வித்தியாசமான கதை அம்சம் கொண்டதும், கநைகளுக்கு முக்கியத்துவம் தருவதுமான படங்கள் சமீபத்தில் தான் வருவதாகவும், பழைய படங்களில் பெரும்பாலானவை, கதாநாயகர்களுக்கு மாஸ் காட்சிகளும், சண்டையும், காதலும் என காட்சிகளைக் கொண்ட படமாகவே அமைந்ததாகவும் சினிமா ரசிகர்கள் பலரும் நம்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஆனால் இப்போது மட்டுமல்ல, 80,90 களிலும் அதுமாதிரியான படங்கள் வெளிவரத்தான் செய்தன என்பதை நிரூபிக்கும் படம் தான் 1988 ல் வெளிவந்த சொல்லத் துடிக்குது மனசு திரைப்படம்.
நவரச நாயகன் கார்த்திக் நடித்த இந்தப்படத்தில் கதை தான் நாயகன். ஆமாம் ஒரு வித்தியாசமான கதை. திரைக்கதையில் ஆங்காங்கே சின்ன லாஜிக் ஓட்டைகளைத் தவிர்த்து மற்றபடி ஒரு நல்ல திரைப்படமும் கூட.
ஒரு கிராமத்தில் வசிக்கும் படித்த இளைஞரான கார்த்திக் நகரத்தில் வேலை தேடுகிறார். அவருக்கு ஊரில் ஒரு நெருங்கிய நண்பர். அந்த நண்பரின் மனைவி திருமணத்திற்குப் பிறகு தனது காதலனோடு ஓடிப்போய் வேறு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்கிறார் என்ற காட்சிகளோடு படம் துவங்குகிறது. அடடே புரட்சிகரமான படமாக இருக்கும் போல என்று தொடர்ந்து படத்தைப் பார்க்கத்தூண்டியது அந்தக்காட்சி.
ஏனென்றால் அந்தக்காலங்களில்
என்ட காதலி நின்ட மனைவி ஆகலாம், பட்சே நின்ட மனைவி ஒருபோதும் என்ட காதலி ஆகாது என்ற காலம் ஆயிற்றே?
படித்த இளைஞரான கார்த்தி சென்னையில் வங்கியில் வேலை கிடைத்து சென்னை வருகிறார். வேலைக்குச் சேர்ந்து ஒரு நல்ல வீடு பார்த்துக் குடியேறுகிறார்.
தான் இதற்கு முன்பு சென்னைக்கு வந்து ஒரு தனியார் கம்பெனியில் நேர்காணலில் கலந்து கொண்ட போது சந்தித்த பெண்ணோடு ஏற்கனவே கடிதங்கள் மூலமாகக் காதலில் இருந்த கார்த்தி, இப்போதும் அந்தக் காதலைத் தொடர்கிறார்.
நாயகன் கார்த்திக் ஒரு மூன்று பேருக்கு மிகப்பெரிய ரசிகர். ஒருவர் பெரிய மேடைப் பாடகர், ஒருவர் எழுத்தாளர் மற்றொருவர் ஒரு கட்சித் தலைவர்.
ஒரு நாள் இரவு கார்த்தி தன் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் போது யாரோ வீட்டுக் கதவைத் தட்டுகிறார்கள். அவரும் திறக்கிறார். பார்த்தால் அவர் மிகவும் விரும்பும் அந்தப் பாடகர். மது போதையில் அங்கே வந்திருக்கிறார்.
ஆச்சரியத்தோடும், மகிழ்ச்சியோடும் அவரிடம் கார்த்திக் உரையாடத் துவங்குகிறார். அவரோ இந்த வீட்டில் முன்பு ஒரு வேசி தங்கியிருந்ததாகவும், அவள் பெயர் தேன்மொழி என்றும், அவளைத் தேடியே வந்ததாகவும் சொல்கிறார். தான் பெரிய பாடகர் ஆனதுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்ததே இந்த வேசி தான் என்று பெருமையாகக் கூறிவிட்டு, அவள் முகவரி உனக்குத்தெரியாதா என்று கார்த்திக்கிடம் கேட்டுவிட்டுக் கிளம்பிவிடுகிறார்.
இதையடுத்து வெவ்வேறு நாட்களில் அந்த எழுத்தாளரும், கட்சித்தலைவரும், இதேபோல கார்த்திக்கின் வீட்டிற்கு வந்து தேன்மொழி பற்றி விசாரித்து, தான் கவிஞனாக மாறியதே, தேன்மொழியை வர்ணிப்பதற்காகத் தான் என்றும், தான் பல முக்கியமான அரசியல் முடிவுகளைத் தேன்மொழியிடம் ஆலோசித்து தான் எடுப்பேன் எனவும் அவர்கள் இருவரும் தேன்மொழி புகழ் பாட கார்த்திக்கு இந்தத் தேன்மொழி யார் என்ற ஆவல் ஏற்படுகிறது.
