமாக சந்தனக் கூடு நிகழவில்லையா அல்லது முருகன் அதனால் கோவித்துக்கொண்டு போய்விட்டாரா?
எதுவுமில்லை.
டங்ஸ்டன் சுரங்கம் தோண்டும் முடிவைக்கேட்டு அமைதி காத்த இந்த அமைப்புகள், இப்போது திருத்தணி மலையைக் காக்கிறேன் என்று புறப்பட்டிருப்பது வெறும் மத அரசியல் அல்லாமல் வேறென்ன?
உலகில் பல பிரச்சினைகள் இருக்கும் போது இல்லாத ஒரு பிரச்சினையை உருவாக்கி அதைப் பெரிதாக்கி அரசியல் செய்வதே இந்தக் குறிப்பிட்ட கட்சியின் தொடர்ச்சியான செயல்முறையாக உள்ளது.
முன்னர் சபரிமலைக்கு வருபவர்கள் வாவர் சமாதிக்குப் போகக்கூடாது என்றார்கள். இப்போது இது.
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
அன்புடன் நினைவுகள்.