Categories
சினிமா தமிழ்

புஷ்பா – 2- ஒரு அலசல்

சென்ற வாரம் வெளியான புஷ்பா படத்தின் பகுதி இரண்டு பற்றிய ஒரு அலசல்.

புஷ்பா ஃபயரா, ப்ளவரா?

ஃபயர் தான். ஆனால் அதிக நேரம் எரிந்து மூச்சுத்திணறல் வரும் அளவுக்குப் புகை கக்கிய ஃபயர் என்பது ஒரு ஏமாற்றம்.

படத்தின் ஒரு குறிப்பிடத்தகுந்த குறை என்பது படத்தின் நீளம்.

இது பெரிய குறை ஆனாலும், படத்தை பாதாளத்தில் தள்ளும் குறை அல்ல.

க்ளைமாக்ஸ் காட்சி தவிர மற்ற எந்தக் காட்சிகளிலுமே, இந்தக் காட்சி எப்போது முடியும் என்ற எண்ணமெல்லாம் ஏற்படவேயில்லை.

ஒரு நல்ல மசாலா படம் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு சிறிதும் ஏமாற்றமில்லா தரமான மசாலா திரைப்படம்.

கர்நாடக மாநில தங்கச் சுரங்கக் கதைக்கு ஈடான, ஆந்திர மாநில செம்மரக் கட்டை கடத்தல் சுவாரஸ்யமானது. அந்தக் கதையின் பின்புலத்தில், KGF படத்தைப் போலவே ஒரு பலம் வாய்ந்த கதாநாயகனைப் பொருத்தி, அவன் அந்த இடத்தில் அடிமட்டத்திலிருந்து இவ்வளவு பெரிய கடத்தல் சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாக எப்படி உருவாகிறான் என்பதை KGF பாணியிலேயே முதல் பகுதியில் சொன்னவர்கள், இரண்டாம் பகுதியிலும் KGF ஐ விட்டு வைக்கவில்லை.

கதாநாயகனின் பலத்தைக் காட்டுவதற்காக அரசியல் விளையாட்டுகள், வில்லனோடு சிறு சிறு மோதல்கள், கடத்தலில் ராஜா நான்தான், ஒட்டுமொத்த மார்க்கெட்டும் எனது கட்டுப்பாட்டில் தான் என்பது போன்ற பல காட்சிகள், KGF படத்தின் சாயலிலேயே தான் இருந்தது.

ஆனால் KGF ல் இல்லாத ஒரு புதிய விஷயம், வில்லன் பகத் பாசில்.

கதாநாயகன்- வில்லன்

கதாநாயகனுக்கு இணையான பைத்தியக்காரத்தனமான, கொடூர வில்லனாக இவரை முதல் பாதியில் அறிமுகம் செய்து, இந்தப்படத்தில் அப்படியே தொடர்கிறது.

சில சொதப்பல்கள்
அவ்வளவு கொடூரமான வில்லன் இந்தப் பகுதியில் பல இடங்களில் கோமாளி ஆக்கப்பட்டிருப்பது, கதாநாயகனுக்கு பலம் சேர்க்கலாம், கதைக்கு பலத்தை சிறிது குறைத்து விட்டது.
இவன் தான? இவன்கிட்ட அவன் ஈஸியா டீல் பண்ணிருவான் என்கிற அளவுக்கு வில்லனின் மதிப்பு தாழ்ந்துவிட்டது.

ஆனாலும் சவால் மற்றும் கடத்தல் காட்சிகளில் பகத் அட்டகாசம்.

படம் ஆரம்பித்த காட்சி முடிவடையவுமில்லை, படத்தின் இறுதியில் காட்டப்படவுமில்லை.
அது மூன்றாவது பகுதியில் வருமென்று எதிர்பார்க்கலாம்.

