ஒரு அரசின் அடிப்படைக்கடமை என்பது குடிமக்களுக்கான தரமான வாழ்க்கையை கொடுப்பது மட்டுமல்லாது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆதாரமாக இருப்பது.
மக்களின் அடிப்படைத் தேவையான உணவு, உடை இருப்பிடம் ஆகியவற்றைப் போதுமான கல்வியும், வேலைவாயப்பும் வழங்குவதை வைத்து அவரவர் பூர்த்தி செய்து கொள்வார்கள்.
ஆனால் மருத்துவ செலவு என்பது சாதாரண மக்கள் அனைவராலும் ஈடுசெய்ய இயலாத ஒன்று. இங்கு அன்றாட நோய்கள் ஏழை பணக்காரனைப் பார்த்து வருவதில்லை. பாமரனுக்கும் லட்சங்களில் செலவு வைக்கும் நோய்களும் இன்றைய நாட்களில் வருவது இயல்பாகி விட்டது. அப்படியிருக்கும் போது மக்களிடம் வரி வசூலிக்கும் அரசு தான் இலவச மருத்துவத்தை மக்களுக்குத் தரமாக அளிக்க வேண்டும்.
மருத்துவ வசதிகளும், ஆபத்து மற்றும் விபத்து உதவிக்கட்டமைப்புக்களும் தரமானதாக இருக்க வேண்டும். தாமதமின்றி செயல்பட வேண்டும்.
சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவத்தை நினைக்கும் போது அந்த அரசின் மீது தீராத கோபம் வருகிறது.
தன் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்து அவசர முடிவெடுத்துத் தூக்கு மாட்டிக் கொண்ட சுலேகா என்ற பெண்ணை அவளது உறவினர்கள் படாத பாடுபட்டு ஆம்புலன்ஸ்ல் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கே நிகழ்ந்த கொடுமை சகிக்க இயலாத ஒன்று.
ஆம்புலன்ஸ்ன் கதவைத் திறக்க இயலாமல் அந்தப் பெண் ஆம்புலன்ஸ்ன் உள்ளேயே உயிரிழந்திருக்கிறார்.
ஒருவழியாக ஆம்புலன்ஸ்ன் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அந்தப்பெண்ணை வெளியே எடுத்து பிறகு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு, அவர் இறந்து விட்டதாகவும், சிறிது முன்னரே சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.
இப்படி ஒரு கொடுமையை எங்காவது காண இயலுமா?
ஆம்புலன்ஸ்ன் கதவு வேலை செய்யாமல் சிக்கலடைந்து ஒரு உயிர் போவது எவ்வளவு கொடுமை?
ஆம்புலன்ஸ்களைப் பராமரிப்பது கூட அரசுத்துறையால் முடியவில்லையா?
மேலும் ஒரு தகவல் என்னவென்றால் அது ஏதோ தொண்டு அறக்கட்டளையின் ஆம்புலன்ஸ்.
அப்படியென்றால் அரசின் ஆம்புலன்ஸ்கள் என்பது இயங்குகிறதா இல்லையா?
அப்படியே ஒரு தொண்டு நிறுவனத்தின் இயக்கத்திலிருக்கும் ஆம்புலன்ஸ்களை போக்குவரத்து அதிகாரிகள் பரிசோதிக்கவே இல்லையா?
போனது ஏதோ சாதாரண குடிமகனின் உயிர் என்பதால் இந்த விஷயம் இன்னும் ஓரிரு நாட்களில் மறைந்து விடும்.
ஆனால் இதை இப்படி விடுவது அரசுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல.
கட்டாயம் இவை சீரமைக்கப்பட வேண்டும்.
வருத்தத்துடன் நினைவுகள்.