உலகத்தை அறிந்தவன்கண்ணதாசன்
துணிந்தவன் அவனே
கவலையில்லாத மனிதன்
கவலைகளால் மனதைக் குழப்பிக் கொள்ளாமல் ஒரு வேளையில் ஈடுபடும் பொழுது அதை சிறப்பாக செய்ய முடியும். ஏதோ ஒரு எண்ணம் மனதில் ஓடிக் கொண்டே இருந்தால் செயலில் கவனம் தவறி விடும்.
நொடிப் பொழுதின் கவனம் முக்கியம். விளையாட்டுக்கு இது ரொம்பவும் பொருந்தும். விளையாட்டின் சிறந்த சாதனைகளைப் படைத்தவர்கள் பெரும்பாலும் கவலையை ஒதுக்கி, மனதை ஒரு நிலைப் படுத்துப்பவர்களாகவே இருந்துள்ளனர்.
இந்நிலையில் சில காலம் முன்பு வரை உலக்க் கிரிக்கெட்டில் உச்ச நிலையில் இருந்த இந்திய அணி சற்றே சோர்வடைந்து கவலைகளால் சூழப்பட்டுள்ளது.
ஒரு நாள் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம் வரையில் இந்தியாவை வீழ்த்த ஆளில்லை என்றே தோன்றியது. அதில் தவற விட்ட கோப்பையை T20 உலக கோப்பையை கைப்பற்றி, 2011 முதலான கோப்பை வறட்சியை போக்கியது சென்ற ஆண்டு தான்.
கிரிக்கெட்டின் உச்சமாக கருத்தப்படும் டெஸ்ட் போட்டிகளில் கடந்த இரு சுழற்சிகளில் இறுதிப் போட்டியை அடைந்தது இந்தியா. ஒரு சுழற்சியின் இறுதிப் போட்டியை அடைய 2-3 ஆண்டுகள் தொடர்ந்து நன்றாக விளையாட வேண்டும்.
2025இல் முடிவு பெரும் இந்த சுழற்சியிலும் இறுதி சுற்றை அடைவது எழுதப்படாத விதியாகவே தோன்றியது. 4 மாதங்கள் முன்பு வரை. நியூசிலாந்து தொடர் ஆரம்பமாகும் முன்பு இறுதி போட்டியை அடைய இந்தியாவிற்கு 99% வாய்ப்பு இருந்தது. அந்தத் தொடரில் ஏற்பட்ட வரலாறு காணாத தோல்வியால் துவங்கிய சரிவை இன்று வரை நேர்படுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன.
புதிய முயற்சியாக அணியின் கலாச்சாரத்தை ஒழுங்கு படுத்தும் விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது வீரர்களுடன் குடும்பங்கள் பயணிக்க கூடாது, ஏஜென்ட் மற்றும் தனிப்பட்ட உதவியாளர்கள் பயணிக்க கூடாது, அணியின் ஒவ்வொரு பயிற்சியிலும் முழு நேரம் ஈடுபட வேண்டும், என்பது போல சில விதிமுறைகளை BCCI விதித்துள்ளது.
COVID சமயத்தில் மேல் கூறப்பட்ட விதிமுறைகள் பலவும் தளர்த்தப்பட்டு அணியுடன் குடும்பங்கள் பயணிக்கலாம், பயிற்சியில் ஈடுபடுவது ஒவ்வொருவரின் தனி விருப்பம் போன்ற நடைமுறைகள் கையாளப்பட்டன.
அதற்கும் முன்பு அணில் கும்ப்ளே பயிற்சியாளராக அமைந்த போது, அவர் அணியை பள்ளித் தலைமை ஆசிரியர் போல கையாள்கிறார், வீரர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று விராட் கோஹ்லி தலைமையில் வீரர்கள் புரட்சி செய்து அவரை நீக்கியது நினைவிருக்கலாம்.
அதன் பிறகு ரவி சாஸ்திரியுடன் இணைந்து கோஹ்லியின் தலைமையிலான அணி விதிமுறைகளை தளர்த்தி, வெற்றி என்ற ஒரே குறிக்கோளுடன் செயல்பட்டது இந்திய அணியின் பொற்காலமாக அமைந்தது.
