பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
குறள் 10
இறைவன் அடிசேரா தார்
இறைவனின் திருவடிகளை அடைந்தவரால் மட்டுமே இந்தப்பிறவி எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க இயலும் என்பது வள்ளுவர் வாக்கு.
இறைவனின் திருவடியை அடைவது எப்படி?
கள்ளம்கபடமில்லா பக்தியும், சக உயிர்களுக்கு நாம் செய்யும் உதவியும், நாம் வாழும் ஒழுக்கமான வாழ்க்கை நெறியும் தான் நம்மை அந்த இறைவனின் திருவடியில் சேர்க்கிறது.
ஒரு விஷயத்தை நாம் அனைவரும் நன்றாகப் புரிந்து கொள்ளும் பட்சத்தில் பக்தி என்பது என்ன என்பதை நாம் முழுதாக உணர்ந்து, மூட நம்பிக்கை அதில் எப்படி கலந்து விட்டது என்பதையும், பாலில் இருந்து நீரைப்பிரித்தெடுக்கும் அன்னப்பறவை போல பிரித்தெடுத்து விடலாம்.
கடவுளிடம் நாம் இதைக்கொடு அதைக்கொடு என்று வேண்டுவதால், கடவுள் எதையும் தூக்கிக்கொடுத்துவிடப் போவதில்லை.
ஒரு கப்பல் எப்படி கடலுக்குள் பயணமாகக் கரையில் வடிவமைக்கப்படுகிறதோ, அது போல நாம் நன்கு வடிவமைக்கப்பட்ட பிறகே இந்த பூமியில் வாழ்வதற்காக, அனுப்பி வைக்கப்படுகிறோம்.
நடுக்கடலில் கப்பல் வடிவமைக்கப்படுவதில்லை, அல்லது அதில் கட்டுமான சீர்திருத்தங்கள் ஏதும் செய்யப்படுவதில்லை என்பது போல, நீங்கள் வாழ வந்த பிறகு, உங்களுக்குக் கடவுள் எதையும் புதியதாகத் தரப்போவதில்லை.
ஏற்கனவே எல்லாம் கொடுத்து தான் அனுப்பியிருக்கிறார்.
ஆக, வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் போது எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்பது ஏற்கனவே தயார் செய்யபட்ட குழம்பில் தக்காளியை நறுக்கிப் போடுவது போல. மிகப்பெரிய மாறுதல் ஏதும் ஏற்படாது.
அப்படி என்றால் கோவில்களும், கடவுளும் எதற்கு?
பக்தி என்றால் என்ன?
அதற்கான பதில் இது தான்.
நன்றி சொல்வதற்கு மட்டுமே!
ஒரு நல்ல பரிசை நமக்குத் தந்தவருக்கு நாம் நன்றி செலுத்துவது போல, இந்த வாழ்க்கையைப் பரிசாக அளித்த இறைவா! உனக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நன்றி தெரிவிக்கத்தான்.
அதை நாம் தவறாக உணர்ந்து கொண்டு இறைவனிடம் இதை வேண்டினால் தருவார், அதை வேண்டினால் தருவார் என்று நம்பியதன் விளைவில் பிறந்தது தான் மூடநம்பிக்கையும், பக்தி பரிகார வியாபாரமும்.
ஒரு புலியோ, ஒரு சிங்கமோ தனது வாழ்நாளில் ஒரு நாளும் தனக்கான உணவுக்காகவோ, நல்வாழ்வுக்காகவோ, இறைவனை வேண்டியதுமில்லை, தான் கொன்ற உயிர்களுக்காக, பாவமன்னிப்புக்கோரி பரிகாரங்களும் கேட்டதுமில்லை.
மான்களும், முயல்களும் மனமுருகி வேண்டி, இறைவன் இறங்கி வந்துவிட்டார் என்றால், அதே இறைவன் படைத்த புலிகளும், சிங்கங்களும் திக்கற்றுப்போகும்.
நாம் முதலில் சொன்னபடி, எல்லாம் முன்பே கட்டமைக்கப்பட்டது.
துரத்திப்பிடித்து, நார் நாராகக் கிழித்து இறைச்சியை உண்ண சிங்கம் வடிவமைக்கப்பட்டது.
தப்பித்து ஓட மான் வடிவமைக்கப்பட்டது.
இதில் தினசரி வந்து இறைவன் எந்தத் திருவிளையாடலையும் செய்து எதையும் மாற்றிக் கொண்டிருப்பதில்லை.
ஐந்தறிவு ஜீவனுக்கே எந்த மாற்றமும் இல்லை எனில் ஆறறிவு மனிதனுக்கு?
கட்டாயமில்லை.
