Categories
தற்கால நிகழ்வுகள் விளையாட்டு

பார்டர்- கவாஸ்கர் தொடர் 2024

கிரிக்கெட் என்ற விளையாட்டிற்கு என்றைக்குமே மவுசு தான். அதிலும் இந்தியாவில் அதற்கு வெறித்தனமான ரசிகர்கள் அதிகம். அந்தக்காலத்தில் இருந்து இப்பொது டி20 வரை கிரிக்கெட் எத்தனை மாறுதல்களை அடைந்தாலும், ரசிகர்கள் அதன் மீது வைத்திருக்கும் அன்பு மாறவில்லை.

ஒரே ஒரு சின்ன மாறுதல் என்னவென்றால்,
முன்பெல்லாம் கிரிக்கெட் என்றாலே பேட்ஸ்மேனுக்குத் தான் ரசிகர்கள் இருந்தனர்
ஆனால் சமீப காலங்களில் தான் பந்து வீச்சாளர்களுக்கும் சிறிது மரியாதை கிடைக்கத் துவங்கியுள்ளது.

டி20 போன்ற அதிரடி ரக ஆட்டங்களில் இல்லாவிட்டாலும் டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சாளர்களின் பங்கு முக்கியம் என்பதை நிரூபித்து விட்டது, சமீபத்திய பார்டர்- கவாஸ்கர் போட்டி.

ஆசிரியர் சிவப்ரேம் எதிர்பார்த்து எழுதியிருந்த பார்டர்- கவாஸ்கர் கோப்பைத் தொடர் போட்டி இனிதே நிறைவடைந்தது.

இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான பலப்பரீட்சையில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

நாம் மேற்கூறியது போல, முன்பெல்லாம் கிரிக்கெட் என்றாலே பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் தான். ஏன் இந்தத் தொடரின் பெயரே கூட பார்டர்- கவாஸ்கர் என்ற இரு பேட்ஸ்மேன் ஜாம்பவான்களின் நினைவில் தான் நடத்தப்படுகிறது.

இருவரும் அந்தந்த அணிகளின் தலைவர்கள் என்ற காரணம் தான் முக்கியமானது என்றாலும், அந்தக்காலத்தில் பேட்ஸ்மேன்களான இருவரும் பிரபலமானது போல, பத்துவீச்சாளர்கள் பிரபலமாகவில்லையே!

ஆனால் இந்தத் தொடர் அப்படியல்ல.

இந்தியா தோல்வி அடைந்தாலும் கூட, ஓரளவுக்கு மானத்தோடு தோற்றதற்குக் காரணம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தான்.

பும்ரா தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்ட போது.

இவர் 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு பெரிய பலம் சேர்த்ததோடு, தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

இவர் வீழ்த்திய 32 விக்கெட்டுகளும் இந்தியா வெல்வதற்கான அஸ்திவாரம் தான். ஆனால் பேட்ஸ்மேன்களின் கடுமையான சொதப்பல் காரணமாக இந்தியாவால் எழ முடியவில்லை.

கடந்த நான்கு தொடர்களையும், அதாவது 2014 ஆம் ஆண்டு முதல் பத்து ஆண்டு காலமாக, இந்தியாவே இந்தத் தொடரை வென்று ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது.

இந்த முறையும் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்தது.

முதல் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸ்ல் முதலில் பேட்டிங் செய்த இந்தியா பத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 150 ரன்களை எடுத்து அதிர்ச்சியடைந்தாலும், ஆஸ்திரேலியாவின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசரடித்த பும்ரா மற்றும் மற்ற பௌலர்கள் ஆஸ்திரேலியாவை 104 ரன்களுக்குள் சுருட்டினர். இரண்டாவது இன்னிங்ஸ்ல் சுதாரித்த இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய பௌலர்களை திணறடித்தனர். 487 ரன்களை அடித்து துவம்சம் செய்தனர்.

ஜெய்ஸ்வாலும், கோலியும் அடித்த சதம் வீண்போகவில்லை். ஆனால் இந்த ஆட்டத்திற்குப் பிறகு அவர்கள் சாதிக்கவில்லை.

அடுத்து ஆடிய ஆஸ்திரேலியாவை பதம் பார்த்தனர் இந்திய பௌலர்கள். இதனால் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஐந்தாவது முறையாக இந்தக் கோப்பை நமக்குத் தான் என்ற ரீதியில் நடைபோட்டது.

நாங்க என்ன சும்மாவா!? என்று கோபமடைந்த ஆஸ்திரேலிய வீரர்கள் இரண்டாவது ஆட்டத்திலிருத்தே தமது போக்கை மாற்றினர்.

இந்த ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்களின் மாபெரும் சொதப்பல் காரணமாக ஆஸ்திரேலியா பத்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று முதல் ஆட்டத்திற்கு தக்க பதிலடி கொடுத்தது.

மூன்றாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயம். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் ஆட்டத்திற்கே உண்டான பொறுப்பை மறக்காமல் மிக அருமையாக விளையாடினர். இந்த ஆட்டத்தில் தோல்வியின் வலியோடு விளையாடிய இந்திய வீரர்கள் ஓரளவுக்குப் பொறுப்போடு ஆடி, தோல்வியோ வெற்றியோ அடையாமல், ஆட்டம் சமநிலையில் முடிய வழிவகுத்தனர்.

நான்காவது ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா தான் முதல் பேட்டிங். பேட்டிங்கில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது என்றே சொல்லலாம். இந்த ஆட்டத்தில் ஜெய்ஸ்வாலின், ஆட்டமும், நிதிஸ் ரெட்டியின் முதல் சதமும் மட்டுமே இந்திய ரசிகர்களுக்கு மன ஆறுதல்.

நிதிஸ் ரெட்டி புஷ்பா ரீதியில் ஃபயர் விட்டாலும், இறுதியில் இந்திய ரசிகர்களின் வயிற்றில் தான் நெருப்பு. காரணம் இந்தப் போட்டியிலும் ஆஸ்திரலியா கௌரவமான வெற்றி பெற்றது.

ஆக கடைசிப் போட்டியில் வென்றால் மட்டுமே, தொடரை சமனாவது செய்யலாம் என்ற மோசமான நிலைக்கு ஆளான இந்திய அணி, இந்த வருத்தத்தின் காரணத்திலேயே மிக சொதப்பலாக விளையாடி, கடைசி ஆட்டத்திலும் கேவலமாகவே தோற்றது.

பத்து வருட ஆதிக்கம் அழிக்கப்பட்டது.

நேற்றைய தினமணி நாளிதழில் வந்த கேலிப்படம்

இது போதாதென்று டெஸ்ட் உலகச்சாம்பியன் இறுதிப் போட்டியிலிருந்தும் இந்தியா வெளியேறியது வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போல இருந்தது.

பத்தாக்குறைக்கு பார்டர்- கவாஸ்கர் கோப்பையை பார்டரும் – கவாஸ்கரும் இணைந்தே வழங்குவார்கள் என்ற நடைமுறையை மாற்றி இந்த முறை பார்டர் மட்டுமே கோப்பையை வழங்கியது, இந்திய ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு பார்டர் மட்டும் கோப்பை வழங்கிய படம்

விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்றாலும், ஒரு சரித்திரம் மாறும் போது சிறிய வலி இருக்கத்தான் செய்யும். பார்க்கலாம் வரும் காலங்களில் இந்திய அணியின் சாதனைகளை.

எதிர்பார்ப்புடன் நினைவுகள்.