குழந்தை பிறப்பு விகிதம்.
இது கணக்கிடப்படும் முறை என்பது ஒரு பெண்ணுக்கு சராசரியாக எத்தனை குழந்தைகள் பிறக்கிறது என்பதை வைத்து.
அந்த விகிதமானது தற்போது குறைந்து உள்ளது என்றும், இது விசித்திரமான சில பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் எனவும், சமீபத்திய வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அந்த ஆய்வின் சாராம்சம் என்னவென்றால், 1950 ஆம் ஆண்டில், ஒரு பெண்ணுக்கு சராசரியாக குழந்தை என்பது 4.7 என்ற எண்ணிக்கையில் இருந்திருக்கிறது.
அந்த எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட பாதியாகி விட்டது. 2.4 என்ற எண்ணிக்கையில் உள்ளது.
மேலோட்டமாகப் பார்த்தால் இது நல்லது தான்.
நம்முடைய அரசாங்கமும், பிதுங்கி வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, பூமித்தாயின் பாரத்தைக் குறைக்க, காப்பர் டியில் துவங்கி, பாதுகாப்புக் கவசம், குடும்பக் கட்டுப்பாடு, ஒரு குடும்பம் ஒரு குழந்தை என அன்றாடம் போராடுவது இதற்காகத் தானே?
இதற்குத் தானே ஆசைப்பட்டோம் என்று மகிழ்ச்சி கொள்ளலாம்.
ஆனால் எதற்குமே ஒரு எதிர்வினையும், எதிர்விளைவும் இருக்கிறது என்பதை அசுர மக்கள் தொகை வளர்ச்சியில், மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்ற ஓடிக்கொண்டிருந்த காரணத்தால் மறந்து விட்டோம்.
அந்த எதிர்விளைவு என்ன என்பது தான் இந்த ஆராய்ச்சியின் சாராம்சம். இதே வேகத்தில் போகும்பட்சத்தில் பூமியின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 2064 ஆம் ஆண்டு உச்சகட்டமடையும்.
அதாவது 9.7 பில்லியன் (970 கோடி) என்ற அளவில் புவியின் மக்கள் தொகை இருக்கும்.
ஆனால் 2100 ஆம் ஆண்டு 880 கோடியாகக் குறைந்து விடும். அப்போது குழந்தை பிறப்பு விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.7 ஆகக் குறைந்திருக்கலாம் என்பதும் ஆய்வின் முடிவு.
சரி, 970 கோடி, 880 கோடி ஆகிப் போவதால் என்ன மாறப்போகிறது.
மேற்கண்ட படத்திலிருந்து ஒரு விளக்கம் பார்க்கலாமா?இதில் பாருங்கள், நைஜீரியா மற்றும் USA நாடுகளில் மட்டும், 2017 ல் இருப்பதை விட 2100 ல் மக்கள் தொகை அதிகரித்துக் காணப்படுகிறது.
அது தொடர்ந்தால் என்ன ஆகும்? ஒரு குறிப்பிட்ட இன மக்களின் அளவு உயரும். மற்றொரு குறிப்பிட்ட இன மக்களின் அளவு குறைந்து கொண்டே வரும். இதுவும் பிரச்சினை தான். இன்னும் விளக்கமாக கீழே காணலாம்.
மக்கள்தொகை சற்றுக் குறைந்தால் நல்லது தானே?
மாசு குறையும், இடம் கிடைக்கும் என்று தானே நினைக்கிறோம். ஆனால் பிரச்சினை திணுசானது.
அது என்னவென்றால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே போவதால், புதிதாகக் குழந்தை பிறந்து மக்கள் தொகை அதிகரிக்கப் போவதில்லை.
அதேசமயம், அதன் எதிர்வினையாக வயதாகிப் போனவர்களின் எண்ணிக்கை இளம் வயதினரை விட அதிகரித்த வண்ணம் உயர்ந்து கொண்டே இருக்கும்.
குழந்தை பிறப்பது குறைவு, வயதானவர்களின் எண்ணிக்கை அதிகம்.
