Categories
நினைவுகள் மறைவு

அப்பாவுடன் பயணம்- இனிய நினைவுகள்.

பயணம் என்றுமே இன்றியமையாத ஒன்று தானே?
ஆறறிவு கொண்ட மனிதர்க்கு மட்டுமல்ல, பறவைகளும் கூட தங்கள் வாழ்நாளில் பயணம் மேற்கொள்வதை அறிவோமே?

வாஸ்கோடகாமா மேற்கொண்ட பயணம் உலக வரைபடத்தில் பல மாற்றங்களை உண்டு செய்தது.
அப்படி உலக வரைபடம் மாறாவிடினும் ஒவ்வொரு பயணத்தின் போதும் நம் உள்ளம் குறைந்தபட்சம் மாறுபடுவது உண்மை தானே?

என் தந்தையுடன் மேற்கொண்ட சில பயணங்களின் தொகுப்பை கதையாக்கி அசை போடுவதை, முடங்கி கிடக்கும் இந்த சமயத்தில் நான் ஆறுதலாக நினைக்கிறேன்.

எல்லாக் குழந்தைகளையும் போல ஜன்னலோர இருக்கை என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று தான்.

ஆனால் அந்த ஜன்னல் வழியே வரும் காற்று முகத்தில் பட்ட உடன் தூங்கி வழியும் அசட்டுப் பயணமாக ஒரு போதும் இருந்ததில்லை எனது.

பயணத்தின் போது வெளியே தென்படும் , சில விளம்பரங்கள் துவங்கி, நிறுத்தங்களில் இருக்கும் கடைகளின் பெயர் பலகைகள் உட்பட அனைத்தையும் வாசிக்க சொல்வார் என் தந்தை.

பேருந்து ஓடும் வேகத்தில் அதை நான் வாசிக்க பழகிக் கொண்டேன். ஆரம்ப காலங்களில் சற்று கடினமாக இருந்தாலும் போக போக அது பழகிவிட்டது.

வாசிப்பு என்பதை அப்படியும் பழகலாம் என்று கற்பித்த எனது இரண்டாவது ஆசான் என் தந்தை.

அத்தோடு நின்று விடாது.

ஒரு டிக்கெட் 3.75 பைசா என்றால், 12 முழு டிக்கெட், 2 அரை டிக்கெட் எவ்வளவு ஆகும் என்று கேள்வி எழுப்பி, கணிதத்தையும் பழக்கினார்.

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல, வாசித்தலும், கணக்கும் கரும்பலகை இல்லாமல் குச்சி இல்லாமல் கற்றுத்தந்த எனது தந்தையும் அவருடன் நான் செய்த பயணங்களும் எனக்கு வாழ்வில் ஆசான் தான்.

மிதிவண்டி என்பது வழக்கொழிந்து போனது இப்போது. ஆனால் அப்போதெல்லாம் பெரும்பாலும் மிதிவண்டிதான்.

பணி நிமிர்த்தமாக மிதிவண்டியில் ஒரு நாளைக்கே கிட்டதட்ட 20 முதல் 30 கிமீ பயணம் மேற்கொள்ளும் என் தந்தையுடன் சில சமயங்களில் நானும் சேர்ந்து கொள்வேன். என்னையும் முன்னால் அமர வைத்துக்கொண்டு அவர் அந்த மிதிவண்டியை மிதியாய் மிதிக்க இருவரும் பயணம் செய்வோம்.

அது மட்டுமா?

என் வாழ்வெனும் பயணத்தை மிதித்து என்னை கல்வியில் கரை சேர்த்து, எனக்கு வேலை கிடைக்கும் வரை ஓயாது உழைத்து ஓட்டுநராக இருந்ததும் அவரே தான்.

அப்பா!

என் வாழ்க்கை பயணத்தை தொடங்கி வைத்தவர், என்னை கல்வி எனும் பயணத்தில் வேலை எனும்  கரையில் சேர்த்தவர், இன்னும் கூட அவரே தான் இருந்திருப்பார் என் பயணத்தை வழிநடத்துபவராக.

ஆனால் மனிதனின் ராஜபயணமான எட்டுக்கால் பயணத்தை அவர் இவ்வளவு சீக்கிரம் மேற்கோள்வார் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இருந்தாலும், இல்லாவிட்டாலும், நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடி பயணத்திலும் அவருடைய வாழத்துகள் இருக்கும் என்பதை நம்புகிறேன்.

ரயிலிலோ, பேருந்திலோ, காரிலோ, பைக்கிலோ சென்ற பயணம் போல அல்ல.

இது சற்றே வித்தியாசமான பாசப்பயணம்.

சுவாரஸ்யமாக இருந்ததா தெரியாது ஆனால் என்றுமே சுகமான பயணம்.

தன் பிள்ளைகளுக்காக அப்பாக்கள் செய்யும் அந்த கடமை.