Categories
இலக்கியம் குட்டி கதை தமிழ் பாடல் வரலாறு

உலகின் முன்னோடி தமிழன் – நீதிநெறி வரலாறு

தமிழக மன்னர்களின் நீதிநெறிமுறைகள் பற்றிய சிறிய தகவல்கள்.

கண்ணகி கோவலனுக்காக வழக்காடிய போது, பாண்டிய அரசன் நெடுஞ்செழியன் தன் தவறை உணர்ந்து கொண்டு, உடனடியாகத் தீர்ப்புக் கூறி அந்த இடத்திலேயே யானே கள்வன் என்று கூறி மரண தண்டனையை ஏற்றக் கொண்டான் என்பதை சிலப்பதிகாரத்தில் படித்திருக்கிறோம்.

பாண்டியன் அவையில் கண்ணகி வழக்காடும் காட்சி

இதில் நமக்குத் தெரியாத செய்தி என்னவென்றால் உலக வரலாற்றிலேயே ஒரு நீதிபதி, தன்னைத்தானே குற்றவாளி (யானே கள்வன்) என்று அறிவித்துக் கொண்ட முதல் வழக்கு இது தான்.

கதை 2:

சங்க காலச்சோழ மன்னன் கரிகாலச் சோழன் இளைஞனாக இருந்தபோது, அவரிடம் ஒரு வழக்கு வந்தது.

அரசரே நீதிபதி என்பதால், அவர்தான் அதைத் தீர்த்து வைக்க வேண்டிய நிர்பந்தமும் இருந்தது.
ஆனால் வழக்கைக் கொண்டு வந்த இருவரும் முதியவர்கள். அவர்கள் இருவருக்குமே, ஒரு இளைஞனால், இந்த வழக்கிற்கு சரியான தீர்வு தர முடியுமா என்ற ஐயம் இருந்தது.

அவர்களின் எண்ணத்தை அறிந்த கரிகாலன், அவர்களை இன்னொரு நாளைக்கு வருமாறு கூற அவர்களும் கிளம்பி விட்டு வேறொரு நாளில் வருகிறார்கள்.

அன்று கரிகாலனோ, முதியவர் வேடமிட்டுத் தீர்ப்பை வழங்கி அந்த இரு முதியவர்களும், தீர்ப்பினால் மனதிருப்தி பெற்ற பிறகு, தான் யார் என்பதை அவர்களிடம் கூறினார். தீர்ப்பின் துல்லியத்தால் அழியாத புகழும் பெற்றார்.

கரிகாலனிடம் வழக்கு வரும் காட்சி

இந்தக் கதையை
முதியோர் அவை புகு பொழுதிற்றம்
பகை முரண் செலவும்
என்ற பொருநராற்றுப் படை வரிகளும்

இளமை நாணி முதுமை எய்தி
உரை முடிவு காட்டிய உரவோன்
என்ற மணிமேகலையின் வரிகளும்

உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப நரைமுடித்துச் சொல்லால் முறைசெய்தான் சோழன்
என்ற பழமொழி நானூறு பாடல் வரிகளும் காட்டுகின்றன

இதுவும் உலகின் ஒரு வரலாற்று முன்னோடி தான்.

பொதுமக்கள் மனிதனின் நரை முடியை அவனது மாண்புக்குச் சான்றாகப் பார்க்கின்றனர் என்பதை கிபி 17 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸை ஆண்ட 14 ஆம் லூயி என்ற மன்னர் உணர்ந்தார்.

அதனால் அவர் நீண்ட வெண்ணிற போலி முடியை அணியத் துவங்கினார். அதன்பிறகு அரசர்களும் நீதிபதிகளும் நீண்ட வெள்ளை முடி அணிவதை வழக்கமாக்கிக் கொண்டனர்.

இன்றளவும் ஐரோப்பாவில் நீதிபதிகள் நீண்ட வெள்ளை முடியை அணிந்தே தீர்ப்பு வழங்குகின்றனர்.

இது பிக் விக் என்ற சொல்லில் பெரிய மனிதர் என்ற அர்த்தத்தில் புழங்குகின்றது.

பிக் விக்

இந்தியாவிலும் சில காலம் இந்த நடைமுறை இருந்து பின்னர் கைவிடப்பட்டது.

இந்த வரலாற்றில் பார்த்தால் முதன் முதலாக நரைமுடி தரித்துத் தீர்ப்பு வழங்கும் முன்னோடியாக, முதல் வரலாறாக கரிகாலன் தான் இருந்துள்ளார்.

நினைவுகள் வாசகர்களுக்காக.

இராஜ இராஜ சோழன் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்.