தான் வழிகாட்டிகளாக நினைத்த மூவரும் ஒரு பெண்ணைப் புகழ்கிறார்களே, அந்தப்பெண்ணை நாம் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்று ஆவல் கொள்கிறார்.
மேலும் இன்னொருவர் வந்து தேன்மொழி தான் தனது இதய ஆபரேஷனுக்குப் பணம் கொடுத்து உதவியதாகக் கூறி அவரைத் தேடி வரும்போது கார்த்தி முடிவே செய்து விடுகிறார், தேன் மொழியைத் தேடியே ஆக வேண்டுமென்று.
பணத்தைத் தண்ணீராக செலவு செய்து ஒவ்வொரு வேசி விடுதிகளாகச் சென்று தேன்மொழியைத் தேடத்துவங்குகிறார். பணப்பற்றாக்குறை காரணமாக கடன் வாங்கித் தேடத்துவங்கும் அவரோ, ஒரு கட்டத்தில் தன் காதலி நகை வாங்கக் கொடுத்த பணத்தையும் இதற்கே செலவு செய்து விடுகிறார்.
சில பணத்தை மோசடி கும்பல்களிடமும் ஏமாறுகிறார்.
இப்படி பணத்தை இழந்து பல பிரச்சினைகளிலும் சிக்கி, தனது திருமண நிச்சயதார்த்தம் நிற்கும் அளவிற்கு மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்.
வீட்டு வாடகையும் தராத காரணத்தால் வீட்டை விட்டுத் துரத்தப்படுகிறார். அப்போது அந்த வீட்டில் தேன்மொழி உபயோகித்த கண்ணாடியை கோபத்தில் உடைக்கிறார். அதில் ஒரு பிலிம் ரோல் கிடைக்க அதை ஆர்வமாக டெவலப் செய்து தேன்மொழி யார் என்று பார்க்க, அதிர்ச்சி.
தன் காதலி தான் அந்தத் தேன்மொழி.
தான் வேசியைத் தேடிச் சென்றதாகக் கூறி அவமதித்துத் திருமணத்தை நிறுத்தியவள், அவளே தான் அந்த வேசி என்று தெரிந்த உடன் கோபமாக அவள் வீட்டுக்கும், அவள் வேலை செய்த இடத்திற்கும் போகிறார். ஆனால் அவள் கிடைக்கவில்லை. எங்கோ தகவல் கொடுக்காமல் சென்று விட்டாள்.
இடையே இந்தப்பிரச்சினை அதிகமாகி கார்த்திக்ன் பேங்க் வேலையும் பறிபோக, அவர் கிராமத்துக்கே செல்கிறார். அங்கு சில எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்கிறது. அதன் விளைவாக இன்னொருவரின் சிபாரிசில் வேறொரு வேலையில் இணைகிறார்.
அந்த வேலையில் இணைந்த உடன் கார்த்திக்கு கொடுக்கப்படும் முதல் வேலை, வெளிநாட்டிலிருந்து வந்து மேடைக் கச்சேரி நடத்தவிருக்கும் இசையமைப்பாளரின் நிகழ்ச்சியை நடத்தித் தருவது.
அந்த இசையமைப்பாளர் ராதாரவி. இந்தப்படத்தில் கௌரவ நடிகர். அவர் பாடும் பாடலான பூவே செம்பூவே பாடல் இன்று வரை பிரபலம். அந்தப்பாடல் தான் என்னை இந்தப்படத்தைப் பார்க்க வைத்தது.
அந்தப்பாடல் பாடும் போது அவரது மனைவி மேடையில் நடனமாடுகிறார். அது வேறு யாருமல்ல கார்த்திக்கின் முன்னாள் காதலி. கச்சேரி முடிந்தபிறகு கார்த்திக் போய் அவரிடம் பேச, அவரோ இவரை முன்பு பார்த்ததே இல்லை என்கிறார்.
உண்மைதான்.
அந்தப்பெண் தேன்மொழி தான்.
வேசிதான்.
தன் இச்சையைத் தீர்க்க வந்த ராதாரவியும் அந்த மூவரைப்போல இந்தப்பெண்ணிடம் காதல் கொண்டு இவரைத் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
கார்த்திக்கின் காதலிக்கும் இவருக்கும் உருவ ஒற்றுமை் அதாவது ஒரே மாதிரி உருவம் இருப்பவர்கள். அதன் காரணமாகத்தான் இந்தக்குழப்பம்.
குழப்பம் தெளிவாகிறது, காதல் இணைகிறது.
1988 களில் இது ஒரு வித்தியாசமான கதை.
ஒரு முறை ரசிக்கலாம். பாடல்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.
நல்லதொரு சினிமாவின் நினைவுகள்.