நமக்குத் தேவையான அறிவையும் ஆற்றலையும் ஏற்கனவே நல்ல விதமாக கட்டமைத்து நம்மை அனுப்பி வைத்திருக்கிறார் இறைவன்.
மனம் நொந்து போகும் போது ஒரு நல்ல நண்பனிடம் அறிவுரை கேட்பது போல, பாரத்தைப் பகிர்ந்து கொள்வதைப்போல கோவிலுக்குச் சென்று கடவுளே இன்று என் நிலை சரியில்லை. உன்னிடமல்லாது நான் யாரிடம் புலம்புவேன் என்று புலம்பலாம்.
அதேபோல, நல்ல மகழ்ச்சியான தருணத்தில், கடவுளே இன்று மகிழ்வாக இருக்கிறேன். நன்றி.
என்று சொல்லி கை கூப்பி வணங்கலாம்.
இவ்வளவு தான் இறைவனுக்கும் நமக்குமான தொடர்பு.
இதை விடுத்து, நோய் தீர்த்தா மாரி, கால் புண்ணை ஆத்துன காளி, கார் வாங்கித் தந்தார் கர்த்தர், கல்யாணம் பண்ணி வச்சார் பெருமாள், குழந்தை வரம் தந்தார் குமரன், அந்தக்கோவிலுக்குப் போனா அது கிடைக்கும், இந்தக்கோவிலுக்குப் போனா இது கிடைக்கும்.
புரட்டாசி அமாவாசைக்கு விரதமிருந்தால் நீங்கள் புஷ்ஷை விடப் பெரிய ஆளாகலாம்.
இப்படி சொல்லப்படுவது எல்லாமே பித்தலாட்டம் தான்.
அப்படி ஏதாவது நடக்குமென்றால், பரீட்சையில் பாஸாக நன்றாகப் படிக்க வேண்டும் என்று நாம் குழந்தைகளுக்கு சொல்லித்தருவதை விடுத்து, பரீட்சையில் பாஸாக பகவானுக்கு பத்து குடம் பால் அபிஷேகம் செய் என்று சொல்லியிருப்போமே?
சமீபத்தில் ஒரு சாமியாரின் பேட்டி கண்டேன்.
காவியும், தாடியும் இருந்தாலே சாமி தான்.
என்ன வேணாலும் பேசலாம், அதை தெய்வ நம்பிக்கையாக ஏற்க ஒரு கூட்டம் இருக்கும்போது என்ன பிரச்சினை? அடித்து விடுகிறார்.
என்னவென்றால் 18 வருடம் தவமிருந்தால் வலது மூச்சும் இடது மூச்சும் சரியாகி ஒரே மூச்சாகுமாம்.
அதன் பெயர் தான் ஊசிமுனை தவமாம்.
இவர் 18 வருடம் தவமிருந்து அனுபவமில்லாமல் எப்படி 18 வருடத் தவத்தில் இது கிடைக்கும் என்று சொல்கிறாரோ தெரியவில்லை.
தவமிருந்தால் மனது ஒரு நிலைப்படும். மனது ஒரு நிலைப்பட்டால் ஆற்றல் கிடைக்கும். நமக்கு வேண்டியவற்றை நாமே சாதித்துக் கொள்ளலாம்.
அதைத்தான் தவமிருந்தால் இறைவன் வந்து வரம் தருவதாக கதையாக சொல்லி இருக்கிறார்கள்.
இந்தக்கதையை வைத்து இந்த சாமியார் சொன்ன கட்டுக்கதை ஐயப்பனுக்கே கோபத்தை ஏற்படுத்தி விடும்.
அதாவது 42 நாள் விரதமிருந்து 18 படியில் முதுகு கூன் விழாமல் நடுப்புறமாக யாரும் இடித்து விடாமல் ஏறினால் ஒரு 5 நொடி அந்த ஊசிமுனை வேலை செய்யுமாம். அப்போது ஏதோ முத்திரை வைத்தால் ஐயப்பன் காது திறக்குமாம். அப்படித் திறக்கும்போது நாம் என்ன கேட்டாலும் கிடைக்குமாம்.
அடேயப்பா?
ஐயப்பனையே முத்திரை போட்டு கட்டுப்படுத்தி கேட்டதை சாதிக்கிறார்களா!
இதுவா பக்தி?
கள்ளம்கபடமில்லா, தூய பசும்பால் போல, தாயன்பு போல உவமை இல்லாத ஒன்று தான் பக்தி.
அதை வியாபாரமாக்கி பிழைப்பு நடத்துவதற்காக சிலர் அதை கொச்சைப்படுத்துவது சகிக்க முடியாதது.
ஆதங்கத்துடன் நினைவுகள்