கலவரமான கோவை உணவுத் திருவிழா!
கோவையில் சென்ற வார இறுதி நாட்களில் கொடிசியா வளாகத்தில் உணவுத்திருவிழா என்ற விளம்பரம் மிகவும் பிரபலமாக இணையத்தில் பரவி இருந்தது.
கிட்டதட்ட 499 உணவு வகைகளை வெறும் 799 ரூ கொடுத்தால் உண்டு மகிழலாம் என்றும், அது போக, பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இருக்கும் என்றும் மிகப் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்யப்பட்டது.
நாமும் கூட அந்த விளம்பரத்தைக் கண்டிருக்கக் கூடும்.
வெறும் 800 ரூபாயில் 499 உணவு வகைகளை உண்டு மகிழப்போகிறோம் என்ற ஆவலில் அலைமோதிய கூட்டத்தைக் கட்டுப்படுத்த இயலாமல், போதிய அளவுக்கு உணவு உற்பத்தி செய்யப்படாமல் , தள்ளு முள்ளும் சண்டையும் ஏற்பட்ட காணொளிகளை நேற்று முதலே இணையத்தில் காண இயல்கிறது.
ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் ஏற்பாட்டாளர்கள், கணக்கு வழக்கு இல்லாமல் நுழைவுச்சீட்டுகளை விற்பனை செய்து விட்டு, வந்த மக்கள் என்ன செய்தால் எனக்கென்ன என்று கவலை இல்லாமல் இருப்பது ஏமாற்று வேலை.
இங்கே அதுதான் நடந்திருக்கிறது.
இத்தனை மக்கள் நுழைவுக்கட்டணம் செலுத்தியிருக்கிறார்கள், அப்படியென்றால் எவ்வளவு உணவு தயாரிக்கப்பட வேண்டும், எந்த உணவை மக்கள் பிரதானமாக விரும்புவார்கள் என்பதை யூகித்து அந்த உணவு வகைகளின் அளவை அதிகரித்திருக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட உணவுக்கான கவுண்ட்டர்களை அதிகரித்திருக்க வேண்டும்.
கூட்டம் அளவுக்கதிகமாக இருந்தபட்சத்தில் நேர ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி கூட்டத்தைப் பிரித்து நிர்வகித்திருக்கலாம்.
இப்படி எதையுமே செய்யாமல் ஆட்டுமந்தையை அடைத்தது போல, கொடிசியா வளாகத்தினுள் எத்தனை பேர் நிற்க முடியுமோ, அவ்வளவு மக்களை அடைத்து விட்டு, உணவு கிடைக்காமல் கலவரத்தை உண்டு பண்ணியிருக்கிறார்கள்.
இதில் நிர்வாகத்தை மட்டும் குறைகூறி முடித்து விட இயலாது.
பொதுமக்களும் ஒரு விஷயத்தில் தங்கள் பணத்தை செலவு செய்யும் முன்பு சிறிது முன்யோசனையுடன் செய்வது நல்லது.
ஒரு தலைக்கு 800 ரூபாய் வீதம் ஒரு குடும்பத்திற்கு 4 பேர் எனில் 3200 ரூபாய். அந்த 3200 ரூபாயில் சமையல் செய்து சாப்பிட கிட்டதட்ட ஒரு மாதத்திற்கான (வாரம் ஒரு முறை கணக்கில்) அசைவத்தை (மீன்,சிக்கன், மட்டன்) என வாங்கி விடலாம்.
சரி எல்லா நேரமும் கணக்குப் பார்க்க இயலுமா?
ஒரு நாள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக உண்டு வரலாம் என்று முடிவு செய்திருந்தால் கூட ஏதாவது ஒரு நல்ல உணவகத்தில் முறையாக அமர்ந்து உணவருந்தச் சென்றிருந்தால் இதே பணத்தில் திருப்தியாக நிம்மதியாக உண்டு வந்திருக்கலாம்.
இப்படி புதிதாக ஒரு அறிக்கையோ, விளம்பரமோ வரும்போது அதை முன்பின் ஆராயாமல் அனுபவமில்லாமல் இப்படிப் போய் தலையைக் கொடுத்து விட்டு தத்தளிப்பதும் நம்முடைய தவறு தான்.
இனியாவது சிந்தித்து செயல்படலாமே?
அன்புடன் நினைவுகள்.