Categories
அறிவியல் ஆன்மீகம் தகவல் தற்கால நிகழ்வுகள்

தை பிறந்தால்?

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வாக்கு இன்றளவிலும் பொதுமக்களால் நம்பப்படுகிறது.

விவசாயம் என்பது பிரதான தொழிலாக இருந்த போது, அறுவடை முடிந்து தை மாதம் அனைத்தையும் கடவுளுக்கும் சூரியனுக்கும் படைத்து வழிபட்ட பிறகு, விளைச்சலை விற்றுப் பணமாக்கி, அதன்மூலமாக வருவாய் ஈட்டுவது வழக்கம். அதனால் தான், தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற சொல்லாடல் வந்தது.

தைப் பொங்கல் என்பது தமிழனின் சிறப்பான பண்டிகை, மாட்டுப் பொங்கல் என்பது விவசாயத்திற்கு உற்ற துணையாக இருந்த மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் கொண்டாடப்படுகிறது.

இதெல்லாம் பழைய கதை நண்பா, இதை ஏன் இப்போது பேச பேண்டும் என்ற எண்ணம் வரலாம்

காரணம் இருக்கிறது. இந்தத் தைப் பொங்கலுக்கு முதல் நாளான போகி தான் நமது பேசுபொருள்.

போகி- பழையன கழிதலும், புதியன புகுதலும்.

இது விவசாய கண்ணோட்டத்தில் பார்த்தோமேயானால், பழைய விளைபொருட்களை கழித்து விட்டு, புதுசாக விளைந்தனவற்றை பத்திரப்படுத்துவது என்று பொருள்படலாம்.

பொங்கல் விவசாயம் சார்ந்த பண்டிகை தான் என்பதால், இதைத் தவிர்த்து வேறேதும் அர்த்தம் இருப்பதாகத் தோன்றவில்லை.

மேலும், விவசாயக்கழிவு பொருட்களான, பழைய வைக்கப்புற்களை அழிக்கும் விதமாக, அவை எரிக்கப்பட்டிருக்கலாம்.

விவசாயக் கழிவுகள் எரிப்பு

ஆனால் அதை நம் மக்கள் தவறான ரீதியில் புரிந்து கொண்டு, பழையன கழிதல் என்ற எண்ணத்தில், வீட்டிலிருக்கும் தண்டமான தட்டுமுட்டு ஜாமான்களில் துவங்கி, டயர், ப்ளாஸ்டிக் என்று அனைத்தையும் எரித்து நாம் வணங்க வேண்டிய இயற்கையை சீரழிக்கின்றனர்.

இந்தப் பண்டிகை வரிசைகளே, இயற்கைக்கும் சூழலுக்கும் நன்றி சொல்லத்தான். ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

போகிக்கு பழையன கழிதல் என்ற பெயரில் எல்லாத்தையும் ஒரே நாளில் எரித்து மிகப்பெரிய காற்று மாசுபாடு உருவாகிறது.

போகி கொண்டாட்டம்

சென்னையில் போகி கொண்டாடப்பட்டதன் காரணமாக, காற்றுமாசு அதிகரித்தது என்ற வழக்கமான செய்தி இந்த ஆண்டும் வராமல் இல்லை.

முதலில் மூடநம்பிக்கைககளை விட்டு வெளியேறினாலே வாழ்வில் ஒவ்வொரு நாளும் பண்டிகை போல நல்ல நாள் தான்.

மூடநம்பிக்கைகளை சுமந்து கொண்டு இயற்கைக்கு சீரழிவை ஏற்படுத்தும் விதமாக எதையாவது செய்தால் பண்டிகை நாளும் சுமை தான்.

வீட்டிலுள்ள தேவையற்ற சாமான்கள் எரிப்பு.

அட என்னப்பா, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க சொல்லி எழுதின, இப்ப போகிக்கு மட்டும் மாத்திப் பேசுற என்ற எண்ணம் வரலாம்.
தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதையும் குழந்தைகளுக்காகவும், பட்டாசுத் தொழிலையே நம்பி வாழும் ஊர்மக்களுக்காகவும் தான். அதில் ஒரு உபயோகம் இருந்தது.

நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல, என்ற கோட்பாட்டின்படி அது ஏற்றுக் கொள்ளக்கூடியது.
ஆனால் டயரையும், ப்ளாஸ்டிக்கையும், தட்டுமுட்டு சாமானையும் எரித்துப் புகையைக் கிளப்புவதால் என்ன உபயோகம்? ஏன் நம் குழந்தைகளுக்கே கூட அது சுவாசக் கேடு தான்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை மாற்றி, தை பிறந்தால் ஊர் ஒரு வழியாகும் என்று அமைந்து விட வேண்டாம்.

எதையும் காரண காரியத்தோடு அனுகினால், அனைத்தும் சுகமே!

அன்புடன், நினைவுகள் சார்பாக, தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

சுற்றுச்சூழல் சீரழவு விளைவு- வாசிக்க
நமது தீபாவளிக் கட்டுரை- வாசிக்க