வெளிநாடுகளில் வெற்றி பெற என்ன வேண்டும்? 20 விக்கெட்டுக்களை வீழ்த்த, பலமான ஐந்து பந்து வீச்சாளர்கள் வேண்டும். இவர்களை சுற்றி மீதம் இருக்கும் 6 இடங்களை மட்டையாளர்களால் நிரப்பி, அவர்களுக்கு போதுமான சுதந்திரம் கொடுத்து, அவர்களின் தோல்விகளை பெரிதும் பொருட்படுத்தாமல் அமைக்கப்பட்ட கட்டமைப்பு நல்ல விளைவுகளைக் கொடுத்தது.
இவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட அணியை ராகுல் திராவிட் மற்றும் ரோஹித் சர்மா அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்கள் என்பதே உண்மை. டெஸ்டில் நல்ல நிலையில் இருந்தாலும், விக்கெட்டை தக்க வைத்து கொண்டு ஆடும் பொறுமையான ஆட்டம் ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளுக்கு ஏற்புடையதல்ல என்பதை அறிந்து பயமில்லாமல் ஆடும் ஆட்டத்தை ரோஹித் முன்னோடியாக இருந்து செய்து காட்டினார். இவைகளின் பலனே மேலே கூறிய கோப்பை வறட்சியின் தீர்வு.
பின்பு என்ன ஆனது? தோல்வியின் பயத்தை மறப்பதே வெற்றிக்கு வழி வகுக்கும் என்ற கோட்பாடு எங்கே போனது?
நியூசிலாந்து தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா ஓரிரு பிழைகள் செய்து விட்டது. மழை காரணமாக ஸ்விங் ஏற்படும் நிலவரம் இருந்த போது, பொதுவாக அணிகள் பந்து வீச்சைத் தேர்வு செய்வது வழக்கம். ஆனால் இந்தியாவில் பொதுவாக மழை ஓயந்த பிறகு வெயில் பொதுவாக ஸ்விங் ஏற்படும் சூழ்நிலையை மாற்றி விடும். முதல் ஓரிரு செஷன்களை தாக்கு பிடித்து விட்டால் பின்பு காய்ந்த பிட்சில் ரன்கள் சேகரிப்பது எளிது.
இந்த டெஸ்டில் அது நடக்கவில்லை. இந்தியா முதல் செஷனிலேயே பத்து விக்கெட்டும் இழந்து விட்டது. மேலும் எதிரணி பேட்டிங் வந்து சில நேரத்திலேயே மட்டையாட்டம் எளிதாகி விட்டது. மேலும் நான்காவது மற்றும் ஐந்தாவது நாள் மழை வந்து சுழற்பந்து வீச்சாளர்களை ஆட்டத்திற்குள் வர விடவே இல்லை. இந்த டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததும், இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் மட்டும் களமிறங்கியதும் இந்தியா செய்த தவறு.
இதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு போட்டிகளுக்கும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான பிட்ச்கள் அமைக்கப்பட்டன. இதன் பின்விளைவு பேட்டிங் கடினமானது. இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து ஒரு நல்ல ஸ்பின்னரின் உதவியுடனே வென்று விட்டது. பொதுவாக பிட்ச்கள் மிகவும் வறட்சியாக அமைக்கப்படும் போது குறைந்த தரமுடைய சுழற்பந்து வீச்சாளர்களும் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும், அல்லது அவர்களின் பிழைகள் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தாமல் போய் விடும். கொஞ்சம் சமமாக பிட்ச் நிலையை அமைத்தால் தரம் மிகுந்த பந்து வீச்சாளர்கள் மேலோங்குவார்கள்.
அதிக டர்ன்(turn) உள்ள பிட்ச்கள், மிக திறமையான ஸ்பின்னர்கள் கொண்ட இந்தியாவிற்கு சாதகமாக அமைவதில்லை என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உண்டு.
