பெரும்பாலான திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் என்றாலும், சினிமாவின் சக்தி என்பது அளப்பரியது.
பணக்கார மக்கள் முதல், பாமரன் வரை ஆழமான கருத்துகளைக் கொண்டு சேர்க்கும் சக்தி வாய்ந்த ஊடகம் சினிமா தான்.
அப்படி ஒரு கருத்தியல் ரீதியான படம் தான் இந்த வாரம் வெளியான விடுதலை பகுதி-2.
இந்தப்படமும் கிட்டத்தட்ட தீபாவளி வெளியீடான அமரன் படம் போல ஒரு போராட்ட களத்தில் இரு அணிகளுக்கு எதிரான போராட்டம் எப்படி இருக்கிறது என்பதைக் காட்டும் படம்.
ஆனால் கதை யார் பக்கமிருந்து நகர்கிறது, எது நியாயம் என்பதைப் பொறுத்து இங்கே ஒரு பெரிய அரசியலே நடக்கிறது.
அதே துப்பாக்கிச் சூடும், வன்முறையும் தான் என்றாலும், இந்தப்படத்திற்கு குழந்தைகள் கட்டயாம் வரக்கூடாது என்பது மிக உறுதியாகக் கண்காணிப்பு செய்யப்பட்டது. படத்திற்கு இணைய வழியில் பதிவு செய்திருந்த ஒவ்வொருவருக்கும் தொலைபேசி அழைப்பு செய்யப்பட்டு, கட்டாயம் குழந்தைகளை அழைத்து வரக்கூடாது என்று தெரிவித்தார்கள்.
அப்படி அழைத்து வரும் பட்சத்தில் குழந்தையையும் அந்தக்குழந்தையோடு ஒரு நபரையும் வேறு படம் பார்க்க வேண்டுமானால் அனுமதிப்போம் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார்கள். அமரன் படத்திற்கு அது போல இல்லை.
ஏனென்றால் அந்தப்படத்தின் கோணம் வேறு, இந்தப்படத்தின் கோணம் வேறு.
சரி கதைக்கு வரலாம். விடுதலை – பாகம் 1 ன் தொடர்ச்சி தான்.
ஒரு மலையும், காடும் சார்ந்த பகுதியில் இருக்கும் மக்களை அங்கிருந்த துரத்திவிட்டு அங்கே சுரங்கம் தோண்ட எந்த வித இடையூறும் இல்லாமல் ஏற்பாடுகளைச் செய்ய ஒரு காவல்துறை குழு அந்த ஊருக்கு அனுப்பப்படுகிறது.
அங்கே ஏற்கனவே, பல இன்னல்களை சந்தித்து அகிம்சை வழிப்போராட்டங்களில் எந்தப்பயனும் கிடைக்காமல், மாறாக அரசு ஊழியர்களே மக்களுக்கு துரோகம் இழைப்பதைக் கண்டு வெகுண்டு எழுந்த ஒரு புரட்சிப்படை இந்த காவல்துறை கும்பலை, அரசாங்கத்திற்குத் தேவையான அந்த வேலையைச் செய்ய விடாமல் தடுக்கிறது.
அந்த புரட்சி இயக்கம், ரயில் பாலத்தில் குண்டு வைத்துத் தகர்த்து பல அப்பாவி உயிர்களைக் காவு வாங்கியதாகத் துவங்கிய முதல் பாகம், அந்த இயக்கத்தின் தலைவரான பெருமாள் ஆசிரியர் கைதான போது முடிந்தது.
அது ஏன்? பெருமாள் ஆசிரியர் எப்படி போராளி ஆனார்? போராளிகளைப் பிடிக்கும் நோக்கத்தில் காவல்துறை படை ஊர் பொதுமக்களை எப்படியெல்லாம் சித்ரவதை செய்தது என்பதை இதில் காட்டியிருக்கிறார்கள்.
பெருமாள் ஆசிரியர், ஒரு சாதாரண பள்ளி ஆசிரியராக தனது பணியை செய்து தான் உண்டு தனது வேலை உண்டு என்று இல்லாமல், தன்னாலான உதவிகளை, தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக தன்னாலான அறிவுரைகளை வழங்கி சட்டத்தின் உதவிகளை நாடி அவர்களுக்கு ஏதாவது நல்லது செய்ய நினைக்கிறார்.
அந்த ஊர் மக்கள் பண்ணை அடிமைகள் என்பதால், ஊரின் பெண்களை பண்ணை முதலாளிகள், தன் இஷ்டத்திற்கு அனுபவிப்பதும், வதைப்பதுமாக இருக்கிறார்கள்.
