Categories
தொடர்கதை

ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 4

பாகம் 01, பாகம் 02, பாகம் 03

மல்லிகா மீண்டும் பழைய வாழ்வின் நினைவுகளை அசை போடத்துவங்குகிறாள். அடிபட்ட மகன் மல்லிகாவின் மடியை ஆக்கிரமித்துக்கொள்ள, மூத்தவன் மல்லிகாவின் தோளில் சாய்ந்து கொண்டான்.

விவரம் தெரிந்த பின் மூத்த பிள்ளை தாயின் அரவணைப்பை தேடும் முதல் தருணம் இதுதான்.
மல்லிகாவுக்கும் மனதில் மட்டற்ற மகிழ்ச்சி.
“அம்மா, தம்பிக்கு என்னால தாம்மா இப்படி ஆச்சு”, என்று வெடித்து அழத்துவங்குகிறான்.

“விடுடா, நான்தான் எப்படி ஆச்சுணே கேட்கலியே டா?
எப்படியும் விளையாடும் போது பட்ட அடிதானே? தெரியாம தான் நடந்திருக்கும் னு என்னால புரிஞ்சுக்க முடியாதா?
உன்னோட மற்ற சிநேகிதர்கள் செஞ்சுருந்தா கூட நான் என்ன சொல்லிடப்போறேன்?
இந்த வயசு வன்மம் இல்லாம விளையாடுற வயசு டா! “ அழாதே என்று தோளில் சாய்த்துக்கொள்கிறார்!

மல்லிகாவின் இந்த பண்பு ஆட்டோக்காரருக்கு மிகப்பெரிய வியப்பு! “இந்தாம்மா உண்மையிலேயே நீ பெரிய மனுசி மா!” என்று கூறினார்!

“ஆமாங்கணே! வாழ்க்கையில இந்த பெரிய மனுசிங்கிற பட்டம் எப்பயும் எனக்கு சந்தோஷத்தையும் துக்கத்தையும் கலந்துதான் கொடுத்திருக்கு“ என்று மல்லிகா கூற, ஆட்டோக்காரர் புரியாமல் வண்டியை ஓட்டுவதில் கவனத்தை செலுத்தினார்!

ஆம்.

மல்லிகா இதற்கு முன்னர் பெரிய மனுசி என்ற பட்டம் பெற்றார். மல்லிகாவின் அப்பா முடியாது என்று சொன்ன பின்பும் வீட்டை மீறி திருமணம் செய்து மணக்கோலத்தில் நின்ற போது!

“எங்கள மீறி கல்யாணம் பண்ற அளவுக்கு பெரிய மனுசி ஆயிட்டியே” என்று மல்லிகாவின் தாயார் குமுறி அழுது கொண்டிருந்த போது , மல்லிகாவின் தந்தை ஓடிப்போய் கிணற்றில் குதித்து விட்டார்!

ஏனோ இந்த எழவெடுத்த சாதி, மனிதர்களை இப்படி வாட்டி வதைக்கிறது? இத்தனைக்கும் கந்தசாமி மல்லிகாவை காட்டிலும் ரொம்ப தாழ்ந்த சாதியில்லை!
சொத்து சுகத்திலும் கூட கிட்டதட்ட இருவரும் சமமே!

இருந்தாலும் ஏற்கனவே விவசாயத்தில் மிக நெருக்கடியான சூழலில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் இந்த சம்பவங்கள் எல்லாம் அரங்கேறியது!
ஏற்கனவே நொந்திருந்த மனிதர் , மகளின் செயல் கண்டு கொதித்து, மற்றவர்கள் என்ன செய்வார்களோ என பயந்து தன்மானம் காக்கிறேன் என்ற எண்ணத்தில் குதித்து விட்டார்!

குதித்தவர் அவ்வளவு தான், காப்பாற்ற முடியவில்லை!
மல்லிகாவின் தாயார், அவளை கொஞ்சநஞ்ச வசை பாடவில்லை! “இதே மாதிரி உன் புருஷனும் அல்பாயிசுல செத்துப்போவான்” என்பது வரை வசை பாடி தீர்த்து விட்டார்!

ஆனாலும், மல்லிகாவை ஒரே பிள்ளையாய்க் கொண்ட தனது மாமனாருக்கு, கந்தசாமிதான் இறுதி கடமைகளை செய்தான்!

திருமணம் முடிந்த கையோடு, வீட்டில் துர்சம்பவமும் நிகழ்ந்ததால், மல்லிகாவும், கந்தசாமியும் பல மாதங்கள் இயல்பு வாழ்க்கை வாழ முடியவில்லை.

