Categories
ஆன்மீகம் தகவல் தற்கால நிகழ்வுகள்

என்னங்க சார் உங்க நியாயம்? – திருச்செந்தூர் பயண அனுபவம்

மிகைப்படுத்தப்பட்ட பக்திப் பரவசத்தால் வந்த விளைவு. சுற்றுச்சூழல் சீரழிவு. நாம் ஏற்கனவே திருச்செந்தூரில் பக்தர்கள் இரவில் தங்கிக் கூத்தடித்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதைப் பதிவிட்டிருந்தோம்.

அதற்குப் பிறகு இப்போது தான் திருச்செந்தூர் பயணத்திற்கான வாய்ப்பு அமைந்தது.

நாம் வருந்தியது போலவே கடற்கரையின் மையப்பகுதியில் ஒரு கால்வாய் உருவாக்கப்பட்டு கழிவுநீர் ஓடி நேரடியாகக் கடலில் கலக்கிறது.

அழகான கடற்கரை மத்தியில் ஒரு சாக்கடை
பீச்சில் கூவம் என்று சொல்லலாமா?

அதே தண்ணீரை பக்தர்கள் புனித நீராடுகிறார்கள்.
இது அரசாங்கத்தின் அலட்சியம் என்றாலும், அரசிடம் காரணம் கேட்டால் மிகையான கூட்டத்தின் காரணமாக, சரியாக எதையும் திட்டமிட்டு அமைக்க இயலவில்லை என்றே பதில் கூறுவர்.

இதை விட கண்டிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், ஒரு மிகப்பெரிய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருக்கும் கோவிலில் நடைதிறப்பு மற்றும் மூடும் நேரத்தை மாற்றிய செய்தியை, தமிழ்நாடு முழுக்கத் தெரியப்படுத்த வேண்டாமா?

கிட்டதட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் இங்கே வருவது வழக்கமாகி விட்டது.
அதில்லாமல் இந்த மார்கழி மாதத்தில் சபரிமலை செல்லும் பக்தர்கள், திருச்செந்தூருக்கு நடைபயணம் செய்து வரும் பக்தர்கள், முருகர் மாலை அணிந்த பக்தர்கள் என பக்தர்களின் வருகை அதிகம்.

இந்த மாதத்தில் அதிகாலை 3 மணிக்குத் திறக்கப்படும் நடை, மாலை 7 மணிக்கெல்லாம் அடைக்கப்படுகிறது.

இதற்கான அறிவிப்பு ஏதும் முறையாக செய்யப்படவில்லை.

இத்தனைக்கும், வாகன நிறுத்தம், கோவில் பேருந்து நிறுத்தங்களிலும் கூட எந்த வித அறிவிப்புகளும் செய்யப்படவில்லை.

குறைந்தபடசம் அப்படி ஏதாவது அறிவிப்பு செய்திருந்தாலாவது மாலை 6.30 மணிவாக்கில் கோவில் அருகே சுற்றித்திரிந்த பக்தர்கள் உஷாராகி தரிசனத்திற்கு நுழைந்திருப்பார்கள்.

அந்த அறிவிப்புக் கூட இல்லாத காரணத்தால், வழக்கம் போல, இரவு 8.30, 9 மணி வரை தரிசனத்திற்கு அனுமதி உண்டு என்று நினைத்துக்கொண்டு பக்தர்கள் நிதானமாக இருந்திருக்க வாய்ப்பில்லை.

அதே நிதானத்தில் நானும் எனது குடும்பத்தோடு கோவில் வாயிலை 7.05 மணிக்கு அடைந்த போது எனக்கும் அதிர்ச்சி தான்.

ஒரே 3க்கு 4 பதாகையில் ஒரு விளம்பரம்.
மார்கழி மாதம் பக்தர்கள் அதிகாலை 3 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே அனுமதி என்று.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் வரவும் போகவுமாக அங்கிருந்த காவலர்களிடம் எப்படியாவது உள்ளே நுழைய வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டனர்.

அரிச்சந்திரனின் அண்ணன் பிள்ளைகள் போலப் பேசிய காவலர்களின் பேச்சை நம்பிப் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

நான் சிறிது நேரம் அங்கே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அரிச்சந்திரனின் அண்ணன் மகன்களின் நேர்மையை விலைக்கு வாங்கியவன் யாராவது வருவான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அதேபோல ஒரு கூட்டம் வந்தது. ஒரு பத்து பேரை உள்ளே அனுப்பினார்கள் அரிச்சந்திரனின் அண்ணன் மகன்கள்.

என்னப்பா என்று விசாரித்த்போது, வந்தவர் அமைச்சர் சேகர்பாபுவின் மாமாவாம்.

அதுவரைக்கும் வந்துகேட்டுக் கெஞ்சிய, வாக்காளர்களாகிய பொதுமக்களிடம், அதாவது திமுக வுக்கு வாக்களித்த சேகர்பாபுவின் மாப்பிள்ளைகளிடம், தாய்மார்களிடம், “பூட்டுன கோவிலுக்குள்ள போயி மணியாட்டப் போறியா” ரீதியில் நக்கலாகப் பேசிய அரிச்சந்திரனின் அண்ணன் பிள்ளைகள், சேகர்பாபுவின் மாமா வந்ததும், தங்கள் வாயைப்பூட்டி விட்டுக் கதவைத் திறந்து விட்டுவிட்டனர்.

என்னவோ, அந்த சாமிக்குத்தான் வெளிச்சம்.

இந்த கட்டுரையின் மூலமாக நான் பக்தி என்ற பெயரில் அதிகப்படியான கூத்தடித்து, கோவில்களை நாறடிக்கும் பொதுமக்களையும், இப்படி பொதுமக்களை சரியான தகவல் இல்லாமல் அலைக்கழித்து, பணத்திற்குக் கூழைக்கும்பிடு போடும் ஆட்களையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நினைவுகளுக்காக நான்.