Categories
தொடர்கதை

ஆயிரத்தில் ஒருவன் –   பாகம் -6

பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 4, பாகம் 5

ஆமாம். மனிதநேயம் இங்கே தெரிந்தவர், தெரியாதவர் என்று பார்த்து தானே வருகிறது. ஆட்டோக்காரருக்கு அங்கே அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது கந்தசாமி என்பது தெரியாமல் போனதே?

சிறிது நேரத்தில், ஆட்டோ சோழிங்கநல்லூரை அடைந்தது. ஆட்டோக்காரர், பைசாவை வாங்கிவிட்டு காலையில் பசியாற ஏதாவது உணவகம் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தார். அருகிலிருந்த ஒரு மரத்தடியில், பாட்டி ஒருவர் சிறிய கடை ஒன்றை வைத்திருந்ததை கவனித்த ஆட்டோக்காரர், அங்கே சென்று பசியாறலாம் என முடிவு செய்தார்!

ஆட்டோவை ஓரம்கட்டி விட்டு, அந்த கிழவி அருகே சென்று, “என்ன பாட்டி, நாஷ்டாவா?
என்ன இருக்குது?” என்று கேட்கவும், கிழவி கனீர் என்ற குரலில், “உனக்கு இன்னா வோணும், தோசையா, இட்லியா, ஆப்பமா, பூரியா?” என்று கேட்க, “சரிதாம்மா, இட்லி கொடும்மா” என்று ஆட்டோக்காரர் வாங்கிக் கொண்டார்.

“ஏம்மா, இப்படி வயசான காலத்துல தனியா கஷ்டப்படுறியே, புள்ள குட்டி இல்லியா உனக்கு?”என்று ஆட்டோக்காரர் கேட்க, “ஏன், உனக்கு இன்னா வந்துச்சு, நீ வூட்டாண்ட இட்னு போயி சோறு போடப் போறியா?” என்று கிழவி எகிறியது.
“ஏம்மா, வயசான காலத்துல, இப்படி கஷ்டப்படிறியேனு கேட்டேன். எனக்கு ஏம்மா பொல்லாப்பு” என்று ஆட்டோக்காரர் வாயை மூடிக்கொண்டார்.

சிறிது நேரம் கழித்து, கிழவி பேச ஆரம்பித்தாள்.

“இருந்தாங்கப்பா, புள்ள, மருமக, பேரப் பசங்க எல்லாம்!”

“இப்ப எங்கம்மா போனாங்க?” என்று ஆட்டோக்காரர், கேட்கவும், கிழவியின் கண்களில் சிறிய நீர்க்கசிவு.

“புள்ள ஒருநா வேலைக்கு போயிட்டு வந்துக்கிட்டு இருந்தப்ப, ஏதோ படுபாவி வண்டில அடிச்சுப்போட்டு போயிட்டம்பா! ரொம்ப நேரமா உசுர கைல புடிச்சிக்கிட்டு ரோட்டுல தவிச்சுருக்கான்.
ரோட்டுல போற இத்தனை வண்டியில ஏதாவது ஒரு வண்டி நம்மள ஆஸ்பத்திரில தூக்கி கொண்டு சேத்துராதான்னு.

யாருமே நிக்கலப்பா.

ஆம்புலன்ஸ் சரியான நேரத்துக்கு வந்திருந்தா உசுர காப்பாத்தியிருக்கலாம்னு டாக்டர் சொன்னாரு.
நம்ம ஊர்ல, ஆம்புலன்ஸ்ல தான், அடிபட்டவன் போவனும், நாம தூக்கிட்டு போனா  போலிஸ் கேஸ் ஆயிடும்னு தான், யாருமே உதவி செய்றதில்லையேப்பா?”

“போற  உசுரு பொசுக்குனு போயிருந்தா பரவாலப்பா, ஆனா வண்டிய யாருமே நிறுத்தாம, தவிச்சு போயி செத்துப்போச்சு எம்புள்ள, அதுக்கப்புறம் மருமகளையும், பேரப்பசங்களையும் அவங்க வீட்ல கூப்பிட்டுக்கிட்டாங்கப்பா, எனக்கு அங்க போயி சாப்புட விருப்பமில்லை. நீ வுடுப்பா.

ராஜா, யாருனா அடிபட்டு கிடந்தா ஆஸ்பத்திரிக்கு உடனே தூக்கிட்டு போ ராஜா, இந்த கிழவி மாதிரி யாருக்கும் நிலைமை வரக்கூடாதுல.”

ஆட்டோக்காரருக்கு சாப்பாடு இறங்கவில்லை. கைகழுவி விட்டார்.