ஏற்கனவே நலிந்து போயிருந்த மாமனாரின் சொத்துகள் கடனை அடைக்கவே சரியானது.

வேறு வழி இல்லாமல் மல்லிகாவின் தாயாரும் சில காலம் இவர்களுடனே வாழ்ந்திருந்தார்!

கணவர் போன சோகம், சாபம் விட்ட மகளின் கையாலே சாப்பாடு என்ற இவைகள் மல்லிகாவின் தாயாரை நீண்ட நாட்கள் வாழ விடவில்லை.

கந்தசாமியும் விவசாயத்தில் பெரிதாக வருமானம் ஈட்ட முடியவில்லை. கடன் கழுத்தை நெரிக்க துவங்கியதும், மல்லிகாவும் கந்தசாமியின் அம்மாவும், வீட்டையாவது  காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற முடிவில், இருந்த தோட்டத்தை விற்று கடனை அடைத்து பட்டணத்திற்கு குடிபெயர்ந்தார்கள்!

கலப்பை பிடித்த கை, கரண்டி பிடித்தது இப்படித்தான்! 10 பேரை ஏவி வேலை வாங்கிக் கொண்டிருந்த கந்தசாமி இன்று பத்தோடு பதினொன்றாக கைநீட்டி சம்பளம் வாங்குகிறார்!

பட்டணம் என்னமோ நல்ல பட்டணம் தான், ஆனால் இடம் மாறிய மீன்குஞ்சு போல கந்தசாமியின் தாயார் நீண்ட நாள் நிலைக்கவில்லை.

கந்தசாமியும், மல்லிகாவும் அனைத்தையும் இழந்து அனாதைகளாகிப் போனார்கள்!

காலப்போக்கில் குடும்பம் நடத்தி குழந்தைகள் உருவாகி, தன் குழந்தைகளுக்காக வாழ ஆரம்பித்தார்கள்!

மல்லிகாவும் கந்தசாமியும் தவறாமல் வருடத்திற்கு ஒருமுறை ஊருக்கு சென்று விடுவார்கள்!

ஆம். ஆடித்திருவிழாவுக்கு மட்டும்!

அந்த ஊரில் பெரும்பாலான வீடுகள் வருடம் முழுக்க பூட்டி கிடந்தாலும், ஆடித்திருவிழாவுக்கு ஊர் நிரம்பி விடும்!

இன்றும் திருவிழாவில் கதாநாயகன் கந்தசாமிதான்!

திருவிழாவுக்கு போன கையோடு, மல்லிகாவின் தாய், தந்தை மற்றும் கந்தசாமியின் தாய், தந்தைக்கு படையலிட்டு வணங்கி விடுவார்கள்!

மூதாதையர் மற்றும் பெற்றோருக்கு படையலிட்டு வணங்குவது இவர்களது மரபு!

“இந்தாம்மா, பாத்து கூட்டிட்டு போ” என்று ஆட்டோக்காரர் சத்தம் கொடுக்க, மல்லிகா நிகழ்காலத்திற்கு திரும்புகிறாள்!

தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு கீழே இறங்கிய மல்லிகா, “அண்ணே அவர் வந்ததும் பணம் வாங்கித் தறேன்னு” சொன்னாள்!

“அட என்னம்மா, அண்ணன், அண்ணனு சொல்ற, என் மருமகப்புள்ளைக்கு ஆஸ்பத்திரிக்கு ஆட்டோ ஓட்ட காசு தறேங்குற?”

“அடே பையா, இனிமே அடிபடாம ஒழுங்கா ஆடனும் இன்னா?” என்று ஆட்டோவை கிளப்பியதும், மல்லிகா தன்னை அனாதை இல்லை என்று உணர்கிறாள்!

வீட்டினுள் சென்று ஏதோ உணவு சமைத்து பசியாறி தூங்கிப்போனார்கள் மூவரும்!

கந்தசாமிக்கு இரவுப்பணி!
ஜோராக வேலை நடந்து கொண்டிருக்கிறது .

கட்டிடம் உயர்ந்து கொண்டிருக்கிறது.
திடீரென ஏதோ அழுத்தம் காரணமாக இனி வேலை இரவு பகலாக தொடரும் என முடிவு எடுக்கப்பட்டது போல.

அன்று முதல் நாள் என்பதால் சரியான திட்டமிடல் ஏதுமின்றி பகலில் வேலை செய்தவர்கள் பெரும்பாலானோர் இரவும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம்.

