உணவகங்களில் சென்று மனதிற்குப் பிடித்த மாதிரி நாவில் இனிக்கும் ருசியோடு உணவருந்தும் ஆசை அனைவருக்கும் இருக்கத்தான் செய்கிறது.
முன்பெல்லாம் அது பௌர்ணமி, அமாவாசை போன்ற நிகழ்வாக, அவ்வப்போது என்ற ரீதியில் இருந்தது.
ஆனால் இப்போதோ வரிசையாக திறக்கப்படும் உணவகங்களையும், அதில் இருக்கும் கூட்டத்தையும் பார்க்கும் போது வீட்டில் யாரும் சமைப்பதே இல்லையோ என்ற கேள்வி தான் எழுகிறது.
சரி இந்தக்கேள்வியை நாம் அழுத்தம் திருத்தமாகக் கேட்டால் அது ஆணாதிக்கக் கேள்வி ஆகி விடும்.
ஆனால் வேறொரு கேள்வி என் மூளையில் ஆனி அடித்தாற் போல பதிந்தது.
நேற்று மருத்துவ அலுவல் காரணமாக குடும்பத்தோடு வெளியே சென்றதால், இருவேளையும் உணவகத்தை நாடும் தேவை ஏற்பட்டது.
இருவேளையும் நாங்கள் சாப்பிட்டு முடித்து பணம் செலுத்தும் போது, “பரவாயில்லையே விலை” என்று சொல்லும் அளவில் இல்லவே இல்லை.
“அடப்பாவிகளா” என்ற ரீதியில் தான் இருந்தது.
காலை உணவு முடிந்து பணம் செலுத்தும் போது என் மனைவி அருகில் இல்லை. மதியம் இருந்தாள். பண ரசீதைப் பார்த்து விட்டு என் மூளை போட்ட கணக்கு எனது முகபாவனை வழியாக அவளுக்குப் புரிந்து விட்டது போல.
உடனே ஒரு கேள்வி கேட்டாள்.
“இப்போலாம் எங்கேயுமே மெனு கார்டு தரதே இல்லல,?“
“ஆமாம்” என்று சொல்வதைத் தவிரவேறு எதையும் சொல்லத் தோன்றவில்லை எனக்கும்.
சமீபத்திய எனது உணவக அனுபவத்தில் இது உண்மைதான் என்று விளங்கியது. அதுவும் தமிழ்நாட்டில் மட்டும் தான் இப்படி என்பதும் ஆனித்தரமாக விளங்குகிறது. ஏனென்றால் சமீபத்திய எனது குஜராத் பயணத்தின் போது, நானும் எனது நண்பரும் குஜராத்தி எழுத்துக்கும் இந்தி எழுத்துக்கும் என்ன வித்தியாசம் என்பதையே விலைப்பட்டியலில் தான் படித்தோம்.
அப்படியான விலைப்பட்டியலையோ, மெனு கார்டையோ, இங்குள்ள சங்கீதா, கீதம், கெஸ்ட் ஹோட்டல் போன்ற உணவகங்களில் நான் பார்த்ததாக ஞாபகம் இல்லை.
சரி மெனு கார்டுகளை மறைப்பதால், என்ன பயன்? அதை ஏன் செய்யப்போகிறார்கள்? என்று தானே சிந்தனை போகிறது.
அங்கே தான் ஒரு சூட்சமம் ஒளிந்திருக்கிறது.
மெனு கார்டு தரப்பட்டால் அதில் விலைப்பட்டியலும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதைப்பார்த்து நாம் அடையும் அதிர்ச்சியிலேயே பாதிதான் சாப்பிடுவோம். அதனாலேயே அவை காணாமல் போய்விட்டதோ என்று தோன்றுகிறது.
நிகழ்ந்த எங்களது அனுபவத்தை நான் இதற்கு உதாரணமாக்குகிறேன்.
நேற்றைய காலை உணவு- நாங்கள் உண்ட பட்டியலும் எனது தோராயமான மனக்கணக்கும்.
