Categories
தொடர்கதை

ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 3

பாகம் 01, பாகம் 02

மல்லிகாவோ மனதில் திகிலுடனும், பக்தியுடனும் கடவுளாக மருத்துவரை கை எடுத்து கும்பிட்டு என்ன ஆச்சுங்கய்யா என்று கேட்க,
மருத்துவர், “பயப்படும்படியா ஒன்னுமில்ல மா!
கண்ணுக்கு மேல பட்ட அடி கண்ணுல பட்டிருந்தா கஷ்டமாயிருக்கும். அடி பலமா பட்டதால நிறைய இரத்தம் போயிருக்கு, அத பாத்ததும் பையன் மயங்கிட்டான்.”

“நான் வலிக்கு ஊசி போட்டு, அந்த இடத்துல தையல் போட்டுருக்கேன், அங்க நர்ஸ்ட்ட மருந்து மாத்திரை எல்லாம் வாங்கிக்கோங்க, எப்படி சாப்பிடனும்னு கேட்டுக்கோங்க!”

“இப்ப பால் பிஸ்கட் ஏதாவது கொடுங்க!
ஒரு அரைமணி நேரத்துல பையன் தெளிவாயிடுவான்!
பாத்து விளையாட சொல்லுங்க மா!”

மல்லிகாவுக்கு உயிர் திரும்ப வந்து விட்டது!
மல்லிகாவின் மூத்த பிள்ளை குற்ற உணர்ச்சியில் சிறைபட்டிருந்த கைதியாக இருந்தான், இப்போதுதான் அவனுக்கு விடுதலை கிடைத்தது!

ஆட்டோக்காரரும் மனமகிழ்ச்சியுடன், ரொம்ப நன்றி டாக்டர் என்று கூற, மருத்துவர் நகர்ந்தார்!

ஆட்டோக்காரர், மல்லிகாவிடம், “நல்ல வேளை உன் வூட்டுக்காரனான்ட எதுவும் சொல்லல, இல்லாட்டி அவருக்கும் தேவையில்லாத பதட்டம் தான், நீ சரியான ஆளுமா!

சரிமா உன் வூட்டுக்காரன் மறுபடியும் ஏதோ வேலையா மேஸ்திரிய பாக்க போராராம், நைட்டு வர லேட் ஆவுமாம், நீ புள்ளைங்கலாம் சாப்புட்டு பூட்டிக்கிட்டு படுத்துக்குவீங்களாமா, சொல்ல சொன்னாருமா!

நீ இருமா, நான் போயி பாலும் பிஸ்கட்டும் வாங்கியாறேன்!
டே பையா வாடா, நாம கடையாண்ட டீ சாப்புட்டு வரலாம் என்று மூத்தவனை அழைத்துக்கொண்டு செல்கிறார்!”

செய்த தர்மம் தலைகாக்கும் என்று நமக்கு தெரியும், ஆனா இவ்வளவு வேகமாவா என்று நினைக்க வேண்டாம்!

நமக்கு கந்தசாமி, மல்லிகா உடைய முந்தைய வாழ்க்கை பற்றி எல்லாம் தெரியாதல்லவா?

கந்தசாமி முன் கூறியதைப்போல சென்னை வாசி அல்ல. பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஒரு ஊர் ரகம்தான்!

கந்தசாமியின் பூர்விகம் தென்காசி அருகே  ஒரு நல்ல கிராமம். வயல்வெளிகளும், குற்றால சாரலும், வீசும் தென்றலும், பட்டாம்பூச்சியும், பறவையும், மயிலும், குயிலும், அணிலும், தவளையும், ஓணானும், ஆடும், மாடும், கிணறும், கண்மாயும், குளமும், குட்டையும், பம்பு செட்டும் என பாரதிராஜா படத்தில் காட்டப்படும் கிராமங்களுக்கு சற்றும் குறைவில்லாத ஒரு ஊராட்சி ஒன்றியம்!

கந்தசாமியின் அப்பா , அம்மாவுக்கு தனது தோட்டத்தை விட்டா வீடு , வீடை விட்டால் தோட்டம் தான்! பெரிய பண்ணையம் அல்ல, ஒரு நான்கு முதல் ஐந்து பேரை நடவுக்கும், அறுப்புக்கும் அழைத்துக்கொள்வார்கள்! மற்ற நேரத்தில் எல்லாம் இவர்கள் இருவருமே பார்த்துக்கொள்வார்கள்.

படிப்பில் பெரிய பிடிப்பு இல்லாத கந்தசாமி எப்போதும் தோட்டத்தில் அப்பா அம்மாவுடன் தான் கிடப்பான்.

மீதி நேரங்களில் கிணற்று குளியல், அணில் பிடிப்பது, ஓணானை கொல்வது போன்ற விளையாட்டுகள்!

அணில் ராமருக்கு இளநீர் பறித்துக்கொடுத்தது, ஓணான் ஒன்னுக்கு கொடுத்தது என்ற மூடநம்பிக்கை கந்தசாமிக்கு மட்டுமல்ல, அவர் பிள்ளைகள் வரை பரவித்தான் கிடக்கிறதே?

கந்தசாமி பெரிய நீச்சல் வித்தைக்காரனும் கூட!

கிட்டிப்புள்ளையிலும் சரி, பம்பரத்திலும் சரி கந்தசாமியை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது!

படிக்க போகவில்லை! ஒருவேளை போயிருந்தால் இன்று கந்தசாமி அதே சென்னையின் ஓ எம் ஆர் சாலைகளில் கார்களில் வலம் வந்திருக்கக் கூடும்!
படிக்காவிட்டால் என்ன, நாமதான் தோட்டம் வைத்திருக்கிறோமே, விவசாயி ஆச்சே, நமக்கென்ன? ஊருக்கே சோறு போடும் ராஜா என்று எண்ணியிருந்த கந்தசாமியின் நினைப்பிலும் மண் விழத்தான் செய்தது!

