பாகம் 1
ஒரு அழகான மாலைப்பொழுது, நமது கதையின் நாயகன் கந்தசாமி சென்னையில் பலத்த வாகனங்களின் இரைச்சல்களுக்கு இடையில் சாலையின் ஓரத்தில் நின்று தனது வீடு செல்ல வெள்ளை நிற போர்டு போட்ட பேருந்தின் வருகைக்காக காத்திருக்கிறார்!
கந்தசாமியின் வீட்டில் அவரது மனைவி மல்லிகா கணவரின் வருகைக்காக காத்திருக்கிறார்!
கந்தசாமிக்கும் மல்லிகாவிற்கும் இரண்டு குழந்தைகள்! இரண்டும் படு சுட்டி, மாலைப்பொழுதில் தெருவில் கூடி விளையாடும் பல்லாயிரக்கணக்கான ஏழைக்குழந்தைகளில் அவர்களும் இருவர்!
குழந்தைகள் இரண்டும் மல்லிகாவிற்கு அடங்காது!
அப்பா தெருமுனைக்கு வரும்போது இருவரும் வீட்டிற்குள் ஓடிப்போய் அடுத்த நாள் வீட்டுப்பாடத்தை முடிக்க ஆவல் கொள்வார்கள்!
கந்தசாமி கட்டிட வேலை செய்யும் கையாள்! குடிப்பழக்கம் என்ற ஒன்றுக்கு அடிமை ஆகாத காரணத்தால் பல நாட்கள் மாலை வேளையில் மல்லிகாவிற்கும் அவரது இரண்டு குழந்தைகளுக்கும் அவரால் நேரம் ஒதுக்க முடிகிறது!
கந்தசாமி பிள்ளைகளிடம் அவ்வளவு கண்டிப்பு காட்ட மாட்டார், மல்லிகா அதற்கு எதிர்மறை!
ஒருவேளை அந்த காரணத்தால் கூட மல்லிகா வீட்டில் தனியாக இருக்கும் போது இவர்கள் வெளியில் ஓடிப்போய் விளையாடப் போகிறார்களோ என்னவோ!
அன்றும் வழக்கத்திற்கு மாறாக ஏதும் நிகழ்ந்துவிடவில்லை! வழக்கம்போல மல்லிகா வீட்டில் சமையலுக்காக எதையோ உருட்டிக்கொண்டிருக்க, அவரது பிள்ளைகள் இருவரும் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்!
கந்தசாமியிடம் மல்லிகா ஏதோ வாங்கி வரச்சொல்லி அதற்காக காத்திருக்கிறாள், வந்தவுடன் சமையல் வேலையை துவங்கலாம் என்று!
சிறுவர்களோ படுஜோராக ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்!
கந்தசாமியோ திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டர் அருகே செல்ல எந்த பேருந்து வரும் என SRP tools பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கிறார்!
சிமெண்ட் மணமும், அழுக்கு சட்டையும், மற்றவர்களை அவரிடமிருந்து இரண்டு அடி தள்ளி நிற்க செய்திருந்தது!
அந்த பேருந்து நிலையமும், அந்த பகுதியும் முன்பு போல இல்லவே! ஐடி இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும், பணக்காரர்களும் உலா வரும் பகுதியாக மாறி கிட்டதட்ட பத்து வருடங்கள் ஆயிற்று!
ஆம் பத்து வருடத்திற்கு முன் அதெல்லாம் போக்குவரத்து குறைந்த, சென்னையை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த பகுதி தானே!
கந்தசாமியும் இந்த பகுதிக்கு அருகே குடும்பத்தோடு குடிவர காரணம், அந்த பகுதியில் தொடர்ச்சியாக எழுப்பப்பட்ட கட்டிங்கள் தான். ஆமாம் வேலை செய்யும் பகுதிக்கு அருகில் குடியிருந்தால் வசதி தானே? பிள்ளைகளும் அடையார், அல்லது திருவான்மியூரில் இருக்கும் பள்ளிகளில் படிக்கலாம் என்பது கந்தசாமியின் திட்டம்!
