குருதி வெள்ளத்தில் மகனை பார்த்த மல்லிகாவுக்கு கைகால் அசையவில்லை! ஆனால் பாசம் உந்துமல்லவா?
ஏன் எப்படி என்ற கேள்விகளை எழுப்பாமல், மூத்தவனை ஆட்டோ பிடித்து வர சொல்லி சாமர்த்தியமாக செயல்பட்டால் மல்லிகா!
பக்கத்து வீட்டு ஆட்டோகாரர் தான்.
பணம் பற்றியெல்லாம் கவலை கொள்ளாது ஏற்றி பரபரப்பாக ஓட்டிச்சென்றார்!
போகும் வழியில் இருந்த தனியார் மருத்துவமனைகளில் வண்டி நிற்கவில்லை. தனியார் மருத்துவமனை என்பது இவர்களை பொறுத்தவரை வெறும் பெரிய கட்டிடங்கள் தான்!
வேக வேகமாக திருவான்மியூர் சுகாதார நிலையம் நோக்கி ஆட்டோ பறந்தது!
இங்கே கந்தசாமி மனதில் ஏதோ நெருடல். தான் ஆடாவிட்டாலும் தசை ஆடுமே?
அந்த நேரத்தில் அந்த மாற்றுத்திறனாளி குறிக்கிட்டார்! ‘அண்ணே என்னிய அந்த பக்கமா விட்டுங்கணே! நான் வேலைய முடிச்சுட்டேன், சோழிங்கநல்லூர் போகனும்” அப்படின்னு கேட்க, கந்தசாமியும் ஒப்புக்கொண்டு இருவரும் சாலையை கடக்கிறார்கள்!
மாற்றுத்திறனாளிக்கோ மிகுந்த நெகிழ்ச்சி! ரொம்ப நன்றிணே! நான் வழக்கமா இந்த கடையில டீ சாப்பிட்டு தான் பஸ் ஏறுவேன்! எப்பயும் என் நண்பன் கூட இருப்பான், இன்னிக்கு நீங்க எனக்கு நண்பன் மாதிரி உதவி செஞ்சுருக்கீங்க, வாங்கணே டீ சாப்பிடலாம் என கூப்பிட, கந்தசாமிக்கு மனம் இலகுவானது.
ஆம் கந்தசாமி போன்ற ஆட்களை நண்பர் என சொல்ல சிலர்தானே கிடைக்கக்கூடும்?
வாங்க தம்பி, நான் டீ வாங்கி தரேன்னு கந்தசாமி சொல்ல, மாற்றுத்திறனாளி குறுக்கிட்டு, “இல்லணே உங்கள நண்பனா நினைச்சு வாங்கி கொடுக்கிறேன்!
நீங்க எங்கிட்ட பேனாவ பரிதாப்ப்பட்டு கூட வாங்கியிருக்கலாம்.
நீங்க எப்படி வாங்கி இருந்தாலும் பிரச்சினை இல்ல. அது என் தொழில். ஆனா டீ ய பரிதாபப்பட்டு வாங்கி கொடுத்தா, அது பிச்சை ஆயிடும்ணே!
என்ன பிஸினஸ்மேனாவே வாழ விடுங்கணே” என்று மாற்றுத்தினாளி சொன்ன வார்த்தைகள், அவரை தலை நிமிர்ந்து பார்க்க செய்தது!
வழக்கமான கடை என்பதால் பலத்த விசாரிப்புகளுடனும், புன்னகையுடனும் இனிமையான இரண்டு தேநீர் வந்து சேர்ந்தது. தேநீரை பருகிக் கொண்டே கந்தசாமி அவரிடம் ஏதோ கேட்க முயன்ற போது, கந்தசாமியின் அலைபேசி ஒலித்தது!
“எப்பா நான் பக்கத்து வீட்டு ஆட்டோக்காரன் பேசுறேன்பா”, என்று எதிர்முனையில் பேச, கந்தசாமி “சொல்லுங்க, அலோ” என்றார்!
உடனடியாக குரல் மாறுகிறது.
இப்போது மல்லிகாவின் குரல்.
“ஓன்னுமில்லங்க, நான்தான் பண்ண சொன்னேன்.
இவனுங்கள வீட்டுக்கு வந்து படிங்கடான்னு சொன்னா அடங்காம ஆடிக்கிட்டு இருந்தானுங்க, அதான் அண்ணன்ட்ட சொல்லி போன் பண்ண சொல்லி உங்கள் விட்டு சொல்ல சொல்லலாம்னு!
வேற ஒன்றும் இல்ல, நீங்க பாத்து வாங்க“ என கூறியதும், கந்தசாமிக்கு நெருடல் .
“என்ன புதுசா போன்லாம் பண்ணி பசங்கள கொற சொல்லுத? ஏதும் பிரச்சினையா?
கூட விளையாண்ட பயலுகள ஏதும் அடிச்சு கிடிச்சு போட்டானுவலா?“
கந்தசாமிக்கு ஏனோ மனைவியிடம் பேசும் போது ஊர்பாஷை வந்து விடும்!
