Categories
ஆன்மீகம் தமிழ் தற்கால நிகழ்வுகள்

தேவையா இந்த அவலம்? – ஏகாதேசி நெரிசலில் பக்தர்கள் உயிரிழப்பு

நாம் அடிக்கடி விமர்சிக்கும் அதிதீவிர பக்தி, அல்லது மிதமிஞ்சிய பக்தி அல்லது விளம்பரத்திற்கான பக்தி அல்லது போட்டிக்கு பக்தி, எப்படி வேண்டுமானாலும் இதை சொல்லலாம். அதன் விளைவு இன்று விபரீதமாகி இருக்கிறது.

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி அன்று ஏழுமலையானை தரிசித்தே தீருவேன் என்று கூட்டம் கூட்டமாக ஆட்டு மந்தை போல முண்டியடித்த மக்கள். மூச்சு முட்டி இதுவரை 5 பேர் இறந்திருக்கிறார்கள்.
இனியும் எண்ணிக்கை கூடலாம் என்றும் சொல்லப்படுகிறது.

பலர் காயமடைந்திருக்கிறார்கள், மயங்கி விழுந்திருக்கிறார்கள்.

இவர்கள் செய்த தவறு என்ன?
அதிதீவிர மூடநம்பிக்கை தான். வேறென்ன?

வைகுண்ட ஏகாதசி அன்று திருப்பதியில் பெருமாளை தரிசித்து விட்டேன் என்று வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைப்பதற்கும், உடனிருப்பவர்களிடம் பெருமை பீத்துவதற்குமாக எத்தனை பேர் இந்த கூட்டத்தில் இருந்திருப்பாரகள்?

இதைத்தான் வேண்டாம் என்கிறோம்.

சிலர், மூடநம்பிக்கை முற்றிப்போன பதர்கள். வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாளை தரிசித்தால் வைகுண்டப் பதவி கிடைக்கும் என நம்பி, இந்த வரிசையில் நின்றவர்கள், இப்போது மூச்சு முட்டி இறந்து போய் விட்டார்களே?

வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாளை தரிசிக்கவில்லையே?

இப்போது அவர்கள் வைகுண்டம் சென்றிருப்பார்களா? அல்லது பெருமாளை வைகுண்ட ஏகாதசி அன்று தரிசிக்க இயலவில்லை என்ற காரணத்தினால் பேயாக அலைவார்களா?

நாங்கள் வன்மத்தைக் கக்குகிறோம் என்று கூட பஞ்சாயத்து வரலாம். ஆனால் இது வன்மம் அல்ல.
ஆதங்கம்.

சேலத்தைச் சேர்ந்த மல்லிகாவும், இறந்து போன ஐவரில் ஒருவர். அவருக்கு வயது என்ன?
அவர் என்ன பொறுப்புகளில் உள்ளார் என்பதெல்லாம் கூட எனக்குத் தெரியாது.

ஆனால் நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்.
இப்போது மல்லிகா குடம்பத்தினர் வருத்தப்பட்டு கண்ணீர் வடிப்பார்களா? அல்லது பெருமாளுக்காக உயிர் போனது என்று பெருமதிதத்துடன் இருப்பார்களா?

இதுவும் ஒரு விதமான முட்டாள்தனம் என்பது ஏன் நம் மக்களுக்கு விளங்கவில்லை?

ஒரு சினிமாவை முதல்நாளில் பார்த்து விடத் துடிக்கும் ஒரு பைத்தியக்கார ரசிகனுக்கும் இந்தக்கூட்டத்திற்கும் எள்ளளவும் வித்தியாசம் கிடையாது.

இந்த நாளில் சாமியை தரிசித்து விட்டால் வாழ்க்கை முன்னேறி விடும், இந்த நாளில் தங்கம் வாங்கினால் குடும்பம் செழிப்படையும் என்று சொல்லி சொல்லி பக்தியையும், மக்கள் நம்பக்கையையும் வியாபாரமாக்கி, அதைச் சார்ந்தவர்கள் தான் முன்னேறுகின்றனரே ஒழிய மக்கள் முன்னேறியதாக வரலாறு இருப்பது போலத் தெரியவில்லை.

போன வருடம் வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாளை தரிசித்த யாராவது, திடீர் முன்னேற்றம் அடைந்த கதை ஏதாவது வெளியானதா என்றால் அப்படி ஏதும் தெரியவில்லை. ஆனால் வருடா வருடம் கூட்டம் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது.

போதும் இந்த அவலம்.

ஒரு திரையரங்கில் கூட்டத்தில் யாராவது நசுங்கி உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ, உயிரிழப்பு ஏற்பட்டாலோ, குறைந்தபட்சம் அந்தப் படத்தின் நாயகனை மிரட்டியாவது நஷ்ட ஈடு வாங்கி விடலாம்.
ஆனால் இங்கே பெருமாள் எந்த பதிலும் சொல்லப்போவதில்லை. பெருமாள் சார்பாக அரசாங்கம் தான் பதில் சொல்ல வேண்டும்.

மீண்டும் ஒரு அன்பான வேண்டுகோள்.
சாமி கும்பிட வேண்டாம் அல்லது கடவுள் இல்லை என்ற தீர்மானம் எடுக்கத் தேவையில்லை.
ஆனால் நமது சௌரியத்திற்கு, குறைந்தபட்சம் நமது அன்றாட வேலை கூட பாதிக்காத வண்ணம் மகிழ்ச்சியாக கோவிலுக்குச் செல்வதே சாலச் சிறந்தது. இப்படி சிக்கி சீரழிந்து இன்னொரு உயிர் போக வேண்டாம்.

அன்புடன் நினைவுகள்.