போவதைக் கண்டு கலங்காமல்
வருவதைக் கண்டு மயங்காமல்மெய் தளராமல் கை நடுங்காமல்
கண்ணதாசன்
உண்மையை பொய்யை உணர்ந்தவனே
உலகத்தை அறிந்தவன்
துணிந்தவன் அவனே
கவலையில்லாத மனிதன்
இருந்தும் நமக்கு சாதகமாக இருக்கும் என்று எண்ணி, வறண்ட பரப்புகளை அமைக்க என்ன காரணம்? இறுதி போட்டிக்குத் தேர்வாக வேண்டும் என்ற பேராசையால் இப்படி அமைத்திருக்கலாம். அணிக்கு வெளியில் இருக்கும் தலைவர்களுக்கு அணியின் மீது நம்பிக்கை இல்லாமல் இப்படி செய்திருக்கலாம்.
இது போன்ற முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்று வெளிப்படையாகத் தெரிவதில்லை. தவறு நடக்கும் பொழுது யாரும் பொறுப்பேற்றுக்கொல்வதும் இல்லை. ரோஹித் தான் தவறுதலாக பேட்டிங் எடுத்து விட்டதாக குறிப்பிட்டார். அதே போல பிட்ச் இப்படி அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தவர்களும் தங்கள் தவறை உணர்வார்களா?
விளையாட்டு வீரர்கள் பொதுவாக வெற்றி பெற்றாலும் அவர்கள் தோல்வியை விட்டு ரொம்ப தூரம் விலகிப் போவதில்லை. இரண்டுக்கும் இடைவெளி ரொம்ப குறைவு என்பதையும் அறிந்திருக்கிறார்கள்.
வெளியே இருப்பவர்களுக்கோ பெரும்பாலும் இது விளங்குவது இல்லை. முடிவுடன் ஒன்றிப் போய் விடுகிறார்கள். விளையாட்டில் பல விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. இருந்தும் இவற்றை கட்டுப்படுத்த எத்தனிக்கும் பொழுது, ஓட்டைகளை அடைக்க நினைக்கும் பொழுது விரிசல்கள் விழுக்கின்றன.
ஆஸ்திரேலிய சுற்று பயணத்தில் இவ்விரிசல்கள் கண்கூடாக தெரிய ஆரம்பித்தன. டாஸ் வென்று பேட்டிங் செய்ய வேண்டிய இடத்தில், நம்பிக்கையின்மையால் செய்யவில்லை. பேட்டிங் ஐ மேம்படுத்த ஆல் ரவுண்டர்களை சேகரித்து, பந்து வீச்சில் கோட்டை விட்டனர். ஆல் ரவுண்டர்களால் திடப்படுத்த பட்ட மட்டை ஆட்டமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. தங்க முட்டையிடும் பும்ரா மீதான அபார வேலைப்பளுவால் அவருக்கு காயம் ஏற்பட்டது. கேப்டனுக்கே தன் இடத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டு அணியில் இருந்து விலகி கொண்டார்.
இந்த நிலவரத்துக்கு காரணமான மேல் நிர்வாகம் மேலும் தலையிட்டு இப்போது கடுமையான விதிகளை விதித்துள்ளது. வேலை நேரம் முடிந்த பின்பு ஒருவன் மனைவியுடனோ பெண் தோழியுடனோ வெளியே போனால் என்ன தவறு? அவன் அவனது ஓய்வு நேரத்தில் என்ன செய்யலாம் செய்யக்கூடாது என்று நிர்வாகம் ஏன் சொல்ல வேண்டும்?
வாழ்வை அறிந்தவன் சம்சாரி
கண்ணதாசன்
வாழப் பயந்தவன் சன்னியாசி
கண்ணீர் வடிப்பவன் மூடனடா
காலத்தை வென்றவன் வீரனடா
நல் இன்பத்தைத் தேடி உறவாடு
நீ எழுந்திடு மனிதா விளையாடு
நிர்வாகம் அதிகம் தலையிடும் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகள் கிரிக்கெட்டில் பெரிதாக சாதிப்பதில்லை.
இந்த இறுக்கமான சூழலில் இருந்து இந்திய அணி விடுபடுமா, வெற்றிப் பாதையை தொடருமா?
இந்தப் பயணம் எங்கே போய் முடியும் என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.
எதிர்பார்ப்புடன் நினைவுகள்.