“அதெல்லாம் இல்லங்க! தெருவுல ஒரே கூப்பாடு , சத்தம் அதிகமா இருந்திச்சு, அதான் கூப்புட்டு படிக்க சொன்னேன், அடங்காம திரிஞ்சானுவ, இரண்டு போடு போட்டு உட்கார வச்சுட்டேன், வீட்டுக்குள்ள வந்தும் டிவிய பாக்குறானுக, படிக்கல, அதான்…
சரி விடுங்க, நான் பாத்துக்கிறேன்! நீங்க பாத்து வாங்க“, என உடைந்த குரலில் பேசினாள்!
“உனக்கு என்னாச்சு, ஏன் குரல் ஒரு மாதிரியா இருக்கு?” கந்தசாமி மீண்டும் கேள்வி எழுப்ப, “ஒன்னுமில்ல, அண்ணன் போன்ல ரொம்ப நேரம் பேச வேண்டாம், நீங்க வாங்க” என்று போனை அணைத்தாள்!
கந்தசாமிக்கோ நெருடல் இருந்தாலும், மின்னல் வேகத்தில் போக வழியில்லை!
மல்லிகா சொல்லை மந்திரமாக எடுத்துக்கொண்டு மனதின் நெருடலை ஒத்தி வைத்துவிட்டு இங்கே தேநீரை பருக தொடங்கினார்!
கிட்டதட்ட குளிர்ந்து போய்விட்ட தேநீரை ஒரு உறிஞ்சில் உறிஞ்சிவிட்டு, அருகிலிருந்த மாற்றுத்திறனாளியிடம், “மன்னிச்சுருங்க நண்பரே அவசரமாக போகனும்” என்றார்!
அவரோ ஏதோ பிரச்சினை என்று புரிந்து கொண்டு “சரிங்கணே பாத்து போங்க” என்று விடையளித்தார்!
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவருக்காக காத்திருந்த வேளையில் தான் அந்த ஆட்டோக்காரர் கந்தசாமிக்கு போன் செய்திருக்கிறார்!
“ஏம்மா உன் வீட்டுக்காரன்ட்ட சொல்லல?”, என்று அவர் கேட்க, “இல்லணே, அவரு என்ன சூழ்நிலையில இருக்காறோ, அவர வேற தேவையில்லாம பதட்டமாக்க வேண்டாம்னு தான்…” என்று மல்லிகா கூறியதும் ஆட்டோக்காரருக்கு வியப்பு!
மல்லிகா படிக்காதவளாயினும், குடும்பத்தை கட்டிக்காக்கும் புத்திசாலி பெண் !
அந்தவேளையில் மருத்துவர் வந்துவிட, சிறுவனை உள்ளே அழைத்து செல்கிறார்கள்!
மல்லிகாவும், அவளது மூத்த மகனும் ஆட்டோக்காரரும் இங்கே திகிலில் காத்திருக்க கந்தசாமியின் அலைபேசி மீண்டும் அங்கே ஒலிக்கிறது!
கந்தசாமியின் மேஸ்திரியின் அழைப்பு!
மீண்டும் ஏதோ பணி நிமிர்த்தமா கந்தசாமி திரும்ப அழைக்கப்படுகிறார்!
கந்தசாமிக்கோ குழப்பம். என்றும் இல்லாமல் இன்று மல்லிகா போன் செய்திருக்காள் என்று!
மேஸ்திரியோ கடுமையானவர், அவரிடம் காரணங்களோ விளக்கங்களோ கொடுக்க இயலாது!
கொடுத்தாலும் அடுத்து சில நாட்களுக்கு வேலை தராமல் பழி வாங்குவார்!
கந்தசாமி மீண்டும் ஆட்டோக்காரர் நம்பருக்கு அழைக்கிறார்! இந்தமுறை போனை எடுத்த ஆட்டோக்காரர், “சொல்லுப்பா, நான் சவாரி வந்துட்டம்பா, வூட்டாண்ட போனதும் பேச சொல்லவா?” என கேட்க, கந்தசாமிக்கு ஒரு வருத்தம், தன் மனைவிக்கென ஒரு அலைபேசி தன்னால் வாங்கி தரமுடியலியே என்று!
“சரிங்கணே ஓன்னுமில்ல, நான் திரும்ப வேலைக்கு போறேன், வர ராத்திரி ஆகும் அவங்கள சாப்புட்டு படுக்க சொல்லுங்கண்ணே!
கதவ பூட்டிக்கிற சொல்லுங்க, என்கிட்ட சாவி இருக்கு“ என்று முடித்தார்!
இங்கே மருத்துவத்தை முடித்து மருத்துவர் வெளியே வந்தார்!
என்ன சொல்லப்போகிறார் என்ற திகிலுடன், தனக்கு இருக்கும் கடவுள் நம்பிக்கை சிறிதும் குறையாமல், மல்லிகா மனதில் கடவுளை வேண்டிக்கொண்டே மருத்துவரை கை எடுத்து கும்பிட்டு கேட்கிறார்!
என்னங்கய்யா ஆச்சு?
இந்த சூழலில் மருத்துவரும் கடவுள் தானே?
இந்த மனித கடவுள் என்ன சொன்னார்??
…
தொடரும்