இஸ்ரோ தனது 100 ஆவது ராக்கெட்டை விண்வெளியில் வெற்றிகரமாக ஏவிய அதே நாளில் தான் இன்னொரு துக்க செய்தியைக் கேட்டறிந்தோம்.
மஹா கும்பமேளாவில் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் ஆற்றில் குளிப்பதற்காகத் திரண்ட காரணத்தால் 30 பக்தர்கள் மரணம், அதிகமானோர் காயம்.
இந்தப்பக்கம் நமது மாநிலத்தின் ஆளுநர் சனாதான தர்மத்தைப் பாதுகாப்போம் வளர்ப்போம் என்று பேட்டி கொடுக்கிறார்.
இப்படி சனாதான தர்மத்தைக் காப்போம் என்று பேட்டி அளிக்கும் எந்த மிகப்பெரிய ஆளுமையும் அந்த கும்ப மேளா கூட்டத்தில் நசுங்கிச் சாகவில்லை.
பாவம் நசுங்கிச் செத்தது எல்லாம் பாவப்பட்ட பக்தர்கள். பக்தி என்ற பெயரில் விதைக்கப்பட்ட மிகத் தீவிரமான நம்பிக்கையை உண்மையாகப் பின்பற்றி, எப்படியாவது அதைச் செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தால், தான் ஆறு அறிவு கொண்ட மனிதன் என்ற சுய அறிவை இழந்து, சுய ஒழுக்கத்தை இழந்து, செம்மறி ஆடுகளாக மாறிப் போனதால் ஏற்பட்ட விபத்து இது.
ஆமாம் மகா கும்பமேளா நிகழும் போது குறிப்பிட்ட மூன்று நாட்களில் புனித நீராடுதல் விஷேசம், அதிலும் தை அமாவாசை ஆன மௌனி தினத்தன்று நீராடுவது மிக மிக விஷேசம் என்பதை நம்பி கோடிக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்த காரணத்தால் காவல்துறை அவர்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை.
மேலும் தடுப்புகளை உடைத்துக் கொண்டு ஒழுக்கத்தை மீறி காட்டாற்று வெள்ளம் போல பக்தர்கள் நீராடப் பாய்ந்த காரணத்தால் இத்தனை உயிர்கள் பலியாகி உள்ளது.
சுய ஒழுக்கமே இல்லாதவர்கள் எப்படி பக்திமானாக முடியும்? முக்தியடைய முடியும்?
தனக்கு ஏதாவது ஒரு வழியில் முன்னேற்றம் கிடைத்து விட வேண்டும் என்று மூட நம்பிக்கை காரணமாக முண்டியடித்த கும்பல் இப்படி ஒரு அசம்பாவித சம்பவத்தில் சிக்கியிருக்கிறது.
இறந்து போன 30 பேரின் குடும்பமும் கதறி அழத்தான் செய்திருக்கிறார்கள். ஆம் அழத்தானே வேண்டும். நாம் வேண்டிய முக்தி கிடைத்து விட்டது என்று சிரிக்கவா முடியும்?
அவர்கள் என்ன சாவை வேண்டியா கும்பமேளாவிற்கு வந்தார்கள்?
இது தேவையா?
பக்தி என்ற பெயரில் அதிதீவிரமான மூடநம்பிக்கை காரணமாக இத்தனை உயிர் போகத்தான் வேண்டுமா?
இது முதல் சம்பவமும் அல்ல.
இது போல பல கூட்ட நெரிசல் சாவு வரலாறும் உண்டு. அதுவும் கூட மதவிழா கூட்டத்தில் ஏற்பட்டவை தான்.
இஸ்ரோ 100 ராக்கெட் விட்டென்ன?
செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்தென்ன?
நாம் இன்னும் செவ்வாய் தோஷப் பரிகார நம்பிக்கையை விட்ட பாடில்லை.
ஆதங்கத்துடன் நினைவுகள்.