அதற்கு எதிராகக் கிளம்பும் ஒரு கோபப் பொறியில் பெருமாள் ஆசிரியரும் அகப்பட்டுக் கொள்கிறார்.
சட்டரீதியாக அந்த பிரச்சினையை சரிசெய்ய முயலும் போது தான், சட்டமும், பாமரனை வஞ்சித்து பணத்துக்கு சலாம் போடுகிறது என்பதை உணர்கிறார்.
நிகழ்ந்த துரோகத்தால், தான் மிகவும் அன்பு காட்டிய ஒரு சகமனிதனை குடும்பத்தோடு இழந்து தானும் வதைபட்டு நிலையிழந்து போகிறார்.
அதன்பிறகு ஊரில் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் தலைவரின் உதவியோடு பிழைத்து, அவரது அறிவுரைப்படி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து சமத்துவத்திற்காக அறவழியில் போராடுகிறார்.
கதைக்களம், அங்கிருந்து ஓர் சர்க்கரை ஆலைக்குத் திரும்புகிறது.
அந்த ஊழியர்களுக்காக சங்கம் அமைப்பதற்காக துவங்கிய இந்த போராட்டம், காதல், கொலை, என எதிர்பாராத திருப்பங்களோடு பெருமாள் வாத்தியாரை, அகிம்சை வழியிலிருந்து, தீவிரவாத வழிக்குத் திணிக்கிறது.

அதன்பிறகு தலைமறைவு வாழ்க்கை, சக தோழர்களின் இழப்பு என்று அடுத்தடுத்த கடினமான சூழல் காரணமாக அவர்கள் திருந்தி, அகிம்சை வழியில் வாழ நினைக்கிறார்கள். நமது கோட்பாடு மற்றும் கொள்கைகளை மட்டும் மக்களிடம் சேர்த்தால் போதும், இனி ஒரு உயிர் போகக்கூடாது என்று முடிவும் செய்கிறார்கள்.
இதன் சுருக்கம் தான் இந்தப்பாகம். படம் நேர்கோட்டில் இல்லாமல், முன்னும் பின்னும் காட்சிகள் அமைவதால் சில இடங்களில் சிறிய குழப்பம். இறந்து போன கதாபாத்திரங்கள் இங்கே எப்படி உயிரோடு வந்தது என்ற கேள்விகள் சில எழுந்தன.
மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள், பண்ணை அடிமை, சங்கம், போராட்டம் என்ற காட்சிகள் எல்லாமே நாம் ஏற்கனவே பார்த்த படங்களின் காட்சிகளில் வேறு நடிகரை வைத்து எடுத்தது போல தோன்றியது.
சில காட்சிகளைத் தவிர்த்து.
கதாநாயகி கதாபாத்திரம், நல்ல புரட்சியான பாத்திரம். மற்றபடி இதில் புதிதாக எதுவும் உணரப்படவில்லை.
ஏற்கனவே பார்த்த அசுரன் போன்ற படங்களின் பின்னோட்டம் மனதில் வந்து போகிறது.
படத்தின் வேகமும் சற்று சலிப்பை ஏற்படுத்தியது.
மேலும், ரயில் பாலத்தில் நாங்க லொலொலாய்க்கு குண்டு வைத்தோம் என்று சொல்வது, இயக்குனரின் ஒரு சார்பைக் காட்டுவது போல இருந்தது.
இப்படியான துரோக அரசாங்கம், கண்டிப்பாக குண்டு வைத்தால் வெடிக்கட்டும் என்று வேடிக்கை பார்க்கும் என்பது தெரியாத குழந்தையா பெருமாள் வாத்தியார்?
மற்றபடியான காட்சிகள் எல்லாமே ஏற்புடையது தான்.
போலீஸ்காரர்களின் ஆணவம், திமிர், தான் வாழ வேண்டும் என்பதற்காக, சரணடையும் கைதியை சுடுவது போன்றவை எல்லாம் ஏற்புடையவை தான்.
கதையின் பின்புலத்தில், முதன்மைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், மந்திரி ஆகியோர் முதல்வரிடம் பேசி பேசி அங்கே சில முடிவுகளை எடுப்பதாக அமைக்கப்பட்ட காட்சிகள் அற்புதம்.
“உங்களுக்கு சொல்லப்பட்டது தகவல். ஒரு சம்பவம் நடந்தால், அதில் எதை எப்படி மக்களிடம் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு சொல்லப்படுவது தகவல்.“
“தகவலும் உண்மையும் வேறு வேறு” என்ற வசனங்கள் பளார்.
விடுதலை- உண்மைக்கு நெருக்கமான படம்.
மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மற்றொரு கோணம்.