Categories
தற்கால நிகழ்வுகள்

அரசுப்பேருந்தின் இனிய பயண நினைவுகள்

அரசுப் பேருந்தில் ஏற்பட்ட கசப்பான நினைவுகளைப் பகிர்ந்தோம்.

நமது பழைய பதிவு

அவர்கள் மீது நாம் கொடுத்த புகாருக்கும் பதில் கிடைத்தது.போக்குவரத்துத் துறையிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்புக்கோரியதோடு, அவர்கள் இருவரையும் கண்டிப்பதாகச் சொன்னார்கள்.

ஒட்டுமொத்த அரசுப் போக்குவரத்தும் குறை சொல்லத்தக்க வகையில் அல்ல.

இது ஒரு அருமையான பயண அனுபவம் பற்றிய பதிவு.

சென்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு ஊருக்கு சென்ற பிறகு குடும்பத்துடன், எதிர்பாராத விதமாக பேருந்தில் பயணிக்க வேண்டிய கட்டாயம்..முன்பதிவுகள் அற்ற நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஒரு நகரப் பேருந்து – குளிர்சாதனம் கொண்டது.( local AC bus) சென்னைக்கு ட்ரிப் அடிக்க ஆள் ஏற்றினார்கள். மாலை 4.30 மணிக்கு புறப்பட்டது.

அந்த நடத்துனரும், ஓட்டுனரும் நடந்து கொண்ட விதமே, வாழ்க்கை முழுக்க இவர்களோடு பயணிக்கலாம் என்ற அளவிற்கு மகிழ்ச்சி அளித்தது.
பேருந்து இருக்கைகள் நிறைந்த பிறகு, பயணச்சீட்டு கொடுத்து முடித்து விட்டு, கடைசி இருக்கை கல்லூரி மாணவன் கேட்டதற்காக, நடத்துனர் முன்னாடி இருந்த இருக்கையை அவருக்குக் கொடுத்து விட்டு பின்னாடி கடைசி இருக்கைக்கு வந்து பயணிகளான எங்களுடன் உரையாடிக்கொண்டே வந்தார்.

அப்படி ஒரு நட்பு உரையாடல்.
கடைசி இருக்கையில் இரண்டு ஐடி இளைஞர்கள், முந்தைய இடப்புற இருக்கையில் நான் , வலப்பறத்தில் இரண்டு மாமிகள்( இஸ்லாமிய மாமிகள்).

முதலில் நடத்துனர் எல்லா பயணிகளுக்கும் சொன்ன தகவல்.
பஸ் ல எல்லா சீட்டும் புல் ஆயிடுச்சுங்க.

இனி பெருசா ஆள் ஏத்த மாட்டோம்.
2 பேரும் சீட்ல இருந்தா கொஞ்சம் இடைஞ்சலா இருக்க மாதிரி இருந்தா, கீழ உட்காந்துக்கோங்க..நல்லா சுத்தமா தான் இருக்கு…யோசிக்காம கைய கால நீட்டி கீழ சௌரியமா உட்காந்துட்டு வாங்க.என்று சொல்லி முடிக்கும் முன்பு , கிட்டதட்ட 20 பேர் கீழே கூடிவிட்டார்கள்.
நல்ல நடுத்தர பாடல்களும் ஒலிக்கப்பட்டது..

சென்னை பெருசா மதுரை பெருசா அடிச்சுக்காட்டு என்ற ரீதியில் சில பேச்சுகள், பிறகு, பயணங்கள் பேருந்து இயக்கம் பற்றி, பிறகு அந்த ஐடி இளைஞரில் ஒருவருக்கு திருமணம் ஏற்பாடுகள் ஆகியிருந்தது போல..
அவருக்கு இன்னொரு ஐடி இளைஞரும் நடத்துனரும் , திருமண வாழ்க்கைக்கான தயாராகுதல் முறையை பாடம் நடத்தினார்கள்..ப்ரோ மான ரோஷம்லாம் இருந்தா கல்யாணம் பண்ணாதீங்க ப்ரோ என்ற ரீதியில் நகைச்சுவையான ரீதியில் இருவரும் தங்கள் ஒட்டுமொத்த ஆதங்கத்தையும் கொட்டினார்கள்.

ஒரு 6.30 மணிவாக்கில் ஒரு நல்ல தேநீர் கடையில் வண்டியை நிறுத்தினார்கள்..
பேருந்தில் பயணித்த 45 பேருமே, பஜ்ஜி பணியாரம் போன்ற பலகாரம் வாங்கி உண்டு மகிழ்ந்தோம்..நமது ஊர் கடைகள. போல விலையும் , தரமும் மகிழ்வூட்டும் விதமாக இருந்தது..

நான் தேநீர் அருந்தும் முன் பேருந்து கிளம்ப எத்தனித்தது..சார் டீ குடிச்சி முடிச்சுட்டு வண்டில ஏறுங்க, ஒரு 3 நிமிஷத்துல ஒன்றும் பிரச்சினை இல்ல.
டீயோட உள்ள வந்து சிந்திடுச்சுனா பஸ்ல அழுக்காயிடும் என்று எனக்காக ஒரு 2 நிமிடம் பேருந்து நின்றது..சிரித்த முகத்தோடு இதை நடத்துனர் சொன்ன போது எனக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்தில் தான் நாம் பயணிக்கிறோமா என்ற வியப்பே ஏற்பட்டது..
பின், மீண்டும் பயணமும் பேச்சுகளும் தொடர்ந்தது.

இரவு விழுப்புரம் கேண்டினில் இரவு உணவுக்காக நிறுத்தப்பட்டது..அது வேறு வழியல்ல டிப்போ விதிமுறைகள் என்று நடத்துனரே வருத்தப்பட்டுக்கொண்டார்.

முன்பு மாதிரி மிகப்பெரிய கொள்ளை இல்லை..
தோசையும் கறியும் தான் சாப்பிடனும்னு கட்டாயமில்ல.. இரண்டு தோசை சிறிது கின்னத்தில் கறி ( 100 ரூ)..
இதுதான் அவர்கள் பழைய வியாபார முறை.

இரண்டு தோசை, சாம்பார் சட்னி கொடுத்து விதத்தில் பரவாயில்லை…

பின் சிறிய தூக்கத்துடன் தொடர்ந்த பயணம் சரியாக இரவு 12.30 க்கு கிளாம்பாக்கத்தில் நிறைவுற்றது..சரியாக 8 மணி நேரம் ..

நல்ல பயண அனுபவம்..பெரும்பாலானோர், குறிப்பாக பின்பக்க இருக்கைகளில் இருந்த நாங்கள், இனி எப்போது இந்த பேருந்தில் பயணிப்போமோ என்று நினைக்காமல் இல்லை..

நடத்துனரின் நன்னடத்தை மனதில் ஆழமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

கண்டிப்பாக என்றாவது அந்த நடத்துனரைக் கண்டால் நலம் விசாரிக்காமல் நகர மாட்டேன்..அவரோடு பயணிக்க வாய்ப்புக் கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி..

அந்தப்பயணத்தில் நான் எடுத்த புகைப்படமும் இடையே இணைப்பில் உள்ளது.

இணைப்பைப் படிக்க