டிஜிட்டல் பண பரிவர்த்தனை உபயோகத்தினால் நமக்கு நல்லது நடக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக பாதிப்புகள் உள்ளன என்று ஆங்காங்கே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அதாவது பணத்தை நாம் கையில் எடுத்து அதை உறவாடி செலவு செய்யும் போது இருக்கும் கவனமும், திருப்தியும், டிஜிட்டல் வழியில் செலவு செய்தால் கிடைப்பதில்லை. மேலும் பணம் நம்மிடம் இருந்து வெளியே போவதை உணராமல் செலவு செய்யும் காரணத்தால், பணத்தை சேமிக்கும் எண்ணமும் குறைந்து வருவதாகவும் பேச்சு உள்ளது.
இதில் சேமிப்பு குணம் என்பது வங்கியில் பணம் போடும் காலத்தில் துவங்கி சிறிது சிறிதாகத் தேய்ந்து வருவதாக சொல்லப்பட்டாலும், செலவு செய்வது என்பது இந்த டிஜிட்டல் பணபரிவர்த்தனை காரணமாக, கணக்கு வழக்கில்லாமல் ஆரவாரமாக எளிதாக நிகழ்ந்து விடுகிறது என்பது உணரப்படுகிறது.
எனக்கு சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம் இதற்கு உதாரணம். டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் சில நேரங்களில் நமது சுயநினைவில்லாமல் கூட எளிதாகப் பணப்பரிவர்த்தனை நிகழ்ந்து விடும் என்பதற்கான உதாரணம்.
ஆம். ஆயிரம் ரூபாய் நம் கையில் இருந்து செலவு செய்வதாக இருந்தால் மனதில் எவ்வளவு பாரம் இருக்கும்?
பத்து நூறு ரூபாய் தாள்களை அல்லது இரண்டு 500 ரூபாய் தாளை எண்ணிக் கொடுக்கும் போது, ஒரு நிமிடம் தோன்றும், ஆயிரம் ஓவா செலவாயிடுச்சே என்று.
ஆனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் சுயநினைவில்லாமல் கூட 1000 ரூ செலவாகி விடுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஊருக்குப் போவதற்காக பயண ஏற்பாடுகளில் இருந்தேன்.
இரவில் மகிழுந்தை இயக்க வேண்டும் என்பதற்காக மாலை வேளையில் அரைத்தூக்கத்தோடு சில வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன்.
அதில் ஒன்று, சுங்கச்சாவடிக்காக முன்பணம் செலுத்துதல்.
சுங்கச்சாவடிக்குத் தேவை என்பதற்காக ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி விட்டேன்.
அதை மறந்தும் விட்டேன்.
பிறகு மகிழுந்தில் சென்று கொண்டிருந்த போது , இன்று என்னவெல்லாம் செலவாகியிருக்கிறது என்ற பட்டியலைப் பார்த்த போது, மற்ற பரிவர்த்தனைகள் எனக்கு நினைவில் இருந்தன. ஆனால் இந்த ஆயிரம் ரூபாய் மறந்து விட்டது.
ஆயிரம் ரூபாய் எங்கே செலவு செய்தோம், நாம் தான் இரவு 8 மணி அளவில் வீட்டிற்குள்ளே தானே இருந்தோம், எந்தக்கடைக்கும் சென்று எந்தப்பொருளும் வாங்கவில்லையே என்று மண்டை குழம்பியது.
குழப்பம் தீராத காரணத்தால், செயலியில் நுழைந்து தகவலைப் பார்த்த போது, aggregator settlement cc avenue என்று இருந்தது. அப்படியென்றால் பணம் வசூலிக்கும் மையம் என்ற தகவலைத்தவிர்த்து வேறு ஏதும் தெரியவில்லை.
நமது அலைபேசி தகவல்கள் திருடப்பட்டுவிட்டதா?
ஹேக் செய்யப்பட்டு பணம் வெளியேறிவிட்டதா என்று பயம் ஏற்பட்டு விட்டது.
உடனடியாக அந்த பணப்பரிவர்த்தனை வழியை தடை செய்து விட்டு சைபர் க்ரைம் பிரிவுக்கு போன் செய்து எனது கணக்கிலிருந்து எனக்கே தெரியாமல் ஆயிரம் ரூபாய் பணம் போய்விட்டதாகக் கூறினேன்.
அவர்கள் முதலில் அந்தச் செயலியின் உதவி எண்ணை அழைத்து முழுத்தகவலையும் சேகரித்து, வங்கியில் புகார் அளிக்கும்படி கூறினார்கள்.
பிறகு அந்தச்செயலியின் உதவி எண்ணை அழைத்துக் காரசாரமாக அந்தச்செயலி எப்படி என் பணத்தை என்னைக் கேட்காமல் எடுக்கலாம் என்று வாதிட்டேன்.
ஆனால் அந்தப்பக்கம் பேசிய உதவியாளர் அது போல வாய்ப்பு இல்லை. தாங்கள் முதலில் வங்கியில் விசாரிக்கவும், அது சரிவராவிட்டால் NPCI- ல் புகார் அளிக்கவும் என்று கூறினார்.

NPCI- National Payments Corporation of India.
இதைக் கேட்ட பிறகு தான் எனக்கு மண்டையில் உரைத்தது. நாம்தான் அந்த ஆயிரம் ரூபாயை சுங்கச்சாவடி முன்பணமாகக் கட்டினோம் என்று.
ஏனென்றால் பல சுங்கச்சாவடிகளிலும் அந்த பாஸ்டேக் அட்டைகளிலும் NPCI என்பதைப் பார்க்க இயலும். அதை வைத்துதான் இது ஞாபகத்திற்கு வந்தது.
அந்த உதவியாளரிடம் வழிந்து கொண்டே, எங்க மாமா NPCI ல் பெரிய பதவியில் இருக்கிறார். நான் அவரிடம் பேசி ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொள்கிறேன். தங்கள் தகவலுக்கு நன்றி என்று இணைப்பைத் துண்டித்து விட்டேன்.
இந்த சம்பவத்தில் எனது சொந்த அனுபவம் என்ன பாருங்களேன். ஆயிரம் ரூபாய் செலவழிந்தது எந்த விதத்தில் என்பது கூட ஞாபகமில்லாமல் அவ்வளவு எளிதாக செலவழிந்திருக்கிறது.
செலவழிக்கும் வழி அவ்வளவு எளிதாகி விட்டது.
ஆனால் சம்பாதிப்பது இன்னும் பழைய மாதிரி கடினமாகத்தான் உள்ளது.
எனவே டிஜிட்டல் பரிவர்த்தணைகளின் போது உஷார்.
அன்புடன் நினைவுகள்.