ஜெயந்தி தியேட்டரில் இறங்கி, இந்திரா நகர் போகும் வழியில் உள்ளே சிறிது தூரம் தள்ளி (கிட்டதட்ட 1.5 கிமீ தொலைவு) ஒரு குடிசை மாற்று வாரிய அப்பார்ட்மென்ட்டில் கந்தசாமியின் வீடு!
புறாக்கூண்டு தான் என்றாலும் கந்தசாமிக்கும் மல்லிகாவுக்கும் அது மாளிகை தான்!
குழந்தைகளுக்கு தான் என்னவோ வீடு பிடிக்காது!
அப்பா நமக்கு ஒரு பெரிய வீடு கட்டுப்பா என்று சின்ன பையன் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பான்!
கந்தாசாமிக்கு தானே தெரியும், வீட்டு வாடகை கொடுப்பதே கடினம் என்று! மல்லிகாவும் சில வேளைகளில் சிறுவரோடு சிறமியாக மாறிப்போவாள்!
இந்த டிவியாவது மாத்த கூடாதா என்று புலம்ப துவங்கி விடுவாள்! கந்தசாமி அடுத்த மாதம் கேபிள் பைசாவுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பார்!
ஆனால் எந்த சூழ்நிலையிலும் கந்தசாமி அவர்களை கடிந்து கொள்வதில்லை!
எல்லா மாலை வேளைகளையும் போல அல்லாது இன்று என்னவோ அந்த மேஸ்திரி பாத்து வீட்டுக்கு போப்பா என்று கந்தசாமியிடம் சொல்லி அனுப்புகிறார்!
அந்த பரபரப்பான சிக்னலில் ஒரு கண் தெரியாத ஆள் கையில் பேனாக்களை வைத்து விற்றுக் கொண்டிருக்கிறார்!
அவ்வளவு பணக்காரர்களும், கல்லூரி மாணவர்களும், ஐடி ஊழியர்களும் இருந்தாலும் கூட அந்த பேனாவை வாங்க ஒரு சிறு கூட்டம் தான் உண்டு!
மற்றவர்களுக்கு அது தகுதி இழுக்கு, சிலர் இது எழுதாது, ப்ராடு பண்ணி விக்கிறாங்க என்று சொல்லவும் செய்வார்கள்!
கந்தசாமிக்கு தன்னைப்போன்ற ஏழையைப் பார்த்ததும் உதவி செய்யும் மனப்பான்மை!
பையன் பரீட்சை எழுத ஹீரோ பேனா கேட்டிருந்தான்!
இந்த பேனாவை வாங்கி கொடுத்து, பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால், ஹீரோ பேனா வாங்கி தரேன்னு சொல்ல மனதில் திட்டம் தீட்டிவிட்டார்!
அந்த கண்தெரியாத மாற்றுத்திறனாளியிடம் இரண்டு பேனாக்களை வாங்குகிறார்!
இங்கே தெருவில் படுஜோராக ஆட்டம் நடக்கிறது!
கிரிக்கெட் என்ற விளையாட்டின் மூல விளையாட்டான கில்லியை ஆடுகிறார்கள்!
கில்லி ஆடுவதில் கந்தசாமியின் மூத்த மகன் கில்லி!
அடித்து பறக்க விடுகிறான்!
பறந்த கில்லிதன்டா குச்சி கந்தசாமியின் இளைய மகனின் கண்களை பதம் பார்த்தது!
முகம் முழுக்க இரத்தம்! இரத்தம் கண்டதும் சிறுவன் மயங்கிவிட, பதட்டம் அடைந்த அண்ணனோ அவனைத்தூக்கிக் கொண்டு அம்மாவிடம் ஓடுகிறான்!
கண் தெரியாதவருக்கு கந்தசாமி இரக்கம் காட்டிக்கொண்டிருந்த அதே வேளையில் தான் இவனது கண்கள் பதம் பார்க்கப்பட்டது!
ஒருவேளை கடவுள் என்பவர் இல்லையோ?
பார்க்கலாம்!