Categories
தொடர்கதை

ஆயிரத்தில் ஒருவன்- பாகம்7

பாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 4, பாகம் 5, பாகம் -6

ஆட்டோக்காரருக்கு ஒன்றும் விளங்கவில்லை.

சரியென்று வேகமாக சென்று கொண்டிருக்கையில் இன்னொரு நண்பரை சந்தித்தார். அவரை வழிமறித்து, விஷயத்தைக்கூறி, அவரிடம் அந்த பிரசவ வலி வந்த பெண்ணுக்கு உதவி செய்யுமாறு கூறிவிட்டு, விர்ரென்று மல்லிகாவை காணச் சென்றார்.

மல்லிகாவிடம், கந்தசாமியின் ரத்த பிரிவு என்ன என்று கேள்வியை கேட்க, மல்லிகாவுக்கோ நெற்றியலிருந்து வியர்வை ஒழுக துவங்கியது.

“என்னாச்சு ணே, என்னாச்சு?” என்று வெடித்து அழத்துவங்கினாள்.

ரத்த பிரிவு கேட்டு தெரிந்து கொண்டு, கந்தசாமியின் அலைபேசி எண்ணிற்கு அழைத்தார். அழைப்பை யாரும் எடுக்கவில்லை.

வேறு யோசனை ஏதுமில்லாமல், மல்லிகாவை அழைத்துக்கொண்டு, அடையார் மருத்துவமனைக்கு புறப்பட்டார்.

அங்கு சென்று, யாரிடம் எப்படி விசாரிப்பது என்ற குழப்பம். ஒரு வழியாக ஒரு செவிலியரை பிடித்து விஷயத்தை சொன்னார்.

செவிலியரோ, ஆக்ஸிடண்ட், கேஸ் என்றால் பக்கத்து ப்ளாக்குக்கு போங்க என்று கைகாட்ட, மறுவார்த்தை ஏதும் பேசாமல், மூச்சிறைக்கக்கூட இடைவெளி இல்லாமல் ஓடினார்கள் இருவரும்.

மல்லிகா உலகத்தில் தனக்கு தெரிந்த கடவுளிடம் எல்லாம் வேண்டிக்கொண்டிருந்தாள், ஆட்டோக்காரர், இந்த பகுதிக்கான செவிலியரைத் தேடிக்கொண்டு சென்றார்.

ஒருவழியாக அங்கிருந்த ஒரு ஊழியர் “கந்தசாமியா? SRP Tools accident case ஆ?”

“பொறுங்கப்பா, உள்ள first aid நடக்குது.
ஆமா, நீங்க யாருப்பா?” என்று கேட்க, “ஐயா இது அவரு சம்சாரம், நான் அவரு நண்பன்” என்று ஆட்டோக்காரர் சொன்னார்.

“சரிப்பா, நிறைய ரத்தம், போயிருக்கும் போல, O group ரத்தம் கேட்டோமே?
யாரையாச்சும் சொல்லிருக்கீங்களா? ரத்தம் கொடுக்க..” என்று ஊழியர் கேட்க, “இல்லங்கய்யா, முதல்ல போன்ல , ரத்த குரூப் என்னனு தான் கேட்டாங்க, அப்புறம் போன் பண்ணேன் எடுக்கல”, என்று ஆட்டோக்காரர் சொன்னார்.

“ஏம்ப்பா, ரத்த குரூப் எதுக்கு கேப்பாங்க?
ரத்தம் கொடுக்க யார்ட்டாயாச்சும் சொல்லுங்கப்பா” என்று ஊழியர் சொன்னார்.

“சரிங்கய்யா, எனக்கும் O தான்.
நானே கொடுக்கிறேன்னு” ஆட்டோக்காரர் சொன்னார்.

மல்லிகாவோ ஆட்டோக்காரரை தெய்வத்திற்கு இணையாக பார்த்தாள்!

சிறிது நேரத்தில் வெளியில் வந்த மருத்துவரிடம், மல்லிகா விரைந்து செல்ல முயற்சிக்க, தடுத்த ஊழியர், “பொறுமா, அவர்ட்டலாம் போக கூடாது, இரு கேட்டு சொல்றேன்” என்றார்.