பகத் பாசில் கதாபாத்திரமே இந்த கடத்தல் கதைக்கு பெரிய வில்லன் தான். அதோடு நிறுத்தி, இரண்டாவது பாகத்தோடு கதையை முடித்திருக்கலாம்.
இரண்டாவது பாகமும் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும்.

அதைவிடுத்து, வில்லன் பெரிய ஆளாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, முதல்வரையா, அல்லது மத்திய அமைச்சரயா? யாரை வில்லனாக்கலாம் என்ற KGF ரீதியில் வில்லனைத் திணித்திருக்கிறார்கள்

முதல் பாகத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பகத் பாசில் கதாபாத்திரத்தை ஆங்காங்கே அலைக்கழித்து, கதாநாயகனின் முன்னே அவரை பொம்மையாக்கி, முடித்து விட்டு, அடுத்த வில்லனை நோக்கிப் படம் நகர்வது தான் கொஞ்சம் தேவையில்லாத திணிப்பு போல இருந்தது.
அதுவும், அடுத்த வில்லனோடு ஏற்படும் மோதல் காட்சிக்கான காரணம் ஏற்றுக்கொள்ளும் ரகமாக இல்லை.

ஊரில் மிகப்பெரிய கடத்தல் தாதா வீட்டுப்பெண்ணிடம் வேலை மெனக்கெட்டு வம்பிழுத்து வாலன்ட்டியராக அவரது பகையை வாங்கிக் கொள்ள என்ன காரணமோ?

படத்தின் சண்டைக்காட்சி

இந்தக் காட்சிகளை தவிர்த்திருந்தாலோ, அல்லது முறையாக கதை வடிவமைத்திருந்தாலோ, இந்தப்படமும் KGF க்கு சற்றும் குறைவில்லாத படமாக வந்திருக்கும்.

KGF ன் முதல் பகுதியிலயே நமக்கு அத்தனை கதாபாத்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு கதை நேர்கோட்டில் நகர்ந்த காரணத்தால் தான் சலிப்பில்லை.

ஆனால் இந்தப்படத்தில் அது குறை.

முதல் பாகத்தில் வந்த பாடல்களின் டூப்ளிகேட் போல இந்த பாகத்திலும். மனதில் ஒட்டவில்லை.
ஏய் என் கோலிசோடாவே ரகத்தில் ஒரு டூயட்.
அதுவும் மனதில் நிற்குமளவு இல்லை.
முதல் பாடல், புஷ்பா, புஷ்பா ஓகே!

பழைய ரகத்தில் க்ளைமாக்ஸ் காட்சி.
கதாநாயன் தனியாக வந்து மொக்கை வில்லன்களிடம் கை கால் கட்டப்பட்டு அடிவாங்கி, பிறகு கோபம் வந்து பொங்கி அடிப்பது..

அய்யய்ய்ய இத மொதல்ல மாத்துங்கப்பா என்று நாம் கத்துவது இயக்குனரின் காதுகளில் விழுந்து விட்டது போல.
அதனால ஒரு ட்விஸ்ட் வச்சிட்டாரு..இந்தவாட்டி கதாநாயகன் யாரையும் திருப்பி அடிக்கல..திருப்பிக் கடிச்சாரு..

ராஷ்மிகா மந்தனாவுக்கு நல்ல வெயிட்.காதல் காட்சிகளும் நல்ல ரகம்.

மொத்தத்தில் நல்ல மசாலா, ஆனால் கொஞ்சம் நெடி அதிகம்..
ஜப்பானில் கடலில் விழுந்த கதாநாயகன் மூன்றாவது பகுதியில் வந்து பழிவாங்கப் போகிறார்.

பகுதி- 3 க்கான முன்னோட்டத்துடன் படம் முடிகிறது.

அதையும் பார்த்துடலாமே!

அன்புடன்
நினைவுகள்

கங்குவா விமர்சனம் கீழே!

லக்கி பாஸ்கர் விமர்சனம் கீழே!