உலகின் மூத்தகுடி உன்னதமான எமது தமிழ்க்குடி என்று மார்தட்டிப் பெருமை பேச வேண்டிய தருணம் இது.
அணுவைத் துளைத்தேழ் கடலைப்புகுத்தி என்ற வரிகளைப் படித்து விட்டு வாய்ச் சவடால் என்று சொல்லும் காலம் மறைந்து விட்டது.
சிந்து சமவெளி தான், இல்லை இல்லை, ஐரோப்பியா தான், அட அதுவுமில்லை, எகிப்துதான், அப்ப சீனா என்ன தக்காளியா என்று நாகரீகத்தின் முன்னோடி நாங்கள் தான் என்று ஆளாளுக்குப் போட்டி போட்டுக் கொண்டு வரலாற்றை எழுதி அதை ஒரு தலைமுறை படித்தும் முடித்து விட்டது.
இப்போது சுத்தியலில் அறைந்தார் போல ஒரு உண்மை வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாட்டின் பரவலான பகுதிகளில் இரும்பின் பயன்பாடு கிட்டத்தட்ட கி.மு 3300 ல் இருந்தே இருந்துள்ளது என்று.
அதாவது 5300 ஆண்டுகளுக்கு முன்பே இங்கே இரும்பின் பயன்பாடு இருந்துள்ளது.
நாம் படித்த நாகரீகத்தின் வளர்ச்சி, முதல் கற்காலம் , இடை கற்காலம் என்று கல்லால் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்துதலைத் தாண்டி தான் இரும்பு காலத்திற்கே வந்துள்ளன. அப்படிக் கணக்கிட்டால் இரும்புக் காலமே 5300 ஆண்டுக்கு முன்பு இங்கே இருந்தது என்றால், கற்காலம்?
அடேங்கப்பா, அடேங்கப்பா.
இந்தியாவின் முன்னோடி நாகரீகம் என்று மாணவர்கள் மாங்கு மாங்கென மனப்பாடம் செய்யும் சிந்து சமவெளி நாகரீகத்தில் வெண்கலப் பயன்பாடு மட்டும் தான் இருந்திருக்கிறது.
அதன்பிறகு ஆரியர்களின் குடியேற்றம் எப்படி நிகழ்ந்தது என்ற ஆராய்ச்சியில், இரும்பினால் ஆன ஆயுதங்களால் சிந்து சமவெளி மக்கள் தாகப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் உள்ளது. அதாவது சிந்து சமவெளி மக்களுக்கு இரும்பு என்றால் என்னவென்றே தெரியாது அந்த நாகரீகத்தின் கடைசி காலமான 1300 களில்.
ஆனால் அதற்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கே நம் பாட்டன் இரும்பில் ஆயுதங்களைச் செய்திருக்கிறான், உபயோகித்திருக்கிறான்.
இதை நம் வரலாறாகப் படிக்காமல், நாம் அதை மனப்பாடம் செய்திருக்கிறோம்.
சிந்து சமவெளியில் நுழைந்த ஆரியக்கூட்டம் இந்தப் பகுதியில் நுழைய இயலாததற்குக் காரணம் நமது பாட்டான்கள் சிந்து சமவெளி மக்கள் போல பாவப்பட்ட ஜீவன்கள் அல்ல.
அதிலும் உற்று கவனித்தால், இரும்பில் மண்வெட்டியும், உளியும், வாளும் இருந்திருக்கிறது.
வெறுமனே வேட்டையாடி உணவருந்துபவனுக்கு வாள் மட்டும் போதும்.
பயிரிட்டு, செப்பனிட்டு உணவருந்துபவனுக்கு தான் மண்வெட்டி வேண்டும் அப்படியானால் நமது பாட்டன்கள் 5300 ஆண்டுகளுக்கு முன்பே பயிரிடும் பக்குவத்தை அறிந்திருக்கிறார்கள்.
இவ்வளவு தானா என்றால் இதோடு நிற்கவில்லை, அடுத்த ஆயுதம் உளி.
ஒரு சிற்பத்தைச்செதுக்கத் தேவையான ஆயுதம்.
எவ்வளவு நாகரீக வளர்ச்சி கண்ட சமுதாயமாக இருந்திருந்தால் உளியின் பயன்பாடு இருந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறதா?
இதுதான் தமிழ்ச் சமுதாயம். இதைத்தான் அவ்வப்போது இழிவுபடுத்திக் கொண்டு தகாத வழியில் சென்று சீரழிந்து கொண்டிருக்கிறோம்.
ஆபரணங்கள் அணிந்து தன்னை அழகுபடுத்திக்கொள்ளும் அளவிற்கு அவர்கள் நாகரீகத்தின் வளரச்சியை அடைந்திருக்கிறார்கள்
இரும்பில் மோதிரம் எல்லாம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதிலும் சிறப்பு என்னவென்றால் இது முதுமக்கள் தாழியில் இருந்துள்ளது. இப்போதுள்ள சமூகம் கூட இறந்தவர்களிடமிருந்து அர்ணாக்கயிறு உட்பட அனைத்தையும் கழட்டி தான் எரிக்கிறார்கள்.
ஆனால் அன்றைய ஆட்கள் எவ்வளவு அன்புடன் இருந்திருந்தால் அரிதான இரும்பு சாமான்களை முதுமக்கள் தாழியில் விதைத்திருப்பார்கள்.
நாகரீகத்தில் மட்டுமல்ல, அன்பிலும் தமிழன் ஒருபடி முன்னே தான் நின்றிருக்கிறான்.
இறந்தவர்கள் நம்மைப்போல வாழ்கிறார்கள் என்ற நினைப்பில்தான் அவர்களை முதுமக்கள் தாழியில் வைத்து அவர்களுக்குத் தேவையானவற்றை உள்ளே வைப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு.
அந்த நம்பிக்கையும் இங்கிருந்து துவங்கிய வழக்கமாகத்தான் இருந்திருக்க வேண்டும். பார்க்கலாம்.
இன்னும் என்னென்ன பெருமைகள் தோண்டி எடுக்கப்பட வேண்டியுள்ளது என்று.
எதிர்பார்ப்புடன் நினைவுகள்.