என்ன கண்ணு, சாப்புடம, கைய கழுவிட்ட?
என் கதைய சொல்லி உன்ன கஷ்டப்படுத்திட்டனா?
சரி துட்டு வோணாம் கண்ணு, அப்புறமா எங்கயாச்சும் பசியாறிக்க, என்று கிழவி வெள்ளந்தியாய்க்கூற, ஆட்டோக்காரருக்கு சாட்டையால் அடித்தது போல இருந்தது.

மிகப்பெரிய குற்ற உணர்வுடன், ஆட்டோ அருகே வந்தபோது, அவரது அலைபேசி ஒலித்தது.

கந்தசாமியின் எண்ணிலிருந்து அழைப்பு!

“சொல்லு கந்தசாமி” என்று ஆட்டோக்காரர் பேசவும், எதிர்முனையில், “இவரு பேரு கந்தசாமியா?
SRP Tools signal கிட்ட அடிபட்டு கிடந்தாரு, இப்ப அடையார் ஆஸ்பத்திரில சேத்துருக்கு, வந்து சேருங்க,” என்று பேசிவிட்டு அலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்கள்!

ஆட்டோக்காரர், முழுதாக நடைபிணமாகிப்போனார்.
நம்ம கந்தசாமியத்தான் நாம ரோட்டுல, தவிக்க விட்டுட்டோமா என்ற குற்ற உணர்ச்சி அவரை வாட்டி வதைக்க, இப்போது எங்கே போவது,
கந்தசாமியின் வீட்டிற்கு சென்று மல்லாகாவிடம் விஷயத்தை சொல்லி, அவளையும் கூட்டிச் செல்லலாமா? அல்லது ஆஸ்பத்திரிக்கு போய் கந்தசாமியை பார்த்த பின் மல்லகாவிடம் சொல்லலாமா என்ற குழப்பம்.

வண்டியை கிளப்பும் போது , மீண்டும் கந்தசாமியின் எண்ணிலிருந்து அழைப்பு.
“இவரு ப்ளட் குரூப் தெரியுமா?” என்று எதிர்முனையில் கேள்வி வர, “இல்லமா, நான் பக்கத்து வீட்டுக்காரன், ஒரு 20 நிமிஷத்துல அவரு வீட்டாண்ட, போயிட்டு சொல்றேன்” என்று அலைபேசியை துண்டித்து விட்டு, ஆட்டோவை கிளப்பி பறந்தார்!

போகும் வழியில், இடைவிடாமல், இன்னொரு எண்ணிலிருந்து அழைப்பு வந்துகொண்டிருக்க, ஆட்டோக்காரர் வேறு வழியில்லாமல் அந்த அழைப்பை ஏற்றார்.

“அண்ணா, ஆட்டோவா, என் சம்சாரத்துக்கு பிரசவ வலி வந்துடுச்சுணா, அன்னிக்கு இந்திரா நகர்ல சவாரி வந்தீங்களே ஞாபகம் இருக்காணா?

ஆம்புலன்ஸ் இந்த சந்துல வராது சொல்லிட்டாங்கணா. ஆட்டோல, ஜெயந்தி தியேட்டர் சிக்னல் வரைக்கும் விட்டா கூட போதும்ணா” என்று ஆட்டோக்காரரை பேசக்கூட விடாமல் எதிர்முனையில் அவர் கதற?

ஆட்டோக்கார்ருக்கு மிகப்பெரிய குழப்பம்!
தான் செய்த தவறை சரி செய்ய கந்தசாமியை பார்க்கச் செல்வதா? இல்லை பிரசவத்தில் துடிக்கும் அந்த பெண்மணிக்கு உதவுவதா?

பிரசவத்தில் துடிக்கும் பெண்ணுக்கு உதவாமல் போவது உலகின் மிகப்பெரிய பாதகமாயிற்றே?
கந்தசாமியின் ரத்த குரூப் என்ன என்று சொல்ல அவன் வீட்டிற்கு போயாக வேண்டுமே?

கந்தசாமியை முதலிலேயே நாம் தூக்கி கொண்டு போயி ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தால் இந்த நிலை வந்திருக்காதே?

ஒருவேளை கந்தசாமிக்கு ஏதாவது நடந்தால் அந்த கிழவி போல மல்லிகாவும்? அய்யோ கடவுளே?
ஏன் உனக்கு இந்த கல்நெஞ்சம்? உண்மையிலேயே நீ இருக்கியா?

ஆட்டோக்காரர் என்ன செய்யப்போகிறார்?

தொடரும்