மல்லிகா தூங்குகிறாள் என்றாலும் , அது மற்ற நாட்கள் போன்ற நிம்மதியான உறக்கமல்ல..

மகன் இப்படி அடி பட்டு கிடக்க, எந்த தாய் உறங்குவாள் நிம்மதியாக?

இன்னொரு பெரிய குறை, தோள் சாய மணாளன் அருகில் இல்லை. இப்போது மல்லிகாவுக்கு மனதில் கலக்கம். கணவரிடம் சொல்லி அவரை வரவழைத்திருக்கலாமோ என்று?

இனி ஒன்றும் முடியாது, மணி 11 ஐத் தாண்டி விட்டது. காலையில் பேசிக்கொள்ளலாம் என்று முடிவு செய்து புரண்டு புரண்டு படுக்கிறாள்.

இளையவன் அடிபட்ட மயக்கத்தில் ஆழ்ந்து உறங்க, மூத்தவன் அழுது வடிந்த கிறக்கத்தில் சோர்ந்து தூங்க மல்லிகாவுக்கு தன் வீடே இன்று அந்நியமாகத் தோன்றியது. யாருமே ஆறுதலுக்கு இல்லை என்ற எண்ணம் பெரிதும் அவளை வாட்டியது.

இதற்கு இந்த சம்பவம் மட்டும் காரணமல்ல.

மல்லிகாவின் தந்தை கிணற்றில் குதித்த அந்த நாளும் இதுதான்! ஏற்கனவே மனதளவில் சோகமாக இருந்த மல்லிகாவை, இந்த விஷயம் இன்னும் உளவியல் ரீதியாக பாதித்தது!

எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு மனதை திடப்படுத்திக்கொண்டு கண் அயர்ந்தாள் மல்லிகா!

கந்தசாமிக்கு கண்கள் சொருக, கால் நடுங்க, கைகள் வலிக்க, வேறு வழியில்லாமல் இரவுப்பணியை செய்து கொண்டிருந்தார்.

கட்டிடத்தின் நாலாவது மாடியில் வேலை நடந்துகொண்டிருந்தது. கண் இமைக்கும் நொடியில் கந்தசாமி நாலாவது மாடியில் இருந்து தவறி விழுந்தார்.

வேலையாட்கள் தடதடவென ஓடி வந்து சூழ்ந்துகொண்டு கந்தசாமியை எழுப்புகிறார்கள், முகத்தில் தண்ணீர் தெளிக்கிறார்கள்!

மல்லிகா வெடுக்கென முழிக்கிறாள்!

இது மல்லிகா கண்ட கனவு!

ஏற்கனவே உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த மல்லிகாவுக்கு, தன் கணவர் மீதான பாசத்தால், அவருக்கு ஏதாவது ஆகிவிடக்கூடாது என்ற பயத்தால் வந்த கனவு!

எழுந்து தண்ணீர் குடித்த மல்லிகா மணியைப் பார்க்கிறாள்! மணி ஒன்று!

இன்னும் 4 முதல் 5 மணி நேரம் அவளுக்கு நரக வேதனை தான்!

மகன்களை பார்த்துவிட்டு மீண்டும் கண் அயர்கிறாள்!

திடீரென மல்லிகாவின் தாயார் கனவில் வந்து, உன் புருஷன் அல்பாய்சுல செத்துப்போவான்னு மறுபடியும் சாபம் கொடுக்க, மல்லிகா இனி தூங்குவதில்லை என்று எழுந்தே விட்டாள்!
மணி இப்போது 3!

ஒரு வழியாக 3 மணி நேரத்தை கழித்த மல்லிகா காலையில் காபி போட்டு மகன்களை எழுப்பி கொண்டிருக்கும் போது ஆட்டோக்கார அண்ணன் மல்லிகாவின் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்.

மல்லிகாவுக்கு பதைபதைப்பு!

மல்லிகாவின் கனவு தான் உடனடியாக அவளை உறுத்தியது!

“என்னணே?
காலையிலயே?”

“ஏதாவது பிரச்சினையா?“

என்று மல்லிகா பதற, ஆட்டோக்காரர் மெளனமாகவே இருந்தார்!

மல்லிகாவுக்கு இதயமே வெடித்துவிடும் போல இருந்தது! ஆட்டோக்காரரின் மெளனம் கலைய காத்திருந்தாள்!

நாமும் காத்திருப்போம்!

தொடரும்

பாகம் -5