மருத்துவரிடம் சென்று பேசிவிட்டு வந்த ஊழியர், “உம் தாலிக்கு, ஆயுசு கெட்டிமா, சரியான நேரத்துக்கு வந்த்தால, உம் புருஷன் பொழச்சான்.”

“இந்தாப்பா, நீ போயி ரத்தம் கொடுத்திடு” என்று சொன்ன பிறகு தான் ஆட்டோக்காரருக்கு உயிர் வந்தது!

ரத்தம் கொடுத்துவிட்டு வந்த ஆட்டோக்காரிடம், “அண்ணே நீங்க கடவுள் மாதிரி வந்து காப்பாத்திட்டிங்க” என்று  மல்லிகா சொல்ல, “இல்லம்மா, இந்த வார்த்தைக்கு நான் தகுதியானவன் இல்லை” என்று நடந்த கதையை கூறினார்.

“எது எப்படி நடக்கனுமோ, அது அப்படித்தான்ணே நடக்கும். ஒருவேளை என் கணவருக்கு இதில் ஏதாவது ஆயிருந்தா, நான் என் பிள்ளைகளுடன் விஷம் குடித்து இறந்திருப்பேன். அந்த சூழல்ல கூட, உங்கள தவறா கருதியிருக்க மாட்டேன். ஏன்னா அது உங்களுக்கு தெரியாம நடந்த விஷயம்“ என்று மல்லிகா கூற,

“நீ மறுபடியும் மிகப்பெரிய மனுஷினு நிரூபிச்சுட்டமா!

ரொம்ப யதார்த்தமா இந்த விஷயத்த எடுத்துக்கிட்ட.
ஆனா, என்னால அந்த சூழ்நிலையில, உதவி செய்ய முடிஞ்சும் கூட, நான் செய்யாமல் நகர்ந்துடேனே?”

“ஆனா, இனிமே என் வாழ்க்கையில், இந்த மாதிரி ஒரு தவறு செய்ய மாட்டேன்” ஆட்டோக்காரர், கண்களில் நீர் கசிய கூறினார்.

“விடுங்கணா, அப்படி பாத்தா, என் அப்பா சாவுக்கு முழுக்க, முழுக்க நான்தான் காரணம்.
ஆனா நான் அதை அப்படி எடுத்துக்கிட்டா, என்னால நிம்மதியா ஒரு நாள் கூட வாழ முடியாது“

“இது யதார்த்மாக நம்மை மீற நடப்பது, இதற்காக வருந்த வேண்டாம்,” என்று மல்லிகா கூறிக்கொண்டிருக்கும் போது, “இந்தாம்மா, உன் புருஷனுக்கு நெனவு திரும்பிடுச்சு, போய் பேசு” என்று மருத்துவமனை ஊழியர் சொன்னார்.

முதன்முறையாக காதல் சொல்லும்போது ஏற்பட்ட தயக்கம், இப்போது மல்லிகாவுக்கு.

ஆட்டோக்காரருக்கு அலைபேசி அழைப்பு.
“அண்ணா, எனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
கடவுள் மாதிரி சரியான நேரத்துல உதவி செஞ்சீங்கணா” என்று அந்த பெண்ணின் கணவர் கூறினார்.

“அதில்லாம, எனக்கு குழந்தை பிறந்த செய்தியை முதல்ல உங்க கிட்ட தான் சொல்றேன்” என்றார்

ஆட்டோக்காரருக்கு ஒன்று மட்டும் புரிந்தது.

“காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”

கந்தசாமி விஷயத்தில் தவறவிட்டதை, கர்ப்பிணியின் விஷயத்தில் செய்து விட்டார்.

ஒருவேளை அந்த கிழவியை சந்தித்திருக்காவிட்டால், இதையும் உதாசினப்படுத்தியிருக்கக்கூடும் என்று எண்ணம் ஆட்டோக்காரருள்.

சில விஷயங்கள், அடிபட்ட பின் தான் உணர முடிகிறது.

கந்தசாமியும் மல்லிகாவும் உள்ளே பேசிக்கோண்டிருக்க, ஆட்டோக்காரரும் உள்ளே நுழைந்தார். ஆட்டோக்காரரை கண்ட கந்தசாமி கையெடுத்துக் கும்பிட்டார். மல்லிகா, இரத்தம் கொடுத்த விஷயத்தை சொல்லியிருக்கிறாள்.