அப்படியே தொடரும்பட்சத்தில், இளம் இந்தியா என்று அழைக்கப்படும் நமது நாடு, முதியோர் இந்தியாவாக மாறியிருக்கும்.
ஆம் இன்றைய சூழலில் இந்தியாவில் இளம் வயதினர் அதிகம்.
2031-41 காலகட்டத்தில் குழந்தை பிறப்பு விகிதம் சுருங்கிய காரணத்தால் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் சுருங்கி 0.5 சதவீதமாகி இருக்கும்.
இதன் எதிர்விளைவு என்னவென்றால். 2011 ல் (0-19) வயதுடைய இளையோர் விகிதம் 41 சதவீதம், அது 2041 ல் 25 சதவீதமாகக் குறைந்து விடும்.
அதே போல் எதிர்விளைவாக, 2011 ல் 8.6 சதவீதமாக இருந்த முதியோர் ( 60 வயதுக்கு மேல்) 2041 ல் இரட்டிப்பாகும். அது மேலும் அதிகரித்துக்கொண்டே போகும்.
இதன் விளைவாக, இந்தியா அனுபவமிக்க , பக்குவமடைந்த இந்தியா ஆகலாம். ஆனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனால், இன்று சீனியர் சிட்டிசன் சலுகை வழங்குவது போல, நாளை யூத் சலுகை வழங்கும் காலம் வர நேரிடலாம். உழைக்க ஆட்கள் பற்றாக்குறை ஆகும். முதியோர்களை அவர்களே கவனித்துக் கொண்டால் தான் உண்டு.
இது மாதிரி ஒரு இக்கட்டான சிக்கல் உருவாகும்.
இதே போல, ஜப்பான், இத்தாலி என நாடு விகிதமாக அதன் மக்கள் தொகை எப்படி உயர்ந்து, 2100 ல் எப்படி சரியும் என்ற விளக்கங்களும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை சரிசெய்ய இங்கிலாந்து போன்ற நாடுகள் மீள்குடியேற்றம், பிற நாட்டு மக்களின் குடியேற்றம் போன்றவற்றை அனுமதிக்கிறது.
ஸ்வீடன் நாடு ஏற்கனவே இந்த விஷயத்தில் உஷாராகி நடவடிக்கைகளை மேற்கொண்டு குழந்தை பிறப்பு விகிதத்தை 1.7 ல் இருந்து 1.9 ஆக அதிகரித்து விட்டது.
இது எப்படி சாத்தியமானது என்றால், அந்த நாட்டில் குழந்தை பெறும் தம்பதியினருக்கு, அதாவது அப்பா மற்றும் அம்மாவுக்கு , இருவரும் வேலையில் இருக்கும் பட்சத்தில் ஓராண்டு விடுப்பும், குறைந்தபட்ச கணிசமான சம்பளமும் தருகின்றது.
தென் கொரியா நாட்டில் குழந்தை பெறும் ஒவ்வொரு தம்பதியினருக்கும் கிட்டதட்ட 62.5 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது.
வளர்ந்து வரும் நாகரீகம், பெண்கள் கல்வி கற்று, வேலைக்குச் செல்வதால் , அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்திக் கொண்ட காரணங்கள், மற்றும் பல வகையான மருத்துவ பிரச்சினைகள் ஆகியவை இந்த குழந்தை பிறப்பு விகிதம் சுருங்கிப் போனதற்கான காரணமாக முன்வைக்கப்படுகிறது.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் முடிந்து பல நாடுகளும் குழந்தை பிறப்பு விகித்த்தை அதிகப்படுத்த நடவடிக்கைகளில் ஈடுபடத் துவங்கி விட்டன.
இந்தியா என்ன செய்யக் காத்திருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
புள்ளி விவரங்கள், படங்கள் இணையத்தில் கிடைத்த வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகளிலிருந்து.
கட்டுரை உருவாக்கம், நினைவுகள்…
அன்புடன் நினைவுகள்.