எந்தவொரு விஷயத்தையும் உருவாக்குவதைக் காட்டிலும் அதன் பராமரிப்பில் தான் அதனுடைய முழுப்பலனும் கிடைக்கும்.
சரியாக கவனிக்கப்படாமல், பராமரிக்கப்படாமல் விடப்பட்ட எதுவுமே அதன் பலனைத்தராது. மேலும் அவப்பெயரையும், மனவருத்தத்தையும் உண்டாக்கி விடும்.
அதை உருவாக்குவதற்கான உழைப்பு விரயமாகிப்போகும்.
அப்படிப் பல எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் தாண்டி உருவானது தான் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்.
ஆனால் அதன் பராமரிப்பு குறைபாடுகள் காரணமாகவும், நகரத்திலிருந்து அது அமைந்திருக்கும் தொலைவு காரணமாகவும் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு உள்ளானது மறுக்க முடியாத ஒன்று.
ஆரம்ப காலங்களில் பேருந்து முனையத்தின் உள்ளே போதுமான கடை வசதிகள் இல்லாமலும், நகரத்தையும், அந்த முனையத்தையும் இணைக்கும் பேருந்துகள் இல்லாமலும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதெல்லாம் ஓரளவு சரிசெய்யப்பட்டாலும் கூட, பண்டிகை நெரிசல் காலங்களில், ஒட்டுமொத்த அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளே வர உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் நெரிசலில் காலதாமதமாகி விமர்சனம் வெடித்தது.
இப்போது ஒரு புதிய புகார் எழுந்துள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் மிகப்பெரிய வாகன நிறுத்தமானது இப்போது சமூக விரோதிகளுக்கு சௌகரியமான கூடாரமாக மாறி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
அங்குள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தத்தில் கார்களை நிறுத்தி விட்டு அதிலேயே மது அருந்துவது, வாகன நிறுத்ததினுள்ளேயே புகை பிடிப்பது போன்ற காரியங்கள் நிகழ்வதாகவும், கஞ்சா வியாபாரம் நிகழ்வதாகவும், பாலியல் தொழில் நிகழ்வதாகக் கூடப் புகார் எழுந்துள்ளது.
மேலும் ஒரு சிலர் மது அருந்திவிட்டு மகளிர் பயணிகளை கேலி செய்ததாகவும் ஒரு புகார் எழுந்திருக்கிறது.
இதை அங்கே வாகன நிறுத்த வசூல் முகமையோ அல்லது பராமரிப்பு முகமையோ கண்டுகொள்வதில்லை போல. காவல்துறை அதிகாரிகள் பெயருக்கு ஓரிரண்டு ஆட்களே இருப்பதால் இத்தகைய தவறுகள் சாதாரணமாக நிகழ்கிறது என பொதுமக்கள் புகார் அளித்து, இன்று ஒரு பத்திரிக்கையில் கட்டுரை வந்துள்ளது.
நாம் ஏற்கனவே நமது அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறோம். தீபாவளி பண்டிகைக்கு சொந்தக்காரப் பிள்ளையை பேருந்தில் வழி அனுப்ப, ஒரு பதினைந்து நிமிடம் பாதையில் வண்டியை நிறுத்தியதற்கு ஓடி வந்து அபராதம் விதித்த அந்த காவலர்கள் எல்லாம் இப்போது எங்கே?
இப்படி கோடிகளில் கட்டி உருவாக்கி, மக்களின் விமர்சனங்களையும், தனியார் பேருந்து நிறுவனங்களின் வேண்டுகோள்களையும் தாண்டி கிளாம்பாக்கத்தில் இனி பேருந்து நிலையம் செயல்படும் என்று கடுமையான உத்தரவு போட்டுத் துவங்கிய பேருந்து முனையத்தைப் பராமரிக்கும் முறை இது தானா?
இதற்குத் தான் இந்தப்பாடா?
இது உடனடியாகக் களையப்பட வேண்டிய விஷம்.
கண்டிப்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேண்டுகோளுடன்
நினைவுகள்.