ஒரு நல்ல தலைவன் என்பவன் கஷ்டம் என்று வரும்போது மக்களோடு துணை நிற்பவனே!
அதாவது துணை நிற்பது என்பது வெறும் நிவாரணத்தொகை வழங்குவது, இலவச அரிசி பருப்பு, மளிகை சாமான் என்று கேவலமான நிலைக்குச் சென்று விட்டது.
ஒரு கப்பல் மூழ்குகிறது என்றால் அதில் இருக்கும், ஊழியர்கள், பயணிகள் என்று முடிந்த வரை பெரும்பாலான ஆட்களைக் காப்பாற்றி விட்டு, கப்பலோடு கப்பலாக மூழ்கிப் போவதோ, அல்லது கடைசி ஆளாக தப்பித்து உயிர்பிழைப்பதோ என்று செய்பவர்தான் கப்பலின் உண்மையான தலைவன்.
அதுபோல, அரசியல் தலைவன் என்பவன், கடினமான சூழ்நிலைகளில் மக்களோடு களத்தில் நிற்க வேண்டும். அதுதான் தலைவனின் முதல் தகுதி.
அதற்காக கொரோனா வார்டில் நோயாளிகளோடு கட்டிப் புரண்டு அழ வேண்டும் என்பதல்ல.
ஆனால் மழை வெள்ளம், போன்ற இயற்கை பாதிப்புகள் நிகழும் போது, முதலில் அந்த களத்திற்குச் சென்று, மக்கள் எந்த வகையிலான துன்பத்தை அடைந்திருக்கிறார்கள், பொருட்சேதம் எவ்வளவு, உயிர் சேதம் ஏதாவது ஆகியுள்ளதா?
இதை சரிசெய்ய என்ன செய்திருக்க வேண்டும், எதனால் இப்படி ஆனது? இனி என்ன செய்யலாம் என்று மக்களிடம் கலந்துரையாடி, ஒரு முடிவை எட்ட வேண்டும்.
அதன்பிறகு அதிகாரிகளுடன் கலந்து பேசி, அந்த தேவைகளை நிறைவேற்ற என்ன அவசியம் என்பதை உணர்ந்து, எவ்வளவு காலத்தில் இது சரியாகும் என்று தோராயமாகவாது மக்களுக்கு, வாக்குறுதி தர வேண்டும். இதுவே எதிர்கட்சிகளாக இருக்கும்பட்சத்தில் இன்னும் உஷாராக, மக்களின் மனதைக் கவரும் விதமாக பல வித்தைகளைக் காட்டியாக வேண்டும்.
வளர்ந்த எதிர்கட்சிக்கே இந்த நிலை என்றால், புதிதாக முளைத்த கட்சிகள் எப்படி களமாட வேண்டும்?
அடுத்த தேர்தலில் இவரைத் தேர்வு செய்தால் இவர் நமக்கு நல்ல தலைவனாக இருப்பார் என்பதை சொல்லில் அல்ல, செயலில் நிரூபிக்க வேண்டும்.
அப்படி நிரூபிக்க இதுவே நல்ல தருணம்.
இந்த விஷயத்தில் ஒரு நல்ல உதாரணம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.


மக்கள் அவரைக் கேப்டன் என்று அழைப்பதற்கு முழுப் பொருத்தமாக அவரது களப்பணி என்பது மழை வெள்ள நேரங்களில் மெச்சும்படியாக இருந்தது.
ஆனால் தற்போது உருவாகியுள்ள தவெக கட்சியின் தலைவர் செய்த செயல் மக்கள் மத்தியில் சிறு நெருடலை ஏற்படுத்தியுள்ளது.
ஒர்க் ப்ரம் ஹோம் செய்வதற்கு இது என்ன ஐடி வேலையா?
ஒரு நடிகனாக, அவர் புயல் வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களை வீட்டிற்கு அழைத்து நிவாரணம் அளித்திருந்தால் அது வேற கதை. ஆனால் வளரும் அரசியல்கட்சி தலைவராக அவர் செய்த காரியம் அவரைப் பின்னோக்கி இழுத்து விட்டது.

இதற்குப் பதிலாக அவர் மௌனமாக இருந்து விட்டுப் பிறகு, உடல் நிலை சரியில்லை என்று ஏதாவது பூசி மொழிகியிருந்திருக்கலாம்.
அவருக்கு இந்த விஷயத்தில் சரியான அறிவுரை கூற ஆட்கள் இல்லை போலும்.
ஒர்க் ப்ரம் ஹோம் என்பது அரசியலில் ஒரு உப்புக்கல்லுக்குப் பெறாது.
ஆட்சியில் இருப்பவர்கள் களம் இறங்கி தங்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை விட, ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் தலைவர்கள் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்பது அத்தியாவசியம்.
இந்த முறை விஜய் அவர்களின் படம் ப்ளாப் தான்.
இனிவரும் காலங்களில் பார்க்கலாம். தவெக தலைவர் என்ன சாதிக்கப்போகிறார் என்று.