இந்த வாரம் வெளியான படங்கள் எல்லாமே பெரிய நடிகர்களோ, எதிர்பார்ப்போ, விளம்பரங்களோ இல்லாமல், தன்னை நம்பி வெளியானவை.
அதாவது நல்ல கதைக்களம், திரைக்கதை அமைப்பு உடையவை போல.
மிகப்பெரிய செலவு, விளம்பரம் இல்லாமல் இது அது மாதிரி தான் இருக்கும் போல என்று எதிர்பார்ப்புக் குறைவாக வந்து இன்று பல ரசிகர்களாலும் பத்துக்கு பத்து மதிப்பெண் வழங்கப்படும் படம் டிராகன்.
இந்தப்படத்தின் இயக்குனர் மாரிமுத்து அவர்கள், கதைக்கு மெனக்கெடவில்லை.
தனது முந்தைய படமான ஓ மை கடவுளே படத்தின் கதைக்கருவை அப்படியே வேறு ஒரு சூழ்நிலைக்கு வேறு ஒரு திரைக்கதைக்கு மாற்றிவிட்டார்.
ஆம். வாழ்வில் நாம் செய்யும் தவறுகளைத் திருத்திக்கொள்ள ஒரு இரண்டாம் வாய்ப்பு அமைந்தால் எப்படி இருக்கும் என்ற மையக்கரு தான் இந்தப்படத்தின் கதையும். ஆனால் திரைக்கதை வேறு.
கடந்த படத்தில் திருமண உறவில் ஏற்பட்ட விரிசலை மையமாகக் கொண்டு நகர்ந்த கதை, இந்தப்படத்தில் ஒரு இளைஞன் தனது தவறான உணர்ச்சிகளால், தனது சுயவாழ்வை இழந்து தன்னைத்தானே தறுதலையாக மாற்றிக் கொண்டு தனது இளம் வயதில் செய்யும் தவறுகளால், சிறிது காலத்திறகுப் பிறகு சந்திக்கும் விளைவுகளை, எப்படி மீண்டும் திருத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது என்பதே கதை.
எல்லா நேரத்திலும் நமது வாழ்வின் மாற்றத்தை கடவுள் வந்து செய்ய மாட்டார், சில நேரங்களில் மனிதர்களும் வந்து நம்மை வழிநடத்துவார்கள் என்பதை திரைக்கதையில் சொல்லியிருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை என்ற ரீதியில் இதுதான் என்று மிகத்தெளிவான வரையைறைக்கு வந்த பிறகு, காட்சியமைப்புகளில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும்படியாக, ஜனரஞ்சகமாக, சிரிப்பாக, சுவாரஸ்யமாக, உணர்ச்சிவசமாக, என பல்வேறு வடிவங்களில் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாலேயே இந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடாப்படுகிறது.
மேலும் இந்தப்படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், தங்கம் கடத்தினாலும் சரி, செம்மரம் கடத்தினாலும் சரி, கதாநாயகன் தான் வெல்வான் என்று கதாநாயகன் வெற்றி பெற்று வாழ்வில் உச்சமடைந்தான் என்று காட்டாமல்,
தன் வினை தன்னைச் சுடும்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
செய்யும் பாவம் சும்மா விடாது
நல்லவர்களுக்கு சோதனை வந்தாலும் இறுதியில் நல்லதே நடக்கும்
என்று கதையை முடித்திருப்பதால் ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி.
இந்தப்படத்தில் மாஸ் கதாநாயகன் இருந்து இது மாதிரி கதையை முடித்திருந்தால், அடடா கதாநாயகன் ஜெயிச்ச மாதிரி இருந்தா படம் நல்லா இருந்திருக்குமேனு ஒரு எதிர்மறை விமர்சனம் கிளம்பியிருக்கும்.
ஆனால் இந்தப்படத்தின் நாயகனை, நடிகர் பட்டாளத்தின் நடுவே, அவனையும் நம்மைப்போல ஒரு சக மனிதனாக ரசிக்க வைத்திருப்பது தான், கதையை நாம் மனதார ஏற்றுக் கொள்ள உதவுகிறது.
இதற்கு பிரதீப்பை தேர்ந்தெடுத்தது சரியான முடிவு. மிடுக்கான தோற்றத்தில் ஆரம்பித்து இறங்கி அடிக்கும் கல்லூரி முதல்வராக மிஷ்கின் அட்டகாசம்
மேலும், GVM, K.S.R ஆகியோரும் தனது பணியை நறுக்கென சிறப்பாகச் செய்திருப்பது அழகு.
ஒத்த பிள்ளையைப் பெற்று அது என்ன சொன்னாலும் நம்பி பாசம் காட்டும் அப்பாவி அப்பாவாக ஜார்ஜ் மரியான் வாழ்ந்திருக்கிறார்.
இதையெல்லாம் விட படத்தைத் தூக்கி நிறுத்துவது, கதாநாயகன் நட்பு வட்டார கலகல காட்சிகளும், கல்லூரி பின்புலக் காட்சிகளும் தான்.
அந்த விதத்தில் விஜே சித்து மற்றும் குட்டி டிராகனாக வரும் நடிகர்கள் அதகளம்.
கல்லூரி காட்சிகளைப் பல படங்களில் நாம் பார்த்து ரசித்தருந்தாலும் இந்தப்படத்தில் அது காட்டப்பட்ட கோணம் வேறு ரகம் என்பதால் நம்மை குதூகலப்படுத்துகிறது.
மொத்தத்தில் ரொம்ப ஜாலியா ஒரு சோசியல் மெசேஜ்.
9.5/10 – கூட தாராளமா கொடுக்கலாம்.
இந்த D Raghavan க்கு.
Sorry Dragon ku.
அட அத சொல்ல மறந்துட்டேங்க. படத்த முதல் காட்சியில இருந்தே பாருங்க.
கதாநாயகனுக்கு எப்படி Dragon ன் பேரு வந்துச்சுனு ஒரு Spoof இருக்கும் அதுலயே நாம நல்ல படம் பாக்கப் போறோம்னு நம்பிக்கை வந்துரும்.
நம்பி வாங்க சந்தோஷமா போங்க. என்று சொல்லாமல் செய்திருக்கிறார்கள்.