தோட்டம் வைத்திருந்த கந்தசாமி எப்படி இப்படி கிட்டதட்ட பரதேசி ஆனார் என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை!

மல்லிகாவும் சளைத்தவளல்ல, கந்தசாமி போல ஒரு கிராமத்துக்காரி தான்!

மல்லிகா கந்தசாமியை திருமணம் செய்யும் போது கந்தசாமி முதலாளி! ஆனாலும் கந்தசாமியின் பணம் அவளை மயக்கிவிடவில்லை! அந்த கதையே வேற!

சிறு வயதிலேயே கில்லியாக இருந்த கந்தசாமி விடலைப்பருவத்தில் எப்படி இருந்திருப்பான் என்று சொல்லவா வேண்டும்?

அலங்காநல்லூர் காளை வந்தாலும் அடக்கக் கூடிய காளையாக வர்ணிக்கப்படுவான்!
சுற்றுப்பட்டில் கந்தசாமியை ஓரக்கண்ணால் பார்க்காதவள் இருப்பாள் எனில், ஒன்று அவளுக்கு பார்வையில்  குறைபாடு, அல்லது மூளையில் குறைபாடு என்று அந்த ஊர் இளசுகள் பெருமை பாடும்!

ரேக்ளா ரேஸ் முதல், ஜல்லிக்கட்டு வரை,
சேவல் சண்டை முதல் சீட்டுக்கட்டு வரை கந்தசாமியை அடித்துக்கொள்ள கந்தசாமியின் வாரிசு தான் வரவேண்டும் என்று அந்த ஊர் பெருசுகள் பேசிக்கொள்ளும்!

கோவில் திருவிழா முதல் வார சந்தை வரை கந்தசாமியின் சேட்டைகளும், அடாவடிகளும் நீளும்!

ஆனால் இன்னொரு புறம் கந்தசாமியின் முகம் வேறு!
படிக்காவிட்டாலும் தீண்டாமை ஒழித்தவன்!
பாமரனுக்கும் பங்கிட்டு கொடுத்தவன்!

விதை நெல்லை தவிர மீதியை தனக்கென்று எடுத்துக்கொள்ள மாட்டான்!

ஊரில் யாருக்கு கஷ்டம்னாலும் கந்தசாமியின் உதவி கிடைக்கும்!

கோவில் திருவிழாக்களில் இவனுடைய செலவே பாதி இருக்கும்!

இப்படிப்பட்ட ஆளை மணக்க மல்லிகாவிற்கு வேறேதும் காரணமா வேண்டும்?

கண்கள் கதை பேசி, கழுத்துக்கீழ்பார்வை போகாமல், உரசலும் இல்லாமல், உதடுகளும் ஒட்டாமல் காதலித்து முடித்தனர். ஆமாம், நம்ம சிட்டி காதல் இல்லங்க!

பழைய கிராமத்து காதல்!

தடாலடியாக ஒருநாள் கந்தசாமி, அவனுடைய தாயாரை அழைத்துக்கொண்டு மல்லிகா வீட்டிற்குள் நுழைந்தான்!

மல்லாகாவின் அப்பா அவர்களை அழைத்து மோர் கொடுக்க சொன்னார்!

“வாங்கம்மா, வாப்பா!
என்ன இவ்வளவு தூரம், ஏதும் விஷேசமா, உங்க அப்பாவும் நானும் சிநேகிதர்கள் தாம்பா, அப்பப்ப, நெல்லு மூட்டைய விக்கிறப்ப பாத்துக்குவோம், அவன் சாவுக்கு கூட வந்திருந்தேன், ஆனா அன்னிக்கு உங்கள பாத்து பேச மனமில்லாம வந்துட்டேம்ப்பா” என்று படபடவென பேச, கந்தசாமி வெடுக்கென்று “உங்க மகளை எனக்கு தருவீங்களா மாமா?” என்று கேட்டு விடுகிறான்!

மோர் குடிங்க என்று புன்னகையோடு உபசரித்துவிட்டு, “மல்லிகா நீ உள்ள போமா” என்று சொன்னார்!

சிறிது மௌனத்திற்கு பிறகு, “இல்லப்பா, உன் சாதி வேற, எங்க சாதி வேற, இது சரிவராது!

இதே வேற யாராவதா இருந்திருந்தா நடந்திருக்கிறதே வேற!

உங்க குடும்பத்து மேல எங்களுக்கு பெரிய மரியாதை உண்டு! தயவு செஞ்சு இடத்தை காலி பண்ணிடு”

என்று கந்தசாமியின் முகத்தை பார்க்காமல் குணிந்த தலையோடு பேசி அனுப்புகிறார்!

மல்லிகாவுக்கோ மனக்குமுறல்!

“அம்மா, அம்மா” என்று பையன் கூப்பிட்டதும் மல்லிகா ஓடிப்போய் பார்க்கிறாள், கண் பட்டை அருகே தையல்!

மகனின் அழகான முகத்தில் அதைக்கண்டதும் வெடித்து அழுகிறாள் மல்லிகா!

ஆட்டோக்காரர் ஆறுதல் சொல்லி மல்லிகாவுக்கு காபியும், பையனுக்கு பாலும் தருகிறார்!!

இருவரும் பருகிவிட்டு வீட்டிற்கு கிளம்புகிறார்கள்!

ஆட்டோவில் போகும் போது மல்லிகா மீண்டும் பழைய வாழ்வின் நினைவுகளை அசை போடத்துவங்குகிறாள்!

தொடரும்

பாகம் 04