அடிபட்டுக்கிடந்த இடத்தில், முழு நினைவையும் கந்தசாமி இழந்து விடவில்லை.

முதலில் ஏதோ ஆட்டோக்காரர், நிறுத்தாமல் வண்டியை செலுத்த, அந்த வழி வந்த இன்னொரு ஆட்டோக்காரர் தான், ஆம்புலன்ஸ்க்கு காத்திருக்காமல் தன்னை இங்கு கொண்டு வந்து சேர்த்ததாக கூறினார்.

நமக்கு உதவி என்பது, நமக்கு தெரிந்தவர்களால் மட்டுமே கிடைக்கும், அதனால் நமக்கு தெரியாதவர்களுக்கோ, இந்த சமுதாயத்துக்கோ நாம் எந்த உதவியும் செய்யத் தேவையில்லை என்ற எண்ணம் தவறு என்று கந்தசாமி, மல்லிகாவிடம் கூற, ஆட்டோக்காரருக்கு, திரும்ப ஒரு சாட்டையடி போல இருந்தது.

செய்த தர்மம் என்றும் தலைகாக்கும் என்பதும் உண்மையே! கந்தசாமி யாருக்கோ எப்போதோ பசியாற்றிய புண்ணியம் தான் இப்போது அவரை காப்பாற்றியிருக்கிறது என்று மல்லிகா சொன்னாள்!

இனி ஆட்டோக்காரரின் வண்டிக்கு பின்னால், பிரசவத்திற்கு இலவசம் என்ற வாசகம் மட்டுமல்லாது, ஆபத்தில் உதவுவோம் என்ற வாசகமும் சேர்க்கப்படலாம்!

மல்லிகாவின் கடவுள்கள் காப்பாற்றியதோ, இல்லை மனிதக்கடவுள்கள் காப்பாற்றியதோ தெரியவில்லை, ஆனால் ஒன்று, “பிறரையும் உன்னைப்போல நேசி” என்பதை கற்றுக் கொண்டார்கள்.

மல்லிகா, கந்தசாமியிடம், முதலில் நிற்காமல் சென்ற ஆட்டோ பற்றி கூறிவிட்டால்? கந்தசாமி என்ன நினைப்பானோ, என்ற எண்ணம் ஆட்டோக்காரரை, உலுக்கியது.

ஆட்டோக்காரரை, அழைத்த கந்தசாமி, “அண்ணே எனக்கு தெரியும். உங்க குரல் தெரியாதா?
ஆனால் சூழ்நிலை காரணம்! நீங்கள்  என்ன செய்ய முடியும்?” என்று மல்லிகாவின்  காதுகளில் விழாமல் சொன்னான்.

“என் பொண்டாட்டிட்ட சொல்லவேணாம், அவளுக்கு இதுபுரியாது” என்று சொன்னார்.

கந்தசாமியும் மிக நல்ல பண்புகளை உடையவன் என்பதை ஆட்டோக்காரர் உணர்ந்தார்!

எது எப்படியோ இந்த சம்பவத்தால் ஆட்டோக்காரர் மனம் திருந்தினார். இனி அவர்மூலமாக சில உயிர்கள் காப்பாற்றப்படலாம்! எதுவுமே காரணமில்லாமல் நடப்பதில்லை!

இது மட்டுமல்ல, மல்லிகாவின் தந்தை இறந்த தினங்களில் எல்லாம், வருடா வருடம் ஏதோ ஒரு சம்பவம் இதைப்போல நிகழ்கிறது!
இது எங்கே எப்போது எப்படி முடியுமோ?
ஒருவேளை மல்லிகா தாயாரின் சாபம் பலித்து விடுமோ?

அமைதியாய் இருந்த மல்லிகாவின் மன ஓட்டம் இது!

இந்த வருடம் நல்லபடியாக முடிந்து விடைபெறுகிறார்கள்!

கர்மவினையா? செய்த புண்ணியங்களா?
இனிவரும் காலங்களில் கந்தசாமியின் வாழ்வில் என்ன நிகழப்போகிறதோ?

முற்றும்