பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 4
மல்லிகா படபடக்க ஆட்டோக்கார அண்ணனின் வாயைப் பார்க்க, அவரோ வாயிலிருந்த வெற்றிலை பாக்கை துப்பிவிட்டு, “ஏம்மா பதட்டம்?
சவாரிக்கு கிளம்புற முன்னாடி பிள்ளை எப்படி இருக்கான்னு ஒரு எட்டு பாத்துட்டு போலாம்னு வந்தேன்!”
“நீ போயி வேலையப்பாருமா!
நான் கிளம்புறேன்,” என்று மல்லிகாவின் மகனை கூப்பிட்டு ஏதோ விசாரித்து விட்டு, கையிலிருந்த பிஸ்கட் பாக்கெட்டையும் கொடுத்து விட்டு கிளம்பினார்.
மல்லிகா கணவரின் வருகைக்காக, வாசலையே வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள். மல்லிகாவின் மகன்களோ இன்னும் அடங்கவில்லை. திண்பண்டத்திற்கு அடிபுடி.
“டேய் பேசாம சாப்புடுறீங்களா, அடி வெளுக்கவா?” என்று அதட்டிவிட்டு, மல்லிகா காலை உணவைத் தயாரிக்க கிளம்பினாள்!
ஆட்டோக்காரர் சவாரிக்கு கிளம்பி சென்றும், வெகு நேரமாகியும் சவாரி ஏதும் கிடைக்கவில்லை.
என்னடா இது, என்ற வெறுப்புடன், ஆட்டோவில் பாடலை ஒலிக்கச் செய்தார்.
அழகான திருவிழா பாடல். ஆம், மாரியம்மன் கோவில் திருவிழாக்களில் கண்டிப்பாக ஒலிக்கும் பாடல்களில் ஏதோ ஒன்று ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ஆட்டோக்காரர் அதை அப்படியே உள்வாங்கி ரசித்துக்கொண்டே இருக்கையில் சாய,
மல்லிகாவும் இங்கே அதே பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறாள்.
மல்லிகாவை அந்த பாடல், தன் ஊருக்கு கூட்டிச் சென்றது. திருவிழா சமயங்களில் இந்த பாடல் ஒலிக்காத நாட்கள் இல்லையாதலால், மல்லிகாவுக்கு திருவிழா ஞாபகம் வந்துவிட்டது!
மகன் இப்படி அடிபட்டுக்கிடப்பதற்கு ஏதோ வேண்டுதல் பாக்கி காரணமாக இருக்கலாம் என்று மனம் குடைய, இந்த முறை ஊர்த்திருவிழாவில் இரு மகன்களுக்கும் மொட்டை அடித்து, கிடாய் ஒன்று வெட்டுவதாக மல்லிகா அப்போதே வேண்டிக்கொண்டாள்.
கிடாய் வெட்டுவதில் சூரன் கந்தசாமி!
கிடாய் வெட்டுவது அவ்வளவு எளிதல்ல,
குலைக்கு தலை நீட்டும் அந்த சில வினாடிகளில், தலையை அரிவாள் பதம் பார்க்க வேண்டும்.
அப்படி பதம் பார்க்கப்பட்ட தலை துண்டாகி விழ வேண்டும். இல்லையென்றால் அது தொங்கு கிடாயாகிப்போகும்!
கிடாய் வெட்டுவது ஒரு சிலருக்கு மட்டுமே கை வந்த கலையாக இருக்கும். அப்படி ஒரு பிஸ்து தான் நம் கந்தசாமி. கந்தசாமி வெட்டி இதுவரை ஒரு தலை கூட தொங்கியதில்லை.
மிகப்பெரிய வயதைடைந்த வலுத்த கிடாயை பதம் பார்க்க வேண்டுமென்றால் கந்தசாமியே முதல் தேர்வு!
ஊர் திருவிழாக்களில் கிடாயை வெட்டி ரத்தக் கறையுடன் கொடூரமாக காட்சி அளிக்கும் கந்தசாமியின் வெள்ளை மனதும் அனைவருக்கும் தெரிந்ததே!
இப்படி பல வித்தைகளை வைத்து தான் கந்தசாமி மல்லிகாவின் மனதை வென்றான்.
ஊர் நினைப்பு வந்துவிட்டாலே மல்லிகாவும் குழந்தைதான். நாட்காட்டியை விறுவிறுவென திருப்பி, இன்னும் எத்தனை நாட்கள் இருக்கு என விரல் விட்டு எண்ணத் துவங்கினாள்.
நேரம் 7.45 ஆனதால், காலை சிற்றுண்டிக்கு ஏதாவது தயார் செய்ய வேண்டும் என காய்கறிகளை நறுக்க துவங்கினாள்!
ஆட்டோக்காரருக்கு அந்த நேரம் சவாரி கிடைத்தது.
எங்க சார் போவனும்?
“சோழிங்கநல்லூர் பா. எவ்வளவு கேட்குற?
50 ரூபா குடு சார்.”
“ஏம்ப்பா, 35 ரூபா தானே? நீ என்ன 50 ரூபா கேட்குற?”
“சார், மொத சவாரி சார்.
சரி சார், மனசு கோணாது 40 ரூபா குடு சார்.”
“நல்ல பக்தி பாட்ட கேட்டுக்கிட்டே போலாம் ஏறு சார்!”
என்று வண்டியை கிளப்புகிறார்.
ஆட்டோ srp tools signal அருகே சென்றதும், ஒரு கும்பல் ஆட்டோவிற்கு கை காட்டுகிறது.
“என்னப்பா?” என்று ஆட்டோக்காரர் கேட்க,
“அண்ணா, யாரோ அடிபட்டு கிடக்கிறாங்கணா, ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணோம், வர லேட் ஆகுதுணா!
கொஞ்சம் வாங்கணா, ஆஸ்பத்திரி வரைக்கும் போகனும்” என்று கும்பலில் ஒருவர் கூற.
“அய்ய, இது போலிஸ் கேஸ் பா.
உதவி செய்றதில்லாம இவனுங்கள்ட்ட யாரு பதில் சொல்றது.
நீ ஆம்பலன்ஸ் வருதா பாரு.
நானே சவாரி இல்லாம, இப்பதான் ஒரு சவாரி கிடைச்சு போயிட்டு இருக்கேன்.“
ஆம்புலன்ஸ் வந்துடும் போப்பா என்று கூறிக்கொண்டிருக்கும் போதே,
சவாரியில் இருந்த நபர், “அவங்க கிட்ட ஏங்க வழவழன்னு பேசுறீங்க? எனக்கு நேரமாகுது” என்று சொல்ல, ஆட்டோக்காரர் கிளம்பிவிட்டார்.
மனிதாபிமானம், பாசம் நிறைந்த ஆட்டோக்காரர் தான் இப்படி நடந்துகொண்டார்.
நேற்று தன் அருகில் வசிப்பவருக்கு ஒரு முகம்.
இன்று சாலையில் தெரியாத நபருக்கு வேறொரு முகம்!
மனிதாபிமானம் கூட சில நேரம் ஆள் பார்த்து வரும் போலவே?
ஆனால் நம்ம ஆட்டோக்காரருக்கு பாவம் தெரியவில்லை, அடிபட்டு துடித்துக் கொண்டிருப்பது கந்தசாமி என்று!
—
தொடரும்