மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 ஆவது ஊதியக்குழு நியமிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
ஆம். தற்போது 7 ஆவது ஊதியக்குழு நியமித்தபடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்களுக்கு, அடுத்த ஊதியக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஏழாவது ஊதியக்குழு நியமிக்கப்பட்டு பத்தாண்டுகள் ஆக இருப்பதால், 2026 முதல் பண வீக்கத்தின் அடிப்படையில் புதிய ஊதிய விகிதம் முடிவு செய்யப்பட்டு அதன்படி ஊதியம் வழங்கப்படும்.
இது நல்ல விஷயம் தான். இளம் வயதில் முறையாக சிந்தித்து காலம் செலவு செய்து படித்துத் தேர்வில் வென்று அரசுப்பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு நியாயமான பண வீக்கத்தின் சராசரி மதிப்பிடப்பட்டு அதன்படி ஊதியம் வழங்கப்படுவது வரவேற்க்கத்தக்கது.
ஆனால் தனியார் நிறுவன ஊழியர்கள் என்ன பாவம் செய்தார்களோ?
அதிலும் தனியார் பள்ளி கல்லூரிகளில் பணிபுரியும் ஊழியர்கள் என்ன பாவம் செய்த காரணத்தால் சொற்பமாக ஊதியம் வாங்குகிறார்களோ புரியவில்லை.
உதாரணத்திற்கு பட்ட மேல் படிப்பு முடித்து ஆசிரியர் பணிபுரியும் ஒரு அரசுப் பணியாளர் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை ஊதியமாகப் பெறும் போது, அதே பட்ட மேல்படிப்பை முடித்து தனியார் பள்ளி, கல்லூரிகளில் வேலை செய்யும் பட்டதாரிகள் வெறும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரத்தை சம்பளமாகப் பெற்று வாழ்க்கை நடத்தும் அவலம் இங்கே இன்னும் மாறவில்லை.
அவர்களுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய சம்பளத்தை அந்த பள்ளி கல்லூரிகளின் முதலாளிகள் எனும் முதலைகள் விழுங்குவதை இந்த அரசாங்கம் கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்ப்பது அவலம்.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மட்டுமல்லாது தனியே ஒரு சில சலுகைகளும் மரியாதையும் சமுதாயத்தில் இருக்கிறது.
தனியார் நிறுவன ஊழியர்களிடமிருந்து அவர்களை அது வேறுபடுத்திக் காட்டுகிறது.
அது போதாது என்று இப்படி தனியார் நிறுவனங்கள் செய்யும் அநியாயத்தினாலும், தனது ஊழியர்களைக் கிள்ளுக் கீரையாக்கிப் பிடிங்கி எறிவதாலும் தான் பெரும்பாலான இளைஞர்கள் இடையே அரசு வேலைக்கான மிகப்பெரிய ஈர்ப்பு உருவாகிறது.
பணத்திற்குப் பணமும் கிடைத்துப் பாதுகாப்பான வேலையும் கிடைத்து விடுவதால் தான் எப்படியாவது அரசு வேலை வேண்டும் என்று பல லட்சம் ரூபாயை லஞ்சமாகக் கொடுத்தாவது அதைப் பெற்று விட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அரசு ஊழியர்கள் மட்டும் நாட்டின் குடிமகன்கள் அல்ல.
அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமையும், சலுகையும் வழங்குவது சரிதான். ஆனால் தனியார் நிறுவன ஊழியர்களையும் அரசு மாற்றான் பிள்ளைகளாக பாவிக்காமல் அவர்களையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கான நியாயமான ஊதியம் பெற வழிவகை செய்ய வேண்டும்.
ஒரு பிள்ளைக்குப் பழைய சோறும், இன்னொரு பிள்ளைக்கு பிரியாணியும் எந்தத் தாயும் பரிமாறுவதில்லை.
தனியார் முதலாளிகளின், அரசியல் பினாமிகளின் அட்டூழியத்தால் சீரழிந்து, கல்வியின் மதிப்பை அடமானம் வைத்து வாழ்ந்து வரும் பட்டதாரிகளின் நிலையை மாற்ற அந்த அரசாங்கம் இப்போதாவது முன்வர வேண்டும்.
சிறுபான்மை எண்ணிக்கையில் உள்ள அரசு ஊழியர்களின் மீது காட்டும் அக்கறை பெரும்பான்மையான எண்ணிக்கையில் இருக்கும் தனியார் நிறுவன ஊழியர்களின் மீதும் இருக்க வேண்டும்.
இந்தப்படிப்பு முடித்து இந்தப் பதவியில் நியமிக்கப்படும் ஊழியருக்குக் குறைந்தபட்ச நிர்ணயமான இவ்வளவு சம்பளம் வழங்கப்படாவிட்டால், இந்த நிறுவனம் நடத்தப்படுவதற்கு தகுதியில்லாத ஒன்று என்பதை ஆணித்தனமாக அமுல்படுத்த வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு இருக்கும் அதே வாயும் வயிறும் தான் மற்றவர்களுக்கும் இருக்கிறது. அவர்களுக்கு வாழ்க்கையின் மீதிருக்கும் அதே ஆசை தான் மற்றவர்களுக்கும் இருக்கிறது.
ஒருவரைப் பார்க்க வைத்து சாப்பிடுவது நல்ல குணமல்ல.
அரசாங்கம் நிச்சயமாக இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்.
ஒரு முன்னாள் தனியார் கல்லூரிப் பேராசிரியர் என்ற முறையிலும், சில அரசு ஊழியர்கள் உருவாக வழிகாட்டியாக இருந்தேன் என்ற முறையிலும், என்னைப்போல பல தனியார் ஊழியர்கள் படும் துயரங்களை மனதில் கொண்டும் மிகுந்த மனவருத்தத்தோடும், மன உளைச்சலோடும், இதை எழுதுகிறேன்.
இது மாற்றத்திற்கானதாக இல்லாவிட்டாலும் எனது மன ஆறுதலுக்ககாவாவது உபயோகப்படும்.
நினைவுகளின் பக்கத்தில் என் நிஜத்தை எழுதுகிறேன்.