நெய்தோசை-110 ரூ
பூரிசெட் -75 ரூ
சாம்பார் இட்லி- 75ரூ
வடை (4). -60 ரூ
காபி (2). -60 ரூ.
நாங்கள் சாப்பிட்ட அந்த அளவிலான உணவகத்திற்கு இந்த மதிப்பீடே அதிகம் தான். ஆனால் அந்த சாலையில் அருகே வேறு உணவகங்கள் இல்லாத காரணத்தால் ஆள் இல்லாத ஊர்ல இவன்தான் ராஜா என்ற கதையில் இந்த விலை.
சரி என்னுடைய மதிப்பீடே நியாயத்தையும் தாண்டி அதிகமானது தான்.
மொத்தம் 380 ரூ வருகிறதல்லவா.
இது நியாயமான மதிப்பீடு என்பது அன்றாடம் உணவருந்துபவர்களுக்குப் புரியலாம்.
என்னுடைய நியாயமான அதிகபட்ச மதிப்பீட்டின் படி 380 ரூ. ஆனால் எனக்குத் தரப்பட்ட பில் தொகை 510 ரூ.
சற்றே அதிர்ச்சி, மருத்துவ அலுவல் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்த காரணத்தால் விலைப்பட்டியலை ஆராய முடியவில்லை. ஆனால் கூட்டலில் 510 வந்தது.
வயிறு நிறைந்தது, பர்ஸ் சுருங்கியது.
அடுத்து மதியம், அசோக் நகரில் இருக்கும் கீதம் உணவகத்திற்குச் சென்றோம்.
பெரும்பாலும் முன்பெல்லாம் புத்தக வடிவில் பெரிய உணவுப்பட்டியலை பந்தாவாகத் தரும் அவ்வகை உணவகங்கள் இப்போது வேலை ஆட்களின் வழியாகத்தான் பட்டியலை வெளியிடுகின்றன.
நாமே இது இருக்கா அது இருக்கா என்று கேட்டு உண்ண வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.
அப்படி நாங்கள் உண்ட உணவு (கட்டாயப்படுத்தப்பட்ட உணவோடு சேர்த்து).
ஆமாம். எனது அம்மா சாப்பாடு என்று சொல்லிவிட்டார். நானும் எனது மனைவியும், ஒரு காளான் பிரியாணியும், ஒரு புரோட்டாவும் சொன்னோம். “அம்மாவுக்கு சாப்பாட்டில் சூப் வரும். நீங்களும் சேர்ந்து சாப்புடுறீங்களா? ஏதாவது சூப் தரவா” என்று கேட்டார்கள்.
சரி பாசக்காரப்பயகளா இருக்காய்ங்களேனு ஒரு சூப்பயும் சொல்லி விட்டோம்.
சரி இந்த உணவுக்கான விலை மதிப்பீட்டிற்கு வரலாமா?
நல்ல பெரிய உணவகம். அதனால் மிகப்பெரிதாகவே உணவுக்கு மதிப்பளிக்கலாம்.
சாப்பாடு (அளவு)- 180 ரூ ( 3 கிலோ அரிசி விலை)
காளான் பிரியாணி- 200 ரூ ( காளானுக்கு 70/பிரியாணிக்கு 130)
புரோட்டா (2) -75 ரூ
சூப் -80 ரூ
இந்த விலை நிர்ணயம் நியாயமானது தானே?
இதன்படி எங்களுக்கு ஆக வேண்டிய மொத்த செலவு? 535 ரூ.
ஆனால் எங்கள் பில் தொகை 835 ரூ.
பில் தொகை பார்த்த உடனேயே சாப்பாடு ஜீரணமாகி விட்டது.
இதல ஸ்டார்ட்டர் வேணுமானு வேற 3 தடவ கேட்டானுங்க. ஸ்டார்ட்டர் வாங்கிருந்தா அங்கேயே என் மன்த் என்ட் ஆயிருக்கும். இப்பயும் அப்படித்தான் ஆயிடுச்சு.
சரி கதைக்கு வரலாம்.
சாப்பாடு (அளவு கிண்ண சாப்பாடு, சப்பாத்தி, பாதி சூப்)-270 ரூ
காளான் பிரியாணி- 335 ரூ (புளியஞ்சோற்றில் காளான் கிடந்தது)
புரோட்டா -90 ரூ
சூப்- 90 ரூ
இதோட வரிவகையறாக்கள் சேர்த்து 835 ரூ பில்தொகை.
சாப்பாடு 270 ரூ என்று பட்டியல் தரப்பட்டிருந்தால் எனது அம்மா அந்த உணவகத்தை விட்டு உடனே எழுந்து வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
பிரியாணி 335 ரூ என்று பட்டியலில் பார்த்திருந்தால் என் மனைவி, இனி நான் வாழ்க்கையில் பிரியாணியே சாப்பிட மாட்டேன் என்று சபதம் எடுத்திருப்பாள்.
ஆனால் சூட்சமமாக இப்படி விலை தெரியாமல் சாப்பிட வைத்து விட்டார்கள். இப்போது குடும்பத்தோடு மனவருத்தமடைந்து புலம்புகிறோம்.
இப்படி ஏன் அநியாய விலை போடுறானுங்கனு.
மிக அதிகமாகப் பணம் இருப்பவர்கள் இதை கேலி செய்யலாம்.
ஏன் சும்மா போற போக்கில் யாராவது கேலி செய்ய வேண்டுமானாலும் செய்யலாம்.
உனக்கெதுக்கு இந்தப்பொழப்பு.
காசு இல்லாட்டி மூடிக்கிட்டு வீட்ல சாப்புட வேண்டிதானேனு.
காக்கா முட படத்தில் வரும் சிறுவர்கள் போலத்தான்.
நாமும் என்றாவது வெளியே செல்லும் போது வீட்டிற்கு வந்து சமைத்து சாப்பிட வழி இருக்காது.
மேலும் பலமுறை அந்தப்பக்கமாக அந்த உணவகங்களைக் கடந்து செல்லும் போது என்றாவது ஒருநாள் இங்கே சாப்பிட வேண்டும் என்று நமக்கும் தோன்றத்தான் செய்யும்
ஆகையால் நான் அங்கே சென்று ஏன் சாப்பிட்டேன் என்று ஆராய்ந்து கேலி செய்வது தவறு.
நியாயமான விலையைத் தாண்டி மிகப்பெரிய அளவிலான கொள்ளை லாபம் ஏன் நிர்ணயிக்கப்படுகிறது?
விலைப்பட்டியல் உணவகங்களில் வைக்கப்பட வேண்டும் அல்லது தரப்பட வேண்டும் என்ற அரசின் விதி ஏன் மீறப்படுகிறது?
இவர்களை யார் கேள்வி கேட்பது?
சாதாரண அன்னாடங்காட்சியான ஆட்டோக்காரர்கள் 50 ரூ அதிகம் கேட்டால் பொங்கும் நாம், ஒருவேளை உணவில் 300-400 ரூ கொள்ளை லாபம் அடிக்கும் உணவகங்களைக் கண்டுகொள்ளாமல் ஏன் விடுகிறோம்?
இவர்களின் விலையேற்றம் வால்பிடித்தாற் போல, அடுத்த நிலை உணவகங்களுக்கும் தான் பரவுகிறது.
அப்படியானால் உணவகங்களையே நம்பி ஊரை விட்டுப் பிழைக்க வந்த இளைஞர்களின் கதி என்ன?
இதன் தொடர்ச்சியாக இன்னொரு விதமான தினுசான ஏமாற்று வேலையும் நடக்கிறது. அதை இன்னொரு பதிவில் பேசலாம்.
ஆதங்கத